உங்களுக்காக ஒரு கடிதம் - 45
உங்களுக்காக ஒரு கடிதம் - 45
29 / 01 / 2025
அன்பு வாசகர்களே..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் யாவரும் பிரச்சனைகளின்றி வாழ எனது பிராத்தனைகள். ஓ...பிரச்சனை என்றவுடன் என் மனதில் தோன்றிய சில எண்ணங்களை உங்களோடு பகிர்வதில் என் மன பாரம் கொஞ்சம் குறையும். என் பிரச்சனையை பங்கிடுவதில் என் மனப் பிரச்சனை கொஞ்சம் குறையும் என்றெண்ணி இதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.
"பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். வீண் சண்டைச் சச்சரவுகள் எதுக்கு?" என்று ஆளுக்குஆள் கூறுகிறோம். ஏதோ நாமெல்லாம் உத்தமர் போல் போகிறப் போக்கில் சொல்லிவிட்டு போவது சகஜமாகிவிட்டது. " நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே..வாய் சொல்லில் வீரரடி.." பாரதியின் பாடல் காதில் மோதி சென்றது. சரி பேசித் தீர்த்துகொண்டால் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா என்ன? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி? பேச்சு வார்த்தைகளால் பிரச்சனைகள் தீருமா? இல்லை பிரச்சனைகள் வளருமா? பேசித் தீர்க்கலாம் என்று பேச உட்கார்ந்தால் அங்கு உண்மையில் என்ன நடக்கிறது. கொஞ்சம் உற்று கவனிப்போம்.
பொதுவாக இருவரிடம் சண்டைச் சச்சரவுகள் வந்துவிட்டால் எல்லோரும் சேர்ந்து சொல்வது என்னவென்றால் தீர்க்கமான ஒரு முடிவு எடுப்பதற்கு முன் உட்கார்ந்து பேசிவிட்டால் தீர்வுகள் எட்டிவிடலாம். பிரச்சனைகளைத் தீர்த்துவிடலாம் என்று. பிரச்சனைக்குள்ளான இருவர் ஏதோ செய்யாத குற்றத்தை செய்து விட்டதுபோல், அயல் நாட்டு சதிகாரர்கள் போல் அவர்களை ஒரு தூசு போல... இல்லையில்லை தீண்டத்தகாத ஜந்து போல பார்த்து கொண்டும்..குசு குசு என்று பொரணி பேசிக்கொண்டும் அவர்களை ஆதரிக்கிறார்களா? இல்லை அவமதிக்கிறார்களா? என்று இனம் கண்டு கொள்ள முடியாமல்...இதழ் ஓரத்தில் ஒரு கேவலமான கோண சிரிப்பை படரவிட்டு, ஆர்வத்துடன் கூட்டத்தை உற்று பார்த்துக் கொண்டிருக்கும் இந்த குழப்பமான கூட்டத்தில்... இவர்கள் எல்லாம் என்னமோ உத்தமர் போல் முகமூடி போட்டிருக்கும் இந்த வேஷக்கார கூட்டத்தால் பிரச்சனையை எப்படித் தீர்க்க முடியும்? இல்லை பிரச்சனைதான் எப்படி தீரும்? தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விடமுடியுமா என்ன?
சரி விஷயத்துக்கு வருவோம். முதலில் மெதுவாக.. ஆரம்பிக்கும் சபை... போகப் போக குரல்களும்.. வார்த்தைகளும்.. தடிமனாகி, குரல்களும் வாதங்களும் அதிகமாகி..இரண்டு பேர் பிரச்னை இப்போது தனிமனித பிரச்சனையாய்.. ஊர் பிரச்சனையாய் மாறிப்போகும் விந்தையை என்னவென்று சொல்வது? வாதிகள் இரண்டுபேரின் நேர்மறை... எதிர்மறைகள் மட்டும் இல்லாமல் அங்கு கூடி இருக்கும் அத்தனை பேருடைய எதிர்மறைகளும் வெளியில் வந்து எல்லாரையும் சங்கடத்துக்குள் ஆக்கி விடும் கொடுமைதான் ஒவ்வொரு தடவையும் அரங்கேறுவது சகஜமாக நடக்கின்ற ஓர் நிகழ்வாகிவிட்டது.
கணவன் மனைவிக்குள் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால்.. உட்கார்ந்து பேசிவிட்டால் பிரச்சனைக்கு ஒரு முடிவு கண்டுவிடலாம் என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.சரி அப்படி உட்க்கார்ந்து பேசும்போது என்ன நடக்கிறது? உற்று கேட்கலாம். முதலில் மெதுவாக ஆரம்பிக்கும் பேச்சு வார்த்தை, பின்னால் வார்த்தைகள் தடிமனாகி, ஒவ்வொருத்தருடைய தன்முனைப்பைத் தூண்டி அதுதான் தன்மானத்தை கிழித்து..கந்தல் கந்தலாக்கி காற்றில் பறக்க விடப்படுகிறது. மனதை கீறி... கீறி.. காதிலும் மனதிலும் ரத்தம் வழிய வழிய வைக்கப் படுகிறதே. சமாதானம் பேசத் தொடங்கி ஒவ்வொருவருடைய ஈகோவையும், ஒவ்வொருவருடைய நெகட்டிவ் களையும் ஊதி.. ஊதி பெருசாக்கி ஒவ்வொருவரையும் தாக்கி.. காயப்படுத்திக்கொண்டும், மறந்து போன... மறந்து போகவேண்டிய பல கசப்பான நினைவுகளை ..மறுபடியும் தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்வதுதான் வாடிக்கையாகிப்போனது. மற்றவரை மதிப்பதோ இல்லை மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதோ கரைந்து கொண்டிருக்கிறது. மண்ணோடு மண்ணாய் புதைந்து கொண்டிருக்கிறது. இதில் பொதுவாக என்ன நடக்கிறதென்றால் ஏற்கனவே இருந்த காயங்களை கீறி, புதிதாய் ஏற்படுத்தப்பட்ட ரத்த களறியில் இன்னும் விரிசல் பெரிதாகி,பெரிதாக்கப்பட்டு இடைவெளி கூடிக் கொண்டே போவது சகஜமாகிவிட்டது. ஓஹோ இதுதான் உன் எண்ணமா? இவ்வளவு திமிரா? என்று பேசியதெல்லாம் மனதில் நிலைநிறுத்தி அந்த கால நம்பியாரைப்போல கையை பிசைந்து கொண்டு, கண்களை உருட்டிக்கொண்டு "காளி..அவன் கதையை முடிடா" என்றோ இல்லை இந்த கால அரவிந்த் சாமி போல 'மைக்ரோ சிப்பை'வைத்து கண்காணிக்க திட்டம் போடுவதுதான் நடக்கிறது. பேச்சவார்த்தைக்கு பிறகு நம்பிக்கை குறைந்து, ஒவ்வொன்றையும் ...ஒவ்வொரு செயலையும்..ஒவ்வொரு வார்த்தையும் சந்தேகத்துடன் பார்ப்பதும்.. கேட்பதும் நடைமுறையாய் ஆகிவிட்ட ஒன்றாகிவிட்டது.
என்னைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்சனைக்கு நல்ல முடிவு நிஜமாகவே வேண்டுமென்றால்.. புரிதலும்.. விட்டுக்கொடுத்தலும் இருந்தாலே ஒழிய, பிரச்சனைக்கு தீர்வே காணமுடியாது. இது சர்வ நிச்சயம். ஒருத்தரை ஒருத்தர் மதிக்க வேண்டும். மற்றவரின் கருத்துக்கும் மதிப்பு உண்டு என்று உணரவேண்டும். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து யோசிக்க வேண்டும். நாம் பார்ப்பது ஒரு கோணத்தில் என்றால் மற்றவர் வேறொரு கோணத்தில் அந்த பிரச்சனையை அணுகுவார்கள். ஆகையால் உட்கார்ந்து பேசும்போது மற்றவர் சொல்வதை காது கொடுத்து முதலில் கேளுங்கள். கேட்டதை மனமெனும் தராசில் வைத்து எடை போடுங்கள்.சில சமயம் நீங்கள் சொல்வது தவறாக இருக்கலாம். பல சமயம் மற்றவர் சொல்வது சரியான தீர்வாக இருக்கலாம். ஆனால் பிரச்சனை என்னவென்றால் நம் கோபமும், ஈகோவும் மற்றவர் சொல்வதை காது கொடுத்து கேட்கக்கூட வாய்ப்பு கொடுப்பதில்லை. இதனால் நல்ல கருத்துக்களும், தீர்வுகளும் எட்ட முடியாமல் குப்பைக்குள் முடங்கிவிடுகிறது.
நன்றாக உட்கார்ந்து யோசிப்போம். உட்கார்ந்து பேசி பிரச்சனையைத் தீர்த்து கொள்வது சரிதான். என்னைப் பொறுத்த வரையில் பேச்சுத் தொடங்குமுன் எது? முக்கியமான பிரச்சனையோ அதை மட்டும் பேச சங்கல்பம் செய்துகொண்டு பேச்சைத் தொடங்க வேண்டும். அது தொடர்பாக அலசலாம்.. ஆராயலாம்...விவாதிக்கலாம். மற்றவரை காயப்படுத்தவோ இல்லை அவரின் சுய கவுரவத்தை குழித்தோண்டவோ முயற்சிக்காமல் ஒருவரை ஒருவர் மதித்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பேசினால் ஒருவகையில் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இது நடைமுறையில் சாத்தியமா? எனக்கொரு சந்தேகம், பிரச்சனைக்கு உள்ளாவது கணவன்.. மனைவியோ, அண்ணன்..தம்பியோ இல்லை சொந்த..பந்தங்களோதான்.அதாவது ஒரே ரத்தம் இல்லையென்றால் ,ஒரே குடும்பம். குழி பறிப்பதோ இல்லை மானத்தை கிழி என்று கிழிக்கப் படுவது உனக்கு சொந்தமான..உன்னை நீயே கேவலப் படுத்திக்கொள்வது போல்தான். உனக்கு நீயே சூனியம் வைத்து கொள்வதுபோல்தான். சிந்திப்போம். சிந்தித்து செயல்படுவோம்.