புயல் நாள் வண்ணம் 2

குழாய் மூடிய பின்னும் சிறு அலைவு காணும் நீர்ப்பரப்புப் போல் ஆங்காங்கே தேங்கி நின்ற முற்ற ஏற்ற இறக்கத்திலிருந்த நீர்த்தேக்கங்கள், கலைந்து கலைந்து மீளும் பசிய மர வரைபு ஓவியங்களைப் பிரதிபலிக்க, காலையின் சாலையில்/சாயலில் அவள் கால் பதித்தாள்.

நின்ற நிலையில் நிதானமாய்த் தன் பார்வை வலையை விசிறிக் கொண்டிருந்தாள். முந்தைய நாளிரவு கடுங்காற்றிலும் மழை நனைப்பிலும் நடுங்கிச் சற்று சுதாரித்தபடி முற்றத்து மரங்கள் சிலிர்த்தன.

தரையெங்கும் பசிய இலை தழைகள் விசிறி விதைக்கப் பட்டிருந்தன.

குறுக்குமறுக்காக இரு பப்பாசி மரங்கள் வீழ்ந்து, நெடுந்தண்டு சற்று வெடித்துப் பிளந்த நிலையில் தலைவிரி கோலமாய் சாய்திருந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் பப்பாசிக் காய்கள் பெரிதும் சிறிதுமாகச் சிதறியிருந்தன.

முற்றிய காய்களிரண்டு விழுந்து வெடித்துச் சிதறிய வேகத்தில் சமச்சீரற்றுப் பிரிந்து, வெண் பளிங்குக் கற்களாகப் பரவி தன் வெண்பற்களை நீர்த்துளி கொண்டு மினுமினுத்தன.

ஓலையால் வேய்ந்த வீட்டின் கூரை நீரூறிப் பாரந் தாளாமல் படிந்து தலை தாழ்ந்திருந்தது.

அவள் கால்கள் மெல்ல அருகிருந்த ‘கொட்டு வீடு‘ நோக்கி நகர்ந்தன.

நெல் மூடைகளை அடுக்கி வைப்பதற்காக மரத்தினால் உருவாக்கப்பட்ட மேற் தளமும் கூரையும் சீமெந்து வீடமைப்புடைய கீழ்த் தளமும் உள்ளது அக் கொட்டு வீடு.

கீழ்த் தளத்தில் நெல்மணிகள் பரவப்பட்டு உலர்ந்த பின் அவை மூடைகளாக்கப்பட்டு மேற் தளத்தில் அடுக்கி சேமிக்கப்படும்.
(இப்போது நினைவில் அவை மேற்கத்தேய குதிரை லாயம்களை நினைவிருத்துகிறது.)

கொட்டு வீட்டின் சுற்றுப்புறம் நெல் வாசனையும் வைக்கோல் தழையின் மணத்தையும் உணர்த்திச் சுணைக்கச் செய்தது.

கீழ்த்தளதில் நெல் மூடையாக்கப்பட்டதும் அது அவர்களுடைய விளையாட்டு மைதானமாகிவிடும். ஒளிந்து விளையாடும் உலகம் அது!

மழையில் ஊறி கொட்டு வீட்டின் மேற்றள மரப் புறம் கருமை பூண்டிருந்தது. நல்ல காலம் அவற்றின் உறுதியினால் கடும் மழையிலும் காற்றிலும் கூட அசைவற்று நின்றிருந்தது.

கால்கள் வீட்டின் பின்னோக்கி மீண்டும் நகர…

அருகே…

செழித்துச் சடைத்து கருமை சற்றுப் பூண்ட செம்பருத்தி மரங்களின் அணைப்பில் நடுவே நின்றிருந்தது வட்ட முகப்புடைய மூன்றடி உயரமான கிணறு. இரு பெருந் தூண்கள் அதனைப் பக்கம் தாங்கி நின்றது. மேற்புறக் கப்பி மட்டும் இருந்தது ; வாளியும் கயிறும் முடிச்சு தப்பி கிணற்றின் பாசி படர்ந்த செவ்வக சீமெந்துப் தளத்தில் சரிந்து கிடந்தன.

சரேலென அடித்த குளிர் காற்றில் உடல் சில்லிட கிணற்றுக் கட்டின் உள் தலை நீட்டிப் பார்த்தாள். நீர் மட்டம் கைதொடுந் தூரம் வரை நிறைந்து விட்டிருந்தது.

கப்பல் செய்து விளையாடலாம் என நினைத்துக் குதுகலித்தது அவள் மனம்!

தொடரும்…



நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (4-Jun-24, 6:22 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 27

மேலே