கண்ணாடியும் கல்பனாஸ்ரீயும்
கண்ணாடியும் கல்பனாஸ்ரீயும்
(இந்த கதை கரு என்னுடைஅது அல்ல)
இந்த கதை நடந்து நாற்பது வருடங்கள் கழிந்திருக்கலாம், நினைத்து பார்க்கிறேன்.
பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறோம் நாங்கள். இந்த சிக்கல் நாங்களாக வரவழைத்து கொண்டதுதான். ஒருவருமே எதிர்பார்க்கவில்லை, இப்படி நடக்குமென்று.
எங்கள் கல்லூரி வளாகத்தில் ஏராளமான மரங்கள் இருக்கிறது. எங்களின் கல்லூரி தங்கும் விடுதியில் இருந்து கல்லூரிக்கு வரவே அரைமணி நேர அளவு தேவைப்படும். அந்தளவுக்கு பரந்து விரிந்த இடம். சுற்றி வர மரங்கள் வளந்திருப்பதற்கு கேட்பானேன்.
மரங்கள் அடர்ந்து இருந்ததால் வெயிலின் தாக்கம் தெரியாமல் எப்பொழுதும் ஒரு வித குளுமையுடனே இருக்கும். எல்லாம் சரிதான், ஆனால் எப்படியோ அங்கு வந்து தங்கி விட்ட நாங்கைந்து குரங்குகள் அங்கு குடி வந்தபின் கல்லூரியில் இருக்கும் மரங்கள் எல்லாம் எங்களுக்கு எதிரியாகவே ஆகி விட்டது.
எந்த மரத்தில் குரங்குகள் இருக்கிறது என்பதே தெரியாது, திடீரென ஏதோ ஒரு மரத்திலிருந்து தாவி வரும் குரங்குகள் மாணவர்களோ, மாணவிகளோ மர நிழலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டோ, படித்து கொண்டோ இருந்தால் அவ்வளவுதான், அப்படியே பிடுங்கி கொண்டு ஓடி விடும்.
இதனால் கல்லூரி நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர்களிடம் வந்து குவிய கலூரி நிர்வாகமும் வனத்துறையிடம் புகார் அளித்து, எல்லாவற்றையும் பிடித்து கொண்டு போய் வேறு இடங்களில் விட்டு வரும்படி கேட்டு கொண்டது.
இப்படி இரண்டு மூன்று வருடங்களாக இந்த சிக்கல் தீர்க்க்கும் பணி கல்லூரி நிர்வாகம், மாணவ மாணவிகள், வனத்துறை, மூவருக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்க
நாங்கள் அங்கு ஒரு விழாவை நடத்த ஏற்பாடு செய்து விட்டோம். அதுவும் திறந்த வெளி அரங்கம் அமைத்து ஏராளாமான மாணவ மாணவிகள் வேடிக்கை பார்க்க மேடை அமைத்து நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டோம்.
அப்படி நடக்கும் நிகழ்ச்சிக்கு பிரபலமான ஒருவர் வருகை புரிவது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாகி விட்டபடியால் யாரை அழைக்கலாம் என்று கலந்தாலோசித்தோம்.
அப்பொழுது எங்களுக்கு கிடைத்த அன்றைய பிரபலம் நடிகையும் கவர்ச்சி புயலாகவும் விளங்கிய கல்பனாஸ்ரீ யை அழைத்து வந்தால் என்ன? என்றொரு யோசனை வந்து விட்டது.
இன்று தமிழகம் மட்டுமல்ல, தென்னிந்தியா, மற்றும் வட இந்தியாவில் கலக்கி கொண்டிருக்கும் கல்பனாஸ்ரீ யின் படங்களை பார்க்க துடித்து கொண்டிருக்கும் இளைஞர்கள், இளைஞிகள் கூட்டம் நிச்சயமாய் எங்கள் கல்லூரியை பெருமிதமாய் பார்க்கும்.
இத்தகைய யோசனை எங்களுக்கு உதித்ததும், எப்படி அவர்களை அணுகுவது? இந்த சிக்கலையும் தீர்த்து வைத்தான் கல்லூரி நண்பன் ஒருவன். அவனது தந்தைக்கு தெரிந்த புரொடியூசர் ஒருவர் மூலம் நடிகையை தொடர்பு கொள்ள முடிந்தது.
ஆரம்பத்தில் மிகவும் பிகு செய்து கொண்ட நடிகை கடைசியில் ஒத்து கொண்டார். அதுவும் நாற்பது நிமிடங்கள் மட்டுமே தான் அங்கிருக்க முடியும், இது போன்ற கலை கல்லூரிகளில் நடக்கும் விழாக்களில் தனக்கு கலந்து கொள்ள விரும்பவில்லை என்றாலும், கேட்டு கொண்டதற்காக வந்து செல்வதாக ஒப்பு கொண்டார்கள்.
காரில் வந்து இறங்கிய கல்பனாஸ்ரீயை பார்க்க சுற்றிக்கொண்ட கூட்டம், அவளை முன்னோக்கி நடக்க விடாமல் தள்ளு முள்ளுடன் அவளை காண துடித்தது. கல்லூரி விழாவென்றாலும் அந்த நகரில் இருந்த ஏராளமான இளைஞர்கள் அவளையே கனவு கன்னியாக நினைத்து கொண்டவர்கள் ஏராளமான பேர் சுற்றி கொண்டார்கள்.
எப்படியோ காவலர்களின் துணையுடன் அந்த கூட்டத்தில் இருந்து அவளை பத்திரமாக பாதுகாத்து “கல்லூரி கெஸ்ட் ஹவுசுக்கு” கூட்டி செல்வதற்குள் படாத பாடாகி விட்டது.
அறைக்குள் நுழைந்த நடிகை கல்பனாஸ்ரீ அதற்குள் வேர்த்து விருவிருத்து போய் ஜன்னலோரமாய் தன்னுடைய கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு ஒட்டி இருந்த ஓய்வறைக்குள் நுழைந்து தாளிட்டு கொண்டாள்.
நாங்கள் வெளியறையின் வாசலில் அவளின் வருகைக்காக காத்திருந்த போது மேசையின் மேல் வைத்திருந்த அவளின் கண்ணாடியை பார்க்க நேர்ந்தது. அது பச்சை நிறமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அந்த கண்ணாடியை பற்றி பல்வேறு வதந்திகள் அடிக்கடி செய்தி தாள்களில் வந்து கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தது. அது கண்ணுக்கு குளிர்ச்சி மட்டுமல்ல, கல்பனஸ்ரீக்கு தனிப்பட்ட அழகையும், கவர்ச்சியையும் கொடுத்தது என்றால் அது உண்மைதான். காரணம் சற்று தொலைவில் இருந்து வைத்திருக்கும் கண்ணாடியை பார்ப்பதற்கே இவ்வளவு அழகாய் இருக்கிறதன்றால்..!
நாங்கள் கண்ணாடியின் அழகில் மயங்கியபடி அதை பற்றி பேசி கொண்டிருந்த பொழுது “திடீரென்று ஒரு கை உள்ளே கை விட்டு அந்த கண்ணாடியை எடுத்து செல்வதை எங்களால் பார்த்து கொண்டுதான் இருக்க முடிந்ததே தவிர அதை எடுத்து சென்ற உருவத்திடமிருந்து பறிப்பதற்கு நேரமே தரவில்லை. காரணம் ஜன்னல் அடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த சின்ன சந்து வழியாக அது கையை விட்டு எடுத்திருக்கிறது. எடுத்த நொடியில் “கீச்” கீச் சப்தமிட்டு கொண்டு ஏராளமான குரங்குகள் மரத்தின் மீது ஓடுவது எங்களுக்கு நன்றாக கேட்டது.
ஐயோ” அதே நேரம் பார்த்தா கல்பனஸ்ரீ ஓய்வறையை விட்டு வெளியே வர வேண்டும்? வந்தவள் அலங்கார தேவதையாய் இருந்தாள். வந்தவள் நேராக சென்று கண்ணாடியை தேட….
நாங்கள் கையை பிசைந்து அடுத்து அவளுக்கு அவளது கண்ணாடியை பற்றி என்ன சொல்வது என்னும் பரிதவிப்பில் தடுமாற சட்டென எங்களில் ஒருவன் “மேடம் வேகமாக ஓடி வந்தவன் சாரி மேடம் நீங்கள் கண்ணாடியை வைப்பதை எவனோ ஒருவன் பார்த்து “இது என்னோட கனவு கன்னி கல்பனாஸ்ரீ யின் கண்ணாடி” கத்தியபடியே எடுத்து ஓடி விட்டான். எங்கள் ஆட்கள் அவனை விரட்டி பிடிக்க பின்னால் ஓடியிருக்கிறார்கள்” சமாளித்தான்.
ஒரு நிமிடம் முகம் மாறிய கல்பனஸ்ரீ அவன் பக்கம் திரும்ப அவன் தயங்கியவாறு “மேடம் உங்க மேல உயிரா இருக்கறவங்க” இப்படி பண்ணிட்டாங்க, நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க, பணிவாய் சொன்னான்.
தன் மீது வெறித்தன அன்பாய் இருப்பவன் எவனோ ஒருவன் செய்து விட்டான், பரவாயில்லை, முகத்தை கொஞ்சம் மலர்ச்சியாய் வைத்தபடியே நிகழ்ச்சி நடக்கும் மேடைக்கு நடக்க ஆரம்பித்தாள்.
அப்பாடி..எப்படியோ சமயோசிதமாய் இந்த சிக்கலை சமாளித்து விட்டோம் என்னும் திருப்தியுடன் நாங்கள் அவரின் பின்னால் மேடையை நோக்கி நடந்தோம்.
நிகழ்ச்சி எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. கல்பனாஸ்ரீ தன் கடிகாரத்தை பார்த்து தான் கிளம்புவதற்காக மேடையை விட்டு இறங்கி கொண்டிருக்க.. தட்டென்று ஒரு மரத்தின் உச்சியில் இருந்த கிளை ஒன்றை பிடித்தபடியே சர சரவென இறங்கிய குரங்கு ஒன்று நேராக அவள் முன்னால் நின்றபடி..அவள் அணிந்திருந்த கண்ணாடியை மாட்டியபடியே…..
அப்படியே நாங்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து “போச்சு போச்சு” குட்டி சுவராய் போச்சு திகைப்புடன் பிரமையுடன் சிலையாய் நிற்க…
ஒரு நிமிடம் அந்த குரங்கை கண்ணாடியுடன் பார்த்த கல்பனஸ்ரீக்கு அதிர்ச்சியாகி அவளது முகம் கோபத்திற்கு மாற முயற்சிக்கும் போது எங்கிருந்துதான் அவளுக்கு திடீரென சிரிப்பு பொங்கி கொண்டு வந்ததோ தெரியவில்லை, விழுந்து விழுந்து சிரித்தாள்.
அப்பாடி….. எங்களுக்கு அப்பொழுது ஏற்பட்ட நிம்மதி..
கல்பனாஸ்ரீ மட்டும் முன்னால் வந்து இரசிகன் ஒருவன் கண்ணாடியை எடுத்து சென்று விட்டான் என்று சொன்னவனை உறுத்து பார்த்தவள் மீண்டும் மீண்டும் சிரித்தாள்.
குரங்கு முகத்தில் மாட்டிய அவள் கண்ணாடியுடன் அழகாய் அபிநயத்துடன் நின்று கொண்டிருந்தது.