அன்பிற்கும் உண்டோ
"அன்பிற்கும் உண்டோ"
செலவு செய்யவெனவே
சம்பாதிக்கப்படும் பணம்
சேமிப்பின் உண்டியலுக்கும்
சில நாள் சென்று வரும்..
அந்த இடைவெளியில்
தேவைப்பட்டதாய் தோன்றிய அனைத்தும்
தேவைப்படாததாய் போயிருக்கும் அம்மாவிற்கு..
மாற்ற வேண்டிய கிழிந்த சட்டை
வேறு வண்ணத்தை இடையில்
ஜோடி சேர்த்திருக்கும் அப்பாவிற்கு..
உடைந்த சைக்கிள் அப்படியே கிடக்க
நடராஜா பயணம் பழகிப்போயிருக்கும் அண்ணாவிற்கு..
வெகு நாளாய் அக்கா அடம்பிடித்துக் கேட்ட
இருநூறு ரூபாய் சேலை கூட
மனதை விட்டு போயிருக்கும் அக்காவிற்கு..
ஆனால் மறக்காமல் செண்பகக்குட்டிக்கு மட்டும்
டெடி பியர் பொம்மையாய் மாறியிருக்கும்
அன்புக் குடும்பத்தின் ஐந்து மாத சேமிப்பு