வளநாடு வயநாடு
வளநாடு வயநாடு இன்றங்கே இடுகாடாய்
ஆன தய்யா !
களிப்போடு கனிந்திருந்த வாழ்வதுவும் மறைந்தங்கு
போன தய்யா !
எழில்பொங்கி விருந்தளித்த மலையதுவும் மண்ணாகி
கரைந்த தய்யா !
தொழல்பலவும் துணையாகி இருந்தநிலை அத்தனையும்
தொலைந்த தய்யா !
பெண்டீரும் பிள்ளைகளும் பெருமழையில் வீழ்ந்தங்கே
போன தய்யா !
மண்வளத்தைப் பெருக்கிவைத்த மானுடமே மண்ணுக்குள்
புதைந்த தய்யா !
கண்டகண்ட இடமெங்கும் காட்டுவெள்ளம் கண்மூடிப்
புகுந்த தய்யா !
புண்பட்டு துன்புற்று பேரழிவில் மலையூர்கள்
கிடக்கு தய்யா !
ஊரிருந்த இடமெல்லாம் மண்மூடி கல்நிறைந்து
போன தய்யா !
பேராசை கொண்டமழை பேரிடரைத் தந்துவிட்டு
போன தய்யா !
கூறிடவே முடியாத கொடுமையினை விதைத்திங்கு
வைத்த தய்யா !
பேரிடலால் பெரும்பழிக்கு உள்ளாகி என்றென்றும்
கிடக்கு மய்யா !