பாட்டு பிறந்த கதை

பாட்டு பிறந்த கதை


என் பெயர் சந்துரு நான் இந்தியாவில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து என் அப்பா அம்மாவுடன் வாழ்ந்து வந்தேன். வீடு அதன் பராமரிப்பு அதற்கு வேண்டிய செலவுகள் என்ற எதையும் அறியாமல் அம்மா கேட்டால் பணம் கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். அப்பா என்னிடம் மிக அன்புடன் இருப்பார் அவரும் என்னை எதுவும் கேட்காமல் நான் என்ன கேட்டாலும் அதை வாங்கிக் கொடுத்து விடுவார். இவ்வாறு நாட்கள் சென்று கொண்டிருக்க என் பெற்றோர்கள் எனக்குத் திருமணம் செய்ய பெண் பார்க்க ஆரம்பித்தனர். அவர்கள் எதிர்பார்த்த படி மனதிற்கு பிடித்த பண்பு நிறைந்த ஒரு பெண் கிடைக்க என் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.
அவள் ஒரு குடும்பத் தலைவியாக எங்கள் எல்லோருக்கும் அன்புடன் சேவை செய்து வீட்டையும் பராமரிக்க ஆரம்பித்தாள்.
அவள் வந்த வேளை எனக்கு பதவி உயர்வும் வந்தது. என்னை கம்பெனி ஊர் ஊராக அனுப்பி எல்லா கிளைகளுக்கும் அதிகாரியாக்கியது. நானும் என் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்ததற்கு அடையாளமாக எனக்கு அழகான ஒரு மகள் பிறந்தாள். அவளிடம் நாங்கள் இருவரும் எங்கள் அன்பை முழுதும் அளித்து வளர்த்தோம். குழந்தை பிறந்த அதிர்ஷ்டம் என்னை வெளிநாட்டிற்கு மாற்றினார்கள். அமெரிக்காவில் உள்ள தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக சென்றேன். அங்கு சென்றபின் அங்குள்ளவர்களிடம் பழகி அந்த நாட்டின் தனித் தன்மையை அறிந்தேன். என் குழந்தைக்கும் மனைவிக்கும் அந்த நாட்டில் வாழ்வது பிடித்துவிட்டது.
இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து நானும் சந்தோஷமடைந்தேன். நாங்கள் இருந்த அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் நிறைய இந்திய குடும்பங்கள் இருந்தன.
அதனால் எங்களுக்கு நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள். நான் என் மனைவி என் மகள் மூவரும் அமெரிக்காவில் குடியேறி இருபது வருடங்கள் உருண்டோடிவிட்டது. .ஒவ்வொரு வாரக் கடைசியிலும் இந்தியாவில் வாழும் குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேசி அவர்கள் கூறும் செய்திகளை அறிந்தவுடன் நாம் அவர்களுடன் இல்லாமல் இந்தியாவை விட்டு இங்கு வந்துள்ளோமே என்ற ஏக்கம் வரும். அந்த வேளையில் சிறிது மனக் கலக்கமும் சேர்ந்து மாலை நேரம் சிறிது வருத்தமானதாக இருக்கும். என் முகத்தில் வருத்தத்தைக் காணும் என் மகளும் மனைவியும் என்னிடம் அன்பாகப் பேசி அவர்களது பரிவைக் காட்டி எங்கேயாவது நண்பர்களைக் காண வெளியே செல்லலாம் என்று கூறி என் மனதை மாற்றி மகிழ்ச்சி அடைய செய்வார்கள். நண்பர் வீட்டிற்கு கைபேசியில் பேசிவிட்டு காரில் நாங்கள் அவன் வீட்டிற்கு சென்று அங்கு சில மணி நேரம் இருந்து பல விஷயங்களைப் பற்றி அலசி அங்கேயே இரவு உணவை முடித்து விட்டு மாலை நேரத்தை மகிழ்ச்சிகரமாக கழித்து வீட்டிற்கு வந்து படுக்கச் செல்வோம். இதே போல் பல முறை நண்பர்களும் எங்கள் வீட்டிற்கு வந்து அவர்களது மாலைப் பொழுதை கழிப்பார்கள்.

இந்த சந்திப்புகளால் மனது லேசாகி அதில் வரும் வேதனைகள் குறைந்து ஒருநிலை படும். இதனால் ஒரு குதூகலமும் ஏற்படும்.
எங்கள் குழந்தையும் அவள் பள்ளி நண்பர்களைக் கூட்டி வந்து குரூப்பாக சேர்ந்து படிப்பதும், எங்களுடன் அவள் நண்பர்கள் மாலை சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு செல்வதும் எங்கள் மனதை மகிழ்ச்சி அடையச் செய்யும்.
. என் நண்பன் வீட்டில் அன்று விசேஷ பூஜை ஆகவே அவர் சில நெருங்கிய நண்பர்களை குடும்பத்தோடு வரும்படி அழைத்திருந்தார்.எல்லோரும் அவரவர்கள் வீட்டில் எதாவது உணவை செய்து அதை ஆண்டவனுக்கு படைத்தபின் அதை யாவரும் இரவு சாப்பாட்டிற்கு எடுத்துக் கொண்டு உண்போம்.
இவ்வாறு கூடி பேசி மகிழ்வது உள்ளத்திற்கும் மனதிற்கும் ஒரு மகிழ்ச்சியையும் அமைதியையும் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை ஒவ்வொருவர் வீட்டில் இந்த பூஜை நடைபெறும்.இதனால் ஒவ்வொரு குடும்பமும் கூட்டு பிராத்தனையினால் ஏற்படும் பலனைப் பெற்று பயனடைவர்.

அன்றைய தினம் இப்படி கூப்பிட்டு வந்த குடும்பத்தில் வந்தவர்களில் ஏழெட்டுக் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் நான்கு முதல் பத்து வயது வரை உள்ள பையன்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம விகிதத்தில் இருந்தனர்.

பெரியவர்கள் காப்பியும் கையுமாக அரட்டையடித்துக் கொண்டிருக்கையில் இந்தக் குழந்தைகளால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாமல்,நண்பரின் வீட்டை வலம் வரத் தொடங்கினார்கள். கண்ணில் பட்ட பொருள்களெல்லாம் அவர்களுடைய விளையாட்டுச் சாதனங்களாக மாறின.

விருந்துக்கு ஏற்பாடு செய்த நண்பர் தன்னுடைய மகனுக்காகத் தனி அறை ஒன்றை ஒதுக்கியிருந்தார். அந்த அறையின் சுவர்களில் ஏ, பி, சி, டி, ஒன்று, இரண்டு, மூன்று, நர்சரி ரைம்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் வண்ணமயமாகப் பூசப்பட்டிருந்தன. ஆங்காங்கே பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் புன்னகைத்தன. குழந்தைகளுக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போய்விட்டது. சமர்த்தாக அங்கேயே சுற்றி உட்கார்ந்துகொண்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஹாலில் அமர்ந்திருந்த நாங்கள் இதைக் கவனிக்கக்கூட இல்லை. கொஞ்சநேரம் கழித்துதான் ‘குழந்தைகளெல்லாம் எங்கே போச்சு?’ என்று தேடினோம். அவர்கள் பத்திரமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு எங்களுடைய அரட்டையைத் தொடர்ந்தோம்.

அரை மணி நேரம் கழித்து, இரண்டு குழந்தைகள்மட்டும் அந்த அறையிலிருந்து ஓடி வந்தன. ‘உங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்’ என்றன.

’சர்ப்ரைஸா? என்னது?’

‘நாங்களெல்லாம் சேர்ந்து உங்களுக்காக ஒரு நர்சரி ரைம் ரெடி பண்ணியிருக்கோம்’ என்றது ஒரு குழந்தை. ‘சீக்கிரமா வாங்க, பார்க்கலாம்!’ என்று எங்களை அந்த குழந்தை அழைத்திட நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
பெரியவர்களாகிய எங்களுக்கு குழந்தைகளின் கற்பனை விளையாட்டுகள் அசட்டுத்தனமானவை, பெரிதாக பொருள்படுத்தவேண்டியவையல்ல, இருந்தாலும் அவர்களுக்கு ஓர் ஆச்சரியத்துடன் மகிழ்ச்சி கலந்த குரலில் ‘வெரி குட்’ சொல்லவேண்டியிருக்கிறது, அவர்களது மனதை இந்த செயல் மகிழ வைக்கிறது. குழந்தைகள் இழுக்கும் திசையில் நடக்கவேண்டியிருக்கிறது நாங்களும் நடந்தோம்.

அந்தச் சிறிய அறைக்குள் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வெளிச்சம் பரவியிருந்தது. குழந்தைகள் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றபடி எங்களுக்காகக் காத்திருந்தார்கள். எங்களை அழைத்து வந்த குழந்தைகள் உள்ளே நுழைந்ததும், எல்லாரும் ஒருவரை ஒருவர் வெட்கப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டார்கள். பின்னர் ஒரே குரலில் பாட ஆரம்பித்தார்கள்.முதல் வரி, ‘One Bird is singing’… உடனே அதற்கு ஏற்றாற்போல் வாயில் கை வைத்துக் குவித்தபடி ‘கூ, கூ, கூ’ என்று action.

அடுத்த வரி ‘Two Cars are racing’ என்று பாடிவிட்டு ‘ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று வண்டிகள் உறுமுகிற ஒலியுடன் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடின.

மூன்றாவது வரி ‘Three dogs are barking’. எல்லாரும் நான்கு கால்களால் தரையில் ஊர்ந்தபடி ‘வவ் வவ் வவ்’ என்று குரைத்தார்கள்.

இப்படியே ‘Four bees flying’, ‘five fishes swimming’ என்று தொடர்ந்து ‘Ten Stars are twinkling’ என அந்தப் பாட்டு முடிவடைந்தது, ஒவ்வொரு வரிக்கும் மிகப் பொருத்தமான Action செய்கையுடன்.

நியாயமாகப் பார்க்கப்போனால், அந்தப் பாட்டில் எந்த விசேஷமும் இல்லை. ஆனாலும், குழந்தைகள் (அதுவும் எங்களுடைய குழந்தைகள்) ஆடி, நடித்துக் காட்டுகிறார்கள் என்பற்காக நாங்கள் அனைவரும் சிக்கனமாகக் கை தட்டினோம். ‘வெரி குட், இந்தப் பாட்டு உங்க ஸ்கூல்ல சொல்லித்தந்தாங்களா?’ என்று கேட்டார் ஒருவர்.

‘இல்லை அங்கிள், நாங்களே ரெடி பண்ணோம்!’ என்றது ஒரு குழந்தை.

‘நிஜமாவா? எப்படி?’

எங்களுக்குப் பின்னால் இருந்த சுவரைக் கை காட்டியது ஒரு குழந்தை. ‘அதோ, அந்த பெயின்டிங்கை வெச்சு நாங்களே ஒரு ரைம் எழுதினோம், அதுக்கு ஏத்தமாதிரி டான்ஸ் பண்ணோம்.’ மற்றவர்களுக்கு எப்படியோ, அந்தக் குழந்தையின் பேச்சு எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. என்னதான் சாதாரணமான 1, 2, 3 ரைம் என்றாலும், இந்த வயதுக் குழந்தைகளால் சொந்தமாகப் பாட்டு எழுதவெல்லாம் முடியுமா என்ன? சும்மா புருடா விடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன். அவர்கள் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தேன்.

அங்கே இருந்தது ஒரு சுமாரான ஓவியம். குழந்தைகள் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிப் பழகுவதற்காக ஒன்றுக்கு கீழ் ஒன்றாகப் பத்து சதுரங்கள் போட்டு அதற்குள் ஒரு பறவை, இரண்டு கார்கள், மூன்று நாய்கள், நான்கு வண்டுகள், ஐந்து மீன ஆறு பலூன்கள், ஏழு பட்டங்கள், எட்டு ஆப்பிள்கள், ஒன்பது புத்தகங்கள், பத்து நட்சத்திரங்கள் ஆகியவற்றை வரைந்திருந்தார்கள்.

நீங்களோ நானோ அந்த ஓவியத்தைப் பார்த்தால் விசேஷமாக எதுவும் நினைக்கமாட்டோம். பக்கத்தில் ஒரு குழந்தை இருந்தால் One, Two, Three என்று சொல்லித்தர முயல்வோம் . அல்லது ‘இதுல எத்தனை கட்டம் இருக்குன்னு எண்ணிச் சொல்லு, பார்க்கலாம்’ என்று அதற்குப் பரீட்சை வைப்போம்.

ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு, அந்த ஓவியம் ஒரு பாட்டுப் பயிற்சியாகத் தோன்றியிருக்கிறது. ஒரு பறவை என்றவுடன் ‘One Bird is singing’ என்று வாக்கியம் அமைத்து, அதற்கு ஏற்பப் பாடும் பறவையின் Action சேர்த்திருக்கிறார்கள், இப்படியே ஒவ்வொரு சதுரத்துக்கும் ஒரு வரியாக அவர்களே தங்களுக்குத் தெரிந்ததைச் சொந்தமாக எழுதியிருக்கிறார்கள், ஒவ்வொரு வரிக்கும் ஏற்ற Actions என்ன என்று யோசித்து நடனம் அமைத்திருக்கிறார்கள். அதை எல்லாரும் பலமுறை பாடி, ஆடிப் பார்த்துப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். எங்கள்முன் நடித்துக் காண்பித்திருக்கிறார்கள்.

மறுபடி சொல்கிறேன், அந்தப் பாட்டில் விசேஷமான வரிகள் எவையும் இல்லை. எல்லாம் அவர்கள் எங்கேயோ கேட்ட பாடல்களின் சாயல்தான். நடன அசைவுகளும்கூட அற்புதமானவையாக இல்லை.

அதேசமயம், அந்த வயதில் இந்தப் பத்து சதுரங்களை என்னிடம் யாராவது காட்டியிருந்தால் சட்டென்று ஒரு பாட்டு எழுதுகிற Creativity எனக்கு இருந்திருக்காது. ஏழெட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து அதற்கு நடனம் அமைக்கவும் தோன்றியிருக்காது. ‘உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்’ என்று பெற்றோரை இழுத்துவந்து பாடி, ஆடிக் காண்பித்திருக்கமாட்டேன்.

இந்தக் குழந்தைகளால் அது முடிகிறது என்றால், அதற்கு என்ன அடிப்படைக் காரணம்? இங்குள்ள இன்றைய வகுப்பறைகள் Creativityஐ ஊக்குவித்து அதற்கு முக்கியத்துவம் அளித்து அதைப் பாராட்ட தொடங்கிவிட்டன என்பதும் ஆசிரியர்களும் புதுமையான வழிகளில் அவர்களுக்கு மனதில் பதியும் விதம் பாடம் சொல்லித்தருகிறார்களா? ’எந்தப் படத்தைப் பார்த்தாலும் அதற்குப் பொருத்தமாகப் பாட்டு எழுதுவது என்பதை யாரேனும் இவர்களுக்குக் கற்றுத்தந்தார்களா? அவர்கள் புத்தகப் பாடங்களைமட்டும் உருப்போடாமல் புதிதாக எதையாவது யோசித்துச் செய்தால் கவனித்துப் பாராட்டும் சூழல் பள்ளியிலும் , வெளியிலும் இருக்கிறதா? இந்தக் காலப் பெற்றோர் ‘ஒழுங்காப் படிக்கற வேலையைமட்டும் பாரு’ என்று குழந்தைகளை அடக்கிவைக்காமல் அவர்களுடைய இஷ்டப்படி செயல்பட அனுமதிக்கிறார்களா? ’நாம் பாடுவது சரியோ தப்போ’ என்று தயங்காமல் தன்னம்பிக்கையோடு அடுத்தவர்கள்முன் அதை Perform செய்து காண்பிக்கும் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இந்தக் கோஷ்டியில் ஏதோ ஒரு குழந்தைக்குதான் அந்தப் பாட்டெழுதும் ஐடியா தோன்றியிருக்கவேண்டும், மற்ற குழந்தைகள் வரிகளை, Actionகளைச் சேர்த்திருக்கவேண்டும், இன்னொரு குழந்தை தலைமைப்பண்புடன் செயல்பட்டு இந்தப் பயிற்சி முழுவதையும் coordinate செய்திருக்கவேண்டும், சரியாகப் பாடாத, ஆடாத குழந்தைகளுக்கு மற்றவர்கள் சொல்லித்தந்து தேற்றியிருக்கவேண்டும், அரை மணி நேரத்துக்குள் ஒரு புத்தம்புது விஷயத்தை இப்படி ஆளுக்கொரு Role எனக் கச்சிதமாகப் பிரித்துக்கொண்டு செயல்படுத்துவது அவர்களுக்குள் எப்படி இயல்பாக நிகழ்ந்தது?

இதற்கெல்லாம் எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் இந்தக் கேள்விகளை யோசித்த அந்தக் கணத்தில் நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளில் விவரிப்பது சிரமம். அரட்டை பார்ட்டிக்கு நடுவே அந்தச் சாதாரணமான பாடல் உருவான சூழல் ஓர் அசாதாரணமான அனுபவமாக அமைந்துவிட்டது.

குழந்தைகள் தினம் தினம் நமக்கு ஏதாவது ஒன்றை கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எழுதியவர் : கே என் ராம் (11-Jan-25, 3:51 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 9

மேலே