உங்களுக்காக ஒரு கடிதம் - 46

உங்களுக்காக ஒரு கடிதம் - 46
02 / 02 / 2025

அன்பு வாசக நண்பர்களே,
நலம். எல்லோரும் நலமுடன் இருக்க என்னுடைய பிராத்தனைகள். என் காதுகளையும் ,மனதையும் உறுத்தும், பாதித்து மனஉளைச்சலை கொடுக்கும் ஒரு நிலையைத்தான் இன்று உங்களோடு எழுதி பகிரப் போகிறேன். இது சமுதாய குறிப்பாக இளைய சமுதாயத்தின் சீர்கேட்டின் எடுத்துக்காட்டாக நான் கருதுவதால் இதோ எழுதிக் கொண்டிருக்கிறேன் இதில் சொல்லுவதற்கு..எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் இப்போது ஒன்றைமட்டும் விலாவாரியாக எழுதலாம் என்று இருக்கிறேன்.
நாம் அன்றாடம் நம் வீட்டிலும் சரி.. அக்கம்பக்கத்திலும் சரி நம் காதில் விழுகின்ற பேச்சு வழக்கத்தை பற்றித்தான் சொல்ல வருகிறேன்.ஒருவேளை என் சிறு பிராயத்தில் நான் கேட்டிராத, பேச கூச்சப்பட்ட சொற்றொடர்கள் இப்பத்து சகஜமாக இளைய ஏன்? மூத்த சமுதாயத்தினராலும் உபயோகப்படுத்தப்படுவதால் எனக்கு வித்தியாசமாக படுகிறது என்று நினைக்கிறேன். என்னால் சகித்து கொள்ளவோ ஒத்துக்கொள்ளவோ முடியவில்லை. இது ஒரு பிரச்சனைதான். இந்த பிரச்சனையை என்னிடமா? இல்லை சமுதாயத்திடமா? குழப்பம்தான் மிஞ்சுகிறது. தமிழ்..தமிழ்.. தமிழ் மொழியை காக்கவேண்டும்..போற்றவேண்டும்...உலக அரங்கில் தமிழ் மொழியின் வெற்றிக்கொடி பறக்கவேண்டும் என்று வீதி வீதியாய்..மேடை ..மேடையாய் முழக்கமிட்டு என்ன பயன்? வாய்மொழித்தமிழே இப்படி நாறிக்கிடக்கிறதே என்றொரு ஆதங்கம்தான் இந்த பகிர்தலின் முக்கிய எண்ணம்.
சரி.விஷயத்துக்கு வருவோம். முதிய சமுதாயத்தினரும் சரி..இளைய சமுதாயத்தினரும் சரி கோபம் வந்தால் மட்டும் எப்போதாவது உபயோகிக்கும் சில வார்த்தைகள் சர்வ சாதாரணமாக.. கோபம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி உபயோகிக்கப்படுவதை நாம் தின்தோறும் கேட்கின்ற ஒரு பேச்சுப் பொருளாகிவிட்டது. 'என் செருப்பு.. செருப்பு பிஞ்சிடும்.. தொடப்பக்கட்ட பிஞ்சிடும் ..மயிறு, நீ என்ன பெரிய...பொறம்போக்கு... டென்சன் ஏத்தாத' இன்னும் நாவே கூசும்படி வார்த்தைகள், சர்வ சாதாரணமாக..நாம் சாதாரணமாக பேசும்போதே இடையில் உபயோகிக்கப்படும் சாதாரண வார்த்தைகள் ஆகிவிட்டன. இதற்கெல்லாம் காரணம் என்ன? சற்று யோசிப்போம்.
அந்த காலத்தில் பெரியவர்கள் முன் சத்தமாக பேசுவது..ஏன் சாதாரணமாக பேசுவதற்கு கூட தயங்கிய காலங்கள்..பயம் என்றுகூட வைத்து கொள்ளலாம். மேலோங்கி நின்றது மூத்தவர்கள் மேல் இருந்த மரியாதையும், இளையவர்கள் மேல் இருந்த அக்கறையும்தான். அதனோடு சேர்ந்து சுற்றம் சூழ்நிலை மனதில் நினைத்து வார்த்தைகளை உபயோகிக்கப்பட்டது. பேச்சு சுதந்தரத்தை கண்ணியத்தோடும் கட்டுப்பாடோடும் உப்யோகிக்கப்பட்டது அந்நாளில். இப்போது அடியோடு இல்லையென்று சொல்லமுடியாது. அதன் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது. கல்வியறிவு ஒரு காரணமாகவும், சம்பாதிப்பது மறு காரணமாக இருக்கலாம். சுதந்திரமும், 'எனக்கு எல்லாம் தெரியும்' என்கின்ற தலை கணமும் மற்ற காரணிகளாய் இருக்கலாம். கல்வி நம்மை செம்மை படுத்த வேண்டுமே தவிர,திமிரும் தெனாவட்டையும் வளர்க்கக் கூடாது. கொடுமை என்னவென்றால் கல்விக்கூடங்கள் இன்று குப்பைக்கூடங்களாய் மாறிப்போன அவலநிலையை காண்கின்றோம். ஆசான் முதல் ஆருயிர் நண்பர்கள்வரை பேச்சு வழக்கு இப்படி மாறிப்போனது கண்டு இதயத்தில் ரத்தம்தான் வடிகிறது. அப்போதெல்லாம் பள்ளிகளில் தார்மீக வகுப்புகள் ( மாரல் கிளாஸ்) தினமும் நடை பெற்றது. ஓரளவாது மாணவரிடை ஒழுக்கம் பேணி காக்கப்பட்டது. அவை அந்த தலைமுறைக்கே சென்றடைந்தது. இன்றோ மார்க்.. மார்க்...என்று மதிப்பெண்ணை வைத்து எடைபோடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அதையும் தாண்டி பள்ளிகள் குடி,போதை பொருள்களின் கூடாரங்கள் ஆகிவிட்டன.. ஆக்கப்பட்டுவிட்டன. இதுகூட வார்த்தைகள் தடிமனாவதற்கு முக்கிய காரணமாகிவிட்டது.
வேறொரு நிலையிலிருந்து யோசிப்போம். படிக்கும்போதும் போட்டி பொறாமை..படித்து முடித்தபின்.. படிப்புக்கேற்ற வேலையில்லை..வேலைக்கேற்ற ஊதியமில்லை. அதனால் ஏற்படும் ஏமாற்றம், மன அழுத்தம், எண்ணச்சிதைவு என்று காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். எதற்கெடுத்தாலும் டென்சன். எதோடும், யாரோடும் ஒத்துப்போக முடிவதில்லை. பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிகவும் குறைந்து விட்டது. மேலும் குறைந்து கொண்டே வருகிறது. இது எங்குபோய் முடியுமோ தெரியவில்லை?
நாம் சுதாரத்துக்கொள்ளும் தருணம் இது. பெரியவர்கள், மூத்தவர்கள் இளைய சமுதாயத்தினரின் சவால்களை புரிந்து கொள்ளவேண்டும். இளையவர்கள் மூத்தவர்களின் அறிவையும், அனுபவத்தையும் மதிக்க கற்று கொள்ளவேண்டும். இடையில் விளையாடும் ஈகோ அதுதான் ஆணவம், திமிர், இறுமாப்பு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு இருதரப்பினரும் நடந்து கொள்ளவேண்டும். நடந்து கொள்ள முயற்சியாவது செய்யவேண்டும். மூத்தவர்கள் இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்தையும், பிறந்து வரும் சந்ததியினரையும் மனதில் நினைத்து நடை உடை பாவனை மற்றும் வாய் வார்த்தைகளை உபயோகிக்கவேண்டும். இளைய சமுதாயத்தினரோ மூத்தவரை மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தவேண்டும்.
சுயநலத்தை விட்டுவிட்டு இரு தரப்பினரும் இதை கடைபிடித்தால் வளமான.. நிம்மதியான.. போற்றத்தக்க வாழ்வியலை நாம் வாழலாம். அனுபவிக்கலாம். இல்லையென்றால் வார்த்தைப் போர்.. உலகப் போராகிவிடும் சூழ்நிலை உருவாகி விடும். முளையிலே கிள்ளி எறிவோம். மரமாக.. தோப்பாக வளர்ந்து விட்டால் வெட்டவும் முடியாது. எரிக்கவும் முடியாமல் போய்விடும். அப்படியே எரித்தாலும் நம்மையும் சேர்த்து எரித்து விடும். எச்சரிக்கை மணி அடித்துவிட்டேன். செவிமடுத்து கேளுங்கள்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (5-Feb-25, 9:16 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 3

மேலே