காதல் காதல் காதல்

#கொஞ்ச(ம்) காதல்

கொஞ்சம் காதல் எழுதவா
கொஞ்சுங் காதல் எழுதவா
அஞ்சுங் காதல் வாழுமா -
அன்பே
அச்சம் நீங்கி அருகில்வா..!

விஞ்சு கின்றாய் பேரழகில்
வஞ்சிக் கொடியே
பூவுலகில்
அஞ்சுகமே வாய்ப் பேசு
அன்புச்
சாமரம் அதில்வீசு..!

கோடை என்றால் குளிராவாய்
குண்டு விழியால்
பனிதூவாய்
வாடைத் தென்றல்
வீசும்நாள்
வசியங் கூட்டும்
தணலாவாய்..!

மழலைப் பேச்சில்
மயக்கிடுவாய்
மயங்கச் செய்தே
மகிழ்ந்திருபாய்
உழன்றி ருப்பேன்
உன்நினைவில்
ஊடிக் களிப்பாய்
என்கனவில்..!

அலைப்பே சிக்குள்
அடைகாப்பேன்
அழகுச் சிலையுனை
அதில்காண்பேன்
வலைக்குள் பேச்சு
வரம்போடு
வரங்கள் தருவாய்க் குறும்போடு..!

இன்ஸ்டா கிராமில்
இனித்திடுவாய்
இன்முகங் காட்டிச் சிரித்திடுவாய்
இன்பங் கொள்ளை
காண்கையிலே
இதய மளிப்பேன்
பதிவினிலே..!

எட்டாத் தூரம் உன்வீடு
இருக்குது ஆன்லைன் நம்மோடு
கிட்டக் கொண்டு சேர்த்துவிடும்
கிழக்கும் மேற்கும்
கூடிவிடும்..!

கானம் பாட ஓடிவா
காதல் மயிலே ஆடிவா
வானம் பூமி மறந்திருப்போம்
வற்றா அன்பில் நனைந்திருப்போம்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (13-Feb-25, 9:54 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 62

மேலே