வருது வருது, போயிடிச்சு போயிடிச்சு தீபாவளி
மனைவி: நமக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகிறது. ஆனால் தலைதீபாவளி மாதிரி இப்போ எல்லாம் தீபாவளி இல்லை.
கணவன்: ஆமாம். தலை தீபாவளிக்கு உன் அம்மா அருமையா சமையல் செஞ்சு போட்டாங்க.அதுக்கப்புறம் நீ பண்ற சமயலைத்தானே சாப்பிடவேண்டியிருக்கு.
மனைவி: ???
&&&
மனைவி: உங்களுக்கு இந்த மாசம் போனஸ் கெடச்சிருக்கு. நல்ல பட்டு புடவை ஒசந்த விலைல ஒண்ணு எடுத்துக்கப்போறேன்.
கணவன்: பட்டுப்பூச்சிகளை அழிச்சி தயாரிக்கறதுதானே பட்டுப்புடவை. அதை வாங்கர்துக்கு பதிலா, உன் பேரை அத்திப்பட்டு என்று மாத்திட்டா, நீ எந்த புடவை கட்டிண்டாலும், அது அத்திப்பூத்த பட்டு புடவை மாதிரி இருக்கும்.
மனைவி: ??
&&&
கணவன்: இன்னும் ரெண்டு நாள்ல தீபாவளி. வீட்டுல என்ன ஸ்வீட் பண்ணப்போறே?
மனைவி: கிருஷ்ணா மைசூர் பாகு, கௌரி ஷங்கர் சோன்பப்படி, இருட்டுக்கடை அல்லவா, கிராண்ட் ஸ்வீட்ஸ் ரவா லட்டு, என் பாட்டி அவங்க வீட்டில் கிளறி கொடுத்த தீபாவளி மருந்து.
கணவன்: ???
&&&
மனைவி: ஏங்க, எனக்கு ஒண்ணுமே புரியல, அஞ்சு கம்பி மத்தாப்பு டப்பா வாங்கிண்டு வாங்கண்ணு சொன்னா, அம்பது டப்பா வாங்கியிருக்கீங்க. என்ன, கம்பில மூளை சிக்கிக்கொண்டுவிட்டதா?
மாமா: அதை ஏம்மா கேக்கறே, எல்லா பட்டாசும் வாங்கின உடனே கடைக்காரன் " சார், இந்த தடவை ஒரு ஆபர் இருக்கு. அம்பது கம்பிமத்தாப்பு பொட்டிகள் வாங்கினா, அஞ்சு ரோல்கேப்பு பெட்டி இலவசம்". உனக்கு ரோல்கேப்புன்னா, ரொம்ப பிடிக்குமேன்னு டு, அம்பது கம்பி மத்தாப்பு பொட்டி வாங்கிட்டேன்.
மனைவி: ???
&&&
கணவர்: மாப்பிள்ளை ஏன் உம்முன்னு மூஞ்சை வச்சிண்டிருக்கார்னு தெரியல.
மனைவி: புது மாதிரியா தலை தீபாவளி ஊட்டில வச்சிக்கலாமா என்று அவர் உங்களிடம் கேட்டபோது "மாப்பிள்ளை, ஊட்டில தீபாவளி வச்சுண்டா ரெண்டு பிரச்சினைகள். ஒண்ணு, சில்லிப்பு ஜாஸ்தி என்பதால், தண்ணீர் லேசில் சுடாது, தலைக்கு குளிக்க முடியாது. ரெண்டாவது, அந்த குளிர்ல பட்டாசு எல்லாம் நமுத்து போய்டும். அதுக்கு பதில், நம்ம வீட்டிலேயே தலை தீபாவளி வச்சிண்டு , டிவில 'ஊட்டி வரை உறவு' படம் பார்த்துக்கலாம் அப்படீன்னு சொல்லிடீங்களாம் நீங்க.
கணவன்: ஆமாம். நீ எதுக்கு மூஞ்சியை உம்முன்னு வச்சிண்டு இருக்க?
மனைவி: மாப்பிள்ளைக்கு அந்த யோசனையை கொடுத்ததே நான்தான்.
கணவர்:???
&&&
மனைவி: நம்ம அபார்ட்மெண்டுல வேலை செய்யற நாலு செக்யூரிட்டி ஆளுங்க இன்னிக்கி என்னிடம் இன்டெர்க்காம்ல பேசினாங்க.
கணவர்: தீபாவளி பட்டாசு வெடிக்க, ஏதாவது பாதுகாப்பு ரூல்ஸ் சொன்னார்களா?
மனைவி: அந்த சீனெல்லாம் ஒன்றுமில்லை. "எப்பவும் நீங்க தர வறண்ட மைசூர் பாகு, சர்க்கரை கம்மிபோட்ட லட்டு, உப்பும் எண்ணெயும் கம்மியா இருக்கிற மிஸ்ர் வேண்டாம். அதுக்குபதில கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பா , அடையார் ஆனந்த பவன் அல்வா ஆளுக்கு ஒரு கிலோ, அதே போல கிராண்ட் ஸ்வீட்ஸ் மிஸ்ர், கௌரி ஷங்கர் தேன்குழல் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கிலோ மட்டும் வாங்கி கொடுத்துடுங்க"ன்னு வேண்டுகோள் விடுத்தாங்க.
கணவர்: ???