புரட்சியாளர் அம்பேத்கர்
தாழ்ந்த சாதிஎனச் சொல்லி
தன்னை தாழ்த்திய சமுதாயம்
போற்றிப் புகழ்ந்து கொண்டாட
போராடி உயர்ந்த புரட்சிமகன்
பற்பல வேதனை எதிர்கொண்டு
பகலிர வெனவே பாடுபட்டு
சாதியில் சமரச நிலைதோன்ற
சாதித்து சாதனை செய்தமகன்
சந்தித்த சோதனை ஒன்றிரண்டா?
நிந்தனை கண்டது கரையுண்டா?
தீண்டாமை தீயினை வேரறுக்க
தாண்டிய தடைக்கு எண்ணுண்டா?
தன்னந்தனி ஆளாய் துணிவுடனே
தன்நாட்டு அரசியல் சாசனத்தை
வனைந்து வழங்கிய வள்ளலவர்
நினைந்து வணங்க வேண்டியவர்
நூலகக் கடலில் தினமூழ்கி
ஆலயக் கோபுரம்போ லுயர்ந்தார்
பட்டங்கள் கல்வியில் பலபெற்று
பண்பினில் இமயம் எனநின்றார்.
சொ, பாஸ்கரன்

