தரகு

தரகு

அம்மையப்பனின் மனதுக்குள் பெரும் மகிழ்ச்சி இருந்தாலும் ஓரமாய் ஒரு பாரம் அவன் மனதை குடைந்து கொண்டுதான் இருந்தது. அதை வலுக்கட்டாயமாக உதாசீனப்படுத்தினான்.
கிட்டத்தட்ட இந்த தரகு வேலையில் அவனுக்கு கிடைத்தது இருபதாயிரம் ரூபாய். எந்த முதலீடும் போடாமல் வெறும் வாய் வார்த்தையும் இருவரையும் சந்திக்க வைத்ததும் தான் இவன் செய்த வேலை.
ஆனாலும் இந்த வேலைக்கு அச்சாரம் போட்டது அம்மையப்பனல்ல, அவனது நண்பன் ராஜேந்திரன்.
போன வாரம் இவனுக்கு எந்த தரகு வேலையும் கிடைக்காமல் காய்ந்து கிடந்தான். எப்படியும் மாதத்திற்கு ஒன்றிரண்டு தரகு வேலை கிடைத்தால் போதும் வீட்டு செலவுக்கு சரியாகி விடும். மனைவியும், இரண்டு குழந்தைகளையும் திருப்தி படுத்தி விடலாம்.
ஆனால் தேதி பதினைந்தாகிறது, இன்னும் ஒரு பார்ட்டி கூட வீடு வாடகைக்கு பார்க்க சொல்லியோ, அல்லது இடம் கேட்டோ இவனை அணுகவே இல்லை.
இப்படியே போனால் இந்த மாதம் செலவுக்கு என்ன செய்வது? மனதுக்குள் பெரும் திகில் வந்து உட்கார்ந்து கொண்டது.
அப்பொழுதுதான் அவன் சட்டை பையில் இருந்த செல்போன் அழைப்பு வந்தது. எடுத்து பார்க்க ராஜேந்திரன் அழைத்திருந்தான்.
சொல் நண்பா போனில் அவனுக்கு பதில் சொல்லவும், எனக்கு தெரிஞ்ச பார்ட்டி ஒண்ணு வீடு கிடைக்குமான்னு கேட்டு வந்துச்சு, நான் மெல்ல பேசி உன் கிட்ட அனுப்பி வைக்கிறேன். உன் தெருவுக்கு அடுத்து இருக்க முருகேசன் வீடு காலியிருக்கு பார்ட்டி இருந்தா சொல்லுன்னு கடைவீதியில பார்த்தப்ப சொல்லியிருந்தாரு.
உங்கிட்ட வர்ற ‘பார்ட்டிய’ முருகேசுகிட்ட கூட்டிட்டு போ, நான் அனுப்பி வச்சதா பேசி விட்டுடு, எல்லாம் நல்லபடியா முடியும்.
அப்பா..நண்பன் புண்ணியத்தூல ஒரு ‘பார்ட்டி’ கிடைச்சுது, இந்த மாசத்துக்கு ஒட்டிக்கலாம், உற்சாகமான அம்மையப்பன் எல்லாம் முடிஞ்சு எவ்வளவு கிடைச்சாலும் உனக்கு பாதி எனக்கு பாதி சரியா?
ராஜேந்திரன் சிரித்தபடி “முதல்ல முடி” சொல்லி விட்டு போனை அணைத்து விட்டான்.
இரண்டு மணி நேரத்துக்குள் இவனை கணவனும் மனிவியுமான சந்தித்தவர்கள் முருகேசு அனுப்பியதாக சொன்னார்கள். அவர்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு அடுத்த தெரு முருகேசுவின் வீட்டிற்கு சென்றான். முருகேசு ராஜேந்திரன் பெயர் சொல்லவும் வேறு பேச்சு பேசாமல் கையில் சாவியை கொடுத்து அருகில் இருந்த வீட்டை போய் பார்க்க சொன்னான்.
அம்மையப்பனுடன் வந்த தம்பதிகளுக்கு அந்த வீடு ரொம்ப பிடித்து விட்டது, உடனே முருகேசுவிடம் வந்து வாடகை எல்லாம் பேசி முன் பணமும் கொடுத்து விட்டு, அடுத்த வாரமே குடி வருவதாக சொல்லிவிட்டு இவனிடம் வந்தார்கள்.
முருகேசுவிடம் இவன் சொல்லி விட்டு அவர்களை அழைத்து இவனது இருப்பிடம் வந்தான். அவர்கள் அவனிடம் ரூபாய் பத்தாயிரத்தை தரகு பணமாக கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்கள். இவன் அதை வாங்கி கொண்டு முருகேசுவை பார்க்க சென்றான்.
முருகேசு அவனை பார்த்தவுடன் அவரும் ஒரு பத்தாயிரத்தை கையில் கொண்டு வந்து கொடுத்தார்.
இவ்வளவு பணம் கொடுப்பார் என்று இவன் எதிர்பார்க்கவில்லை. இரண்டு மணி நேரத்துக்குள் இருபதாயிரம் ரூபாய் கைக்கு வந்து விட்டது.
அதுவரை அமைதியாயிருந்த அம்மையப்பனின் மனம் சட்டென மாறிப்போனது, ஆமா நாம எதுக்கு ராஜேந்திரனுக்கு பணம் கொடுக்கணும்? நான் தானே இரண்டு பேரையும் பார்த்த்து பேச வச்சது, கூடவே இருந்தது, அப்புறம் அவன் எதுவுமே செய்யாம அவனுக்கு எதுக்கு பாதி பணம் கொடுக்கணும்?
இந்த எண்ணம் அவன் மனதுக்குள் ஓரமாய் எழுந்து கிடைத்த இருபதாயிரத்தை பார்த்து அனுபவிக்க முடியாமல் செய்தது. வீட்டிற்குள் கிடைத்த இருபதாயிரத்தை ஒரு பெட்டியில் வைத்து விட்டு வெளியே கிளம்பி விட்டான்.
வெளியில் அங்கும் இங்குமாக சுற்றி விட்டு “ராஜேந்திரன்” பாதி பணம் வாங்க வீட்டுக்கு வந்திருப்பானோ? என்னும் பயத்துடனே வீட்டுக்கு வந்தான். வரும்போதே அவன் மனைவி வாசலில் நின்று கொண்டிருப்பதை பார்த்தான்.
அருகில் வந்தவனிடம் ஏங்க எங்க போனீங்க? ராஜேந்திரன் அண்ணம் வந்திருந்துச்சு, உங்களுக்கு போன் அடிச்சு அடிச்சு பார்த்துச்சாம், நீங்க எடுக்கவே இல்லையாம்.
ராஜேந்திரன் வந்திருந்தான் என்று மனைவி சொல்லும்போதே இவனுக்கு நெஞ்சுக்குள் திடுக்கென்றது. எங்காவது அவன் போன் செய்து விடுவானோ என்னும் பயத்தில் போனை “சுவிட்ச் ஆப்” வேறு செய்திருந்தான். போச்சா இவ உளரியிருப்பா அவன் கிட்ட, இந்த மாதிரி பார்ட்டி வந்துச்சு, எங்க வூட்டுக்காரரு கூட்டிட்டு போய் எல்லாம் காமிச்சுட்டு வந்துட்டாரு என்று அவள் மேல் மனதுக்குள் கோபபட்டவன் அதை வெளிகாட்டாமல் “ம்ம்’’ செருமலுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.
இந்தாங்க கொஞ்சம் திரும்புங்க, அவன் திரும்ப அண்ணன் இந்த பணத்தை உங்க கிட்ட கொடுக்கறதுக்குத்தான் காத்திருந்துச்சு, போன மாசம் ஒரு பார்ட்டிக்கு ஒரு இடத்தை பேசி முடிச்சப்ப நீங்க கூட இருந்தீங்கலாம். அந்த பார்ட்டி இன்னைக்குத்தான் பணம் கொடுத்துச்சாம், அதுல இன்னொருத்தருக்கும், உங்களுக்கும், அவருக்கும், சமமா பிரிச்சு பதினைஞ்சாயிரத்தை என் கிட்ட கொடுத்துட்டு போனாரு. வந்தா போன் பண்ண சொன்னாரு, பணத்தை அவன் கையில் கொடுக்க போனவளை தடுத்து நீயே இந்த மாச செலவுக்கு வச்சுக்கோ சொன்னவனின் மனதுக்குள் ஒரமாய் அவனை குறுகுறுத்து கொண்டிருந்த குடைச்சல் சுத்தமாய் மறைந்து போய், பெட்டிக்குள் வைத்திருந்த பணத்தில் பத்தாயிரத்தை ராஜேந்திரனிடம் கொடுப்பதற்காக உள்ளே சென்று கொண்டிருந்தான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (13-Jan-25, 12:12 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 10

மேலே