மந்திரவாதி

நான் வாசித்த ரஷிய சிறுகதை ஒன்று.
எழுதியவர் யூஜேன் சிரிகாப், (அவரை பற்றிய சரியான விவரம் கிட்டவில்லை அனேகமாக “டால்ஸ்டாய்”(1828-1910) காலத்தை சேர்ந்தவராய் இருக்க வேண்டும்.
தமிழாக்கம் எம்.எல்.சபரிராஜன், அனிதா பதிப்பகம் சென்னை, விற்பனை அனுமதி சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை-51, வருடம் 2006

மந்திரவாதி
நகரம் முழுவதும் குழப்பமாக இருந்தது, மக்கள் அனைவரின் முகங்களிலும் கலவரம் தெரிந்தது.
நகரம் முழுக்கவும் சிப்பாய்களின் ஊர்வலமும், குதிரை வீரர்களின் உலாத்தலும் அதிகமாக இருந்தன. அவ்வப்பொழுது சாட்டையை வீசியபடி குதிரையில் வந்து நடந்து செல்வோரை விரட்டி கொண்டும் இருந்தனர்.
“தொழிலாளர்கள் வேலை நிறுத்தமாம்” அதனால் இத்தனை குழப்பம். திடீர் திடீரென மனிதர்களின் ஊர்வலங்கள் சென்றன. ஊர்வலத்தில் இருந்தவர்கள் ஏழ்மை நிலையில் இருந்தனர். ஊர்வலத்தில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தாலும்,ஒவ்வொருவர்களின் கண்களில் பயம் தெரிந்து கொண்டே இருந்தது.
எங்கே குதிரை வீரர்கள் சாட்டையுடன் வந்து விடுவார்களோ என்னும் பயம்தான்.
‘செர்ஜ்’ என்னும் சிறுவன் அவன் அம்மாவின் கையை பிடித்தபடி அந்த நகரில் நடந்து கொண்டிருக்கிறான். அப்பொழுது தொழிலாளர்களின் ஊர்வலம் ஒன்று வருகிறது, அதே நேரத்தில் எதிர் திசையில் இருந்து குதிரையில் சிப்பாய்களின் கூட்டம் ஒன்று வேகமாக வருவதை கண்டதும் இந்த கூட்டம் சிதறி மறைவிடங்களை நோக்கி ஓடுகிறது.
‘செர்ஜ்’ அம்மாவிடம் “அவர்கள் ஏன் ஓடுகிறார்கள்?
அம்மா ‘போலீசுகிட்ட’ இருந்து தப்பிக்கறதுக்கு ஓடுறாங்க
போலீசுகிட்ட இருந்தா? ஏன் அவங்க ரோட்டுல நடக்க கூடாதா?
ஆமா,.. என்னை தொந்தரவு பண்ணாதே சீக்கிரம் நட…
ஏன் அவங்க நடக்க கூடாது? அவங்க கெட்டவங்களாம்மா?
எனக்கு தெரியாது, நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க, அவங்க வேலை செய்ய மாட்டேங்கிறாங்க
சோம்பேறிகளாம்மா?
ஆமா, சீக்கிரம் வா
அசிங்கமானவங்களாம்மா?
பதில் சொல்லுமுன் அங்கு வந்த குதிரை வீரன் ஒருவன் சாட்டையை சொடுக்கினான், மற்றொருவன் குழல் எடுத்து ஊதினான்.
‘செர்ஜீன்’ அம்மா அவனை கையை பிடித்துக்கொண்டு அங்கிருந்து அலறி அடித்து ஓடினாள், அருகே போன வாடகை வண்டியை பிடித்து ஏறிக்கொண்டாள்
சீக்கீரம் சீக்கிரம் ஓட்டு
பயப்படாதீங்கம்மா அவங்க நம்மளை ஒண்ணும் செய்ய மாட்டாங்க,
வண்டி கொஞ்ச தூரம் சென்ற பின்னால்தான் இவளுக்கு நிம்மதி வந்தது.
இருபது கோபெக்தான் கொடுப்பேன்
எனக்கு கட்டாது அம்மா
அப்படீன்னா நாங்க இறங்கிக்குவோம், டிராம் வண்டியில போயிக்குவோம்
நல்லது அம்மா ஆனா டிராம் ஓடாதே அம்மா
யார் சொன்னது?
‘டிராம்’ தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்யபோறாங்க
எரிச்சலாய் அவள் சொன்னாள், எதுக்காக இத்தனை ஆர்ப்பாட்டம்? வேலை செய்ய இஷ்டமில்லையின்னா, வெளிய போக வேண்டியதுதானே, பசி எடுத்தா தானா வரப்போறாங்க.
வண்டிக்காரன் அவளை பார்த்து ‘பட்டினி’ போட்டு மிருகத்தையும் மனுசனையும் பழக்கிடலாம், ஆனா ‘ஏழை மனுசனை’ இப்படி கஷ்டப்படுத்தறது பாவம் அம்மா.
‘செர்ஜ்’ வீடு வந்ததும் தங்கையிடம் இரகசியமாய் சென்றவன் இன்னைக்கு சில தொழிலாளிங்களை பார்த்தேன்
அவங்க எப்படி இருந்தாங்க?
அவங்க குடியானவங்க மாதிரிதான் இருந்தாங்க.
எல்லா இடங்களிலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், அதனால் வீட்டில் தொழிலாளர்களை பற்றி பல்வேறு பேச்சுக்கள். ‘செர்ஜிக்கு’ அவர்களை நல்லவர்களா கெட்டவர்களா என்பது பற்றி தீர்மானிக்க முடியவில்லை .
‘டிராம்’ நின்று விட்டது, பத்திரிக்கைகள் வரவில்லை, ரயிலும் இரண்டு நாட்களில் நின்று விட்டது. தெருக்கள் இருளில் மூழ்கின. செய்தி போக்கு வரத்தும் அடியோடு நிற்கும் நிலை.
‘செர்ஜின்’ தந்தை வீட்டிற்கு வந்திருக்க வேண்டும், ஆனால் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் வீட்டுக்கு வரமுடியவில்லை. செஜின் தாய்க்கு கோபம் வந்தது அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தொழிலாளர்களை பழித்தார்கள்.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாயிற்று, தெருவெங்கும் இருளும், குப்பை கூளங்களாகவும் காணப்பட்டது. யாரும் பணி செய்யவில்லை, எல்லா இடங்களிலும் சிப்பாய்களின் நடமாட்டம் மட்டும்தான்.
செர்ஜிக்கு பயமாய் இருந்தது, அம்மாவின் அருகில் சென்றான், அம்மா எனக்கு பயமாயிருக்கிறது
என்னடா பயம்?
அந்த மந்திரவாதிகளை கண்டால் பயமாயிருக்கிறது.
எந்த மந்திரவாதிகள்?
அதுதான் வேலை நிறுத்தம் செய்யறாங்களே
சரி இங்க வா, அம்மாவின் அணைப்பில் படுத்து கொண்டாலும், அம்மா சீக்கிரம் தூங்கி விட்டாள், இவனுக்கு தூக்கம் வரவில்லை, எழுந்து உட்கார்ந்து கொண்டவன் தொழிலாளர்கள் யார்? அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா? சிந்தனைக்குள் மூழ்கி விட்டான்.
இரண்டாவது நாள் ‘செர்ஜுக்கு’ கொடுக்கப்பட்ட ‘ரொட்டி’ அவனுக்கு பிடிக்கவில்லை, சமையல்காரியை கூப்பிட்டு எனக்கு வேறு ரொட்டி கொண்டு வா
சமையல்காரி இந்த ரொட்டியாவது உங்களுக்கு கிடைச்சது அதிர்ஷ்டம் என்றாள்.
‘செர்ஜ்’ சிணுங்கியபடி அம்மாவிடம் சென்று இந்த ரொட்டி வேண்டாம் என்றான்.
கண்ணே நல்ல ரொட்டி எங்கே வாங்கறது? எல்லா கடையும் மூடியாச்சு, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யறாங்களே
மீண்டும் அந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்..! தலையை சொறிந்தபடி இந்த ரொட்டியை நான் என்ன செய்யறது?
வேற வழியில்லை சாப்பிடு,
கவர்னரை விட்டு அவங்களை வேலை செய்ய வைக்கலாமா?
முடியாது அவங்க யாருக்கும் பயப்படமாட்டாங்க
சிறுவனுக்கு திகைப்பாய் இருந்தது. யாருக்கும் பயப்படாத தொழிலாளர்கள் அன்று போலீசாரை கண்டு பயந்து ஓடியது ஏன்? அவர்கள் ‘டிராம்’ வண்டியில் இருந்து பத்திரிக்கை, கடைகள், எதுவுமே வேலை செய்யாம பண்ண முடிகிறது, அப்படீன்னா அவங்க ‘மாயகுல்லா’ போட்ட மந்திரவாதிகளா?
கொஞ்சம் கொஞ்சமாக வசதிபடைத்த சுகவாசிகளின் வீடுகளிலும் தொழிலாள்ரகளின் வேலை நிறுத்த பாதிப்பு உள்ளே புகுந்து விட்டது. எங்கும் எதுவும் கிடைக்கவில்லை, அவர்கள் தங்களுடைய வசதிகளை குறைத்து தடுமாறினார்கள்
வீட்டில் விளக்கு எரிவது நின்று விட்டது, மின்சார தொழிற்சாலையிலும் வேலை நிறுத்தமாம், வேலைக்காரி வந்து நாளைக்கு தண்ணீரும் வராதாம், இறைச்சியும் கிடைக்காதாம், அவங்களும் வேலை நிறுத்தம் செய்யறாங்களாம்
‘செர்ஜ்’ பயந்து விட்டான் அவனுக்கு தொழிலாளி என்பவன் ரொம்ப பெரிய மனிதனாக தோன்றினான், அவன் ஒரு மந்திரவாதி, அலாவுதீன் வைத்திருந்த ‘விளக்கு’ போல அவனிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த மந்திரவாதிக்கு யாரிடமும் பயம் கிடையாது. அவன் நினைத்தால் எல்லாம் சரியாகிவிடும்.
‘செர்ஜ்’ நினைத்தது போலவே இரண்டு வாரங்களில் எல்லாம் சரியானது. ஒரே நாளில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன,விளக்கு எரிந்தது, பத்திரிக்கை வந்தது,தபால் நிலையங்கள் வேலை செய்தன. தண்ணீரும் ரொட்டியும் கிடைத்தது, அப்பாவும் வந்து விட்டார்.
தெருவெங்கும் அந்த மந்திரவாதிகள் கொடிகளை ஏந்தி மகிழ்ச்சியாய் ஆடி பாடி ஊர்வலம் போவதை பார்த்தான். இப்பொழுது அவர்களை சிப்பாய்கள் விரட்டவில்லை, அவர்களும் பயந்து ஓடவில்லை.
இது நடந்து ஒரு சில மாதங்கள் ஓடியிருந்தது. ‘செர்ஜ்’ வீட்டில் தனியாக இருக்க பயந்து சமையலறைக்குள் நுழைந்தான். புதிய சமையல்காரியை பார்க்கலாம் என்று நினைத்தான் ஆனால் அங்கிருந்த வேலைக்காரி அவனை தடுத்தாள்.
நான் தனியா இருக்கேன், அதனால அங்க போறேன்
அங்க என்ன இருக்கும்? வேலைக்காரி சொன்னாள்
அங்க பேச்சு குரல் கேட்குதே
அங்க அவ புருசன் வந்திருக்கான்
அப்படியா?
ஏன் ஆச்சர்யப்படுகிறீர்கள் எசமான், அவன் சாதாரண தொழிலாளி
ஓ மந்திரவாதி மனிதனா அப்படீன்னா நான் அவனை பார்க்கணும், வேலைக்காரி அங்கிருந்து நகரவும், இவன் மெல்ல சமையலறைக்குள் எட்டி பார்க்கிறான். நேரடியாக அந்த மந்திரவாதியை பார்க்க அவனுக்கு துணிவில்லை. அங்கு சமையல்காரியின் புருசன் மேசையின் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறான், யாராவது பிடுங்கி கொள்வார்களோ என்னும் பயத்தில் வேக வேகமாய் சாப்பிட்டு கொண்டிருக்கிறான்.
மந்திரவாதி எங்கே? மெல்ல மெல்ல உள்ளே வந்தான் செர்ஜ். அவனை கண்டதும் சாப்பிட்டு கொண்டிருந்தவன் கரண்டி கீழே விழ வேகமாய் எழுந்தான்.
சமையல்காரி ஒன்றும் இல்லை, நீங்கள் சாப்பிடுங்கள், சின்ன எசமான் ஒன்றும் சொல்லமாட்டார், என்றாள் தன் புருசனிடம்.
என்ன என்ன? கேட்டான் ‘செர்ஜ்’
ஒன்றுமில்லை அம்மாவிடம் சொல்லாதீர்கள் எசமான்
சரி
அவர் ரொம்ப பசியாய் இருக்கிறார்
இவர் யார்?
என் புருசன்
உன் புருசனா? ஒருவேளை இவன் மந்திரவாதியாக இருந்து தன் உருவத்தை மாற்றி கொண்டிருப்பானோ? நீ மந்திரவாதிதானே, எனக்கு தெரியும் என்றான்.
யார் மந்திரவாதி, பணிவாய் கேட்டான் சாப்பிட்டு கொண்டிருந்தவன்.
நீதான் நீயேதான்
நான் ‘தொழிலாளி’ எசமான், வேலை கிடைக்காமல் அலைகிறேன்.
இல்லை எனக்கு தெரியும், நீ மந்திரவாதிதான், நினைத்ததை எல்லாம் செய்ய முடியும், டிராமை நிறுத்தமுடியும், தண்ணிய நிறுத்தமுடியும், சாப்பிட ரொட்டி கிடைக்காம பண்ண முடியும், எனக்கு எவ்வளவு கஷ்டமாய் இருந்துச்சு தெரியுமா?
எனக்கு ஒண்ணுமே தெரியாது எசமான், நான் வேணா போயிடுறேன்
உன்னை பார்த்தா பயங்கரமா இல்லையே, நீ இப்படி இருக்கறியே..!
எனக்கு சாப்பாட்டுக்கு வழியில்லாததால கேலி பண்ணறீங்க எசமான், கேலி செய்யறது பாவம்.
‘செர்ஜ்’ எதற்கும் அந்த மந்திரவாதி ஏதாவது செய்து விட்டால் ஓடி விடலாம் என்னும் எண்ணத்தில் சமையலறையின் வாசலிலேயே போய் நின்று கொண்டான்.
ஆனால் அவன் எதிர்பார்த்தது ஒன்றும் நடக்கவில்லை, அழுகை சத்தம் மட்டுமே கேட்டது. திரும்பி பார்க்க சாப்பிட்டு கொண்டிருந்தவன் அழுது கொண்டிருந்தான்.
நீ மந்திரவாதி, அப்படி இருந்தும் அழுகிறாய், உம் உனக்கு வேண்டும் நன்றாக, டிராமை நிறுத்துனாய், ரயிலை நிறுத்துனாய், மின்சாரத்தை நிறுத்துனாய், ரொட்டி கிடைக்காமல் பண்ணினாய், கடவுள் உன்னை தண்டிச்சுட்டாரு.
‘செர்ஜுக்கு’ கர்வம் தலைக்கேற, வெளியே வந்தவன் எதிரில் வந்த வேலைக்காரியிடம் சொன்னான் எனக்கு இப்ப பயமே இல்லை, அதுவும் மந்திரவாதிகளை பார்த்து பயமே இல்லை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Jul-24, 2:04 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 78

மேலே