இழப்பின் வலி

"இழப்பின் வலி"

தளர்ந்திருந்தது தேகம்..
ஓடி மறைந்திருந்த‌ இருபத்தாறு வருடமும்
ஒரு நொடியாய் அவன் கண்ணுக்குள் வந்து போனது..
ஒரு சொல் வீட்டில் யாரோ சொல்ல‌
அதனை பொறுக்க முடியாமல் ஓடியவன் தான்.
ராணுவத்தில் இருபத்தாறு ஆண்டு பணியாற்றிவிட்டு
ஒற்றை சூட்கேஸுடனும்
உடம்பு வாங்கிய இரண்டு குண்டடித் தழும்புகளுடனும்
ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான்..
பத்து வருடங்களுக்கு முன்னே
அந்த ஊரில் ஏற்பட்ட கலவரத்தால்
ஊரே காலியாகி எங்கெங்கோ சென்று விட்டார்கள்
என்பதை அறிந்தவன் தான்..
அவன் வருவானென‌ ஆரத்தி எடுக்க காத்திருந்தது
அவன் வைத்து இன்று மொட்டையாக நிற்குமந்த ஒற்றை மரம்..
அங்கு அவனது பால்யம்
தன் சிறுவயது நண்பர்களுடன் ஓடிப்பிடித்து
விளையாடிக் கொண்டிருந்ததை அவன் பார்த்தான்
எனச் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்..!?

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (12-Jun-24, 6:36 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : izhappin vali
பார்வை : 45

மேலே