படைப்புக்கள் காட்டும் காலத்தின் கண்ணாடி

படைப்புக்கள் காட்டும் காலத்தின் கண்ணாடி

கலைகள் பல வகைகளில் பல விதங்களில் வாசகர்களை அல்லது இரசிகர்களை மகிழ்விக்கின்றன. அவைகள் கலைகளாகவும் உரையாடல் களாகவும், காட்சிகளாகவும், பாட்டுக்களாகவும், கூத்துக்களாகவும், நாடகங் களாகவும் பல வடிவங்களில் காண்பவர்க்கு அல்லது கேட்பவர்க்கு பரவசத்தை அளிக்கிறது
நம் தமிழ் இலக்கியத்தில் படைப்புக்களான, கவிதை, கட்டுரை நாடகம் சிறுகதை, நாவல், குறுங்கதை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், இவைகள் நம் மனதுக்கு தரும் மகிழ்ச்சிக்கு அளவுதான் ஏது?
சிறுகதைகள், கதைகள், காலத்தின் கண்ணாடிகள் என்று சொல்லலாம். அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த சிறு சிறு சம்பவங்கள், சிறுகதைகளாக உருவாக்கம் ஆகிறது. அதை படைக்கும் எழுத்தாளன் வாசகர்களை அன்றைய கால கட்டத்துக்கு, கதையை வாசிப்பதின் மூலம் அழைத்து செல்கிறான்.
தமிழ் இலக்கியத்தில் கதைகள் உருவான காலந்தொட்டு வாசிப்பு பழக்கத்தை தலைமுறை வாசிப்பின் மூலமாகவோ அல்லது தாங்களாகவே வாசிப்பை மேற்கொண்டு இருப்பவர்களோ, இந்த சிறு கதைகளை வாசிக்கும் போது அன்றைய காலகட்டத்தில் சமூக சூழ்நிலை எப்படி இருந்தது? ஏன் காலத்தின் (இயற்கை) சூழ்நிலைகளை கூட எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது அல்லவா?
உதாரணமாக இரண்டு மூன்று நூற்றாண்டு முன்னால் இருந்த காலங்களில் நடைபெறும் நிகழ்வுகளையோ அல்லது சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்சிகள், அது காதலாகவும் , சண்டையாகவும், வஞ்சகங்களாகவும், நட்பாகவும் இருக்கலாம் இப்படி அன்றைய கால கட்டத்தில் மனித உணர்வுகளால் நடக்கும் நிகழ்ச்சிகளை, சிறுகதைகளாக்கி தரும் படைப்பாளனின் கதைகளை வாசிக்கும் வாசகன் கண் முன்னால் அன்றைய காலகட்டத்தில் எப்படி இருந்தது சமூக வாழ்க்கை, இயற்கையின் செயல்பாடு போன்றவைகளை அறிய முடிகிறது. அதனால் சிறுகதைகளை ஒவ்வொரு காலத்தின் சூழ்நிலைகளை காட்டும் கண்ணாடி என்பதில் தவறேது?
நம் இலக்கியத்தில் சமூக வாழ்க்கையை பற்றிய சிறுகதைகள் இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகத்தான் வெளி வந்து கொண்டிருக்கிறது. இது படைப்பாளிகளின் தவறா? என்று கேட்டால் பதில் சொல்ல முடியாத சூழ்நிலை. காரணம் தமிழில் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் தொட்டுத்தான் அன்றைய சமூக வாழ்க்கையின் நிகழ்வுகள் கதையாக்கப்பட்டிருக்கிறது என்று கருதலாம்.
அதற்கு முன்னால் நூல் வடிவில் வராவிட்டாலும் செவி வாயிலாக பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும், படைப்பாளிகள் மூலமாக சிறு கதைகளாக, பாட்டுக்களாக, கூத்துக்களாக வெளி கொணர்ந்திருக்கலாம். என்றாலும் அவைகள் காலம் தொட்டு நகர்வுகளாக நகர்ந்து நகர்ந்து நமக்கு கிடைக்கும் போது நூல் வடிவில் மட்டுமே சமூகத்தின் வாழ்வியலை அறிந்து கொள்ள முடிகிறது. அதனால் படைப்பாளிகளை நாம் எங்கனம் குறை சொல்ல முடியும்?
அப்படி வாய் வழியாக செவிவழியாக வெளி வந்த படைப்புகள் இன்றைய காலகட்டத்தில், ஏதோ ஒரு விதத்தில் நமக்கு கிடைக்கும் போது (உ..ம் ஒலி, ஒளி புகைப்படம், சித்திரங்கள்) அவைகள் புராணங்களாகவோ, அல்லது அரசமார்களின் வாழ்க்கைகளையோ, முழுக்க முழுக்க பக்தி மார்க்கமாகவோ மட்டுமே நமக்கு காட்டப்பட்டு கொண்டிருக்கிறது, நம்மால் ஏதோ ஒரு அரசரின் கீழ் ஆண்டு கொண்டிருந்த காலத்தில், அந்த நாட்டில் வாழ்ந்த நம்மை போன்ற சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றி அறிய முடியாமல் போய் விடுகிறது. இது ஒரு ஏமாற்றமான செய்திதான்.
இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் வில்லுப்பாட்டு, கதா கலாட் சேபம், கூத்துக்கள், செய்யுள்கள், பாடல்கள் போன்றவை ஊர் ஊராக, நாடு நாடாக கலைஞர்களால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவைகள் முன்னர் சொன்ன கேட்க வரும் பாமர மக்களை ஏதோ ஒரு அதி தீவிர நிலையிலேயே காண்பிக்கப்பட்டிருக்கிறது. இது ஏற்காத கருத்தாக சிலருக்கு தோன்றலாம். ஆனால் ஏன் அப்படி சொல்லப்படுகிறது? என்றால் பக்தியினால் மட்டுமே என்னும் ஒரு வித மயக்க நிலை புராணக்கதைகள் மூலம் மக்களிடையே பரவியது. அடுத்து இராஜ நம்பிக்கை, இந்த நாட்டின் ராஜாதான் நமக்கு எல்லாம் என்னும் வகையில் ஆடல் பாடலாக, மக்களுக்கு தீவிர நம்பிக்கை வைக்கும் வண்ணம் காட்டப்பட்டு கொண்டிருந்திருக்கிறது.
ஒரு ஏழை, அல்லது நடுத்தர, ஓரளவு உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை, அன்றாட பிழைப்பு, அவர்களுக்குள் ஏற்படும் காதல், சண்டை, துரோகம், போன்றவைகள் எதுவும் நம்மால் அறிய முடிவதில்லை. அதே நேரத்தில் அந்த காலகட்ட ராஜாக்களின், காதல், வீரம், போன்ற வாழ்க்கையை மட்டும் அறியமுடிகிறது. இது ஏமாற்றமில்லையா?
இலக்கியம் என்பதே சாதாரணமக்களின் வாழ்க்கை தரத்தையும், முறையையும் வாசகனுக்கு கடத்துவதும், அறிய வைப்பதும் அதன் பணிதான். ஆனால் பக்தி, அரசு, அரசாங்கத்தின் மீது அளவுக்கு மீறிய விசுவாசம், அரசர்களின் வீரம், போர், காதல் போன்றவைகளை மட்டும் நமக்கு காட்சிப்படுத்தி, செவிப்படுத்தி இவைகள் மட்டும்தான் இலக்கியமா? என்னும் கேள்வியை நமக்குள் விதைக்கிறது.
கடைசியாக ஒரு சின்ன உதாரணம் சொல்லுவதென்றால் போன நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதர்களின் சமூக வாழ்க்கையை புதுமைபித்தன், காட்டுகிறார். அதை வாசிக்கும் நாம் அன்றைய கால கட்ட சூழ்நிலைக்குள் சென்று விடுகிறோம் அல்லவா?
அடுத்து ஜெயகாந்தன், அசோகமித்திரன், க.ந.சு ப, கு.பா, அழகிரிசாமி இப்படி பல பல எழுத்தாளர்களால், அந்தந்த காலகட்டத்தின் சமூக வாழ்க்கை முறையை, சிறுகதை, நாவல்கள், நாடகங்கள், போன்றவைகளால் நம் கண் முன்னால் கொண்டு வந்து அதன் மூலம் நமக்கு காட்டுகிறார்கள்.
அப்படி அன்றைய காலகட்ட சமூக வாழ்க்கையில் மனிதர்களின் வாழ்க்கையை நாம் வாசிக்கும்போதோ, கேட்கும்போதோ, அன்னைக்கு தங்கம் பவுனு இரண்டு ரூபா, அஞ்சு ரூபா, பத்து ரூபா..! இப்படி சொல்லி பெருமூச்சு விட்டாலும் மனதுக்குள் ஒரு சின்ன சந்தோசம் நூழிலையாய் ஓடி ஏதோ நாமே அந்த நகைகளை வாங்கியது போல மகிழ்ந்துதான் போகிறோம்.
அதை விடுங்கள் அன்னைக்கெல்லாம் இரண்டு ரூபா எடுத்துட்டு போனா இரண்டு பை நிறையா மளிகை சாமான் வாங்கிட்டு வரலாம்” இந்த மாதிரி அன்றைய நிகழ்வுகளை கேட்கும்போதோ, வாசிக்கும்போதோ நமக்குள் தோன்றும் ஒரு ஏக்கம்..? அதுதான் சார் ஒவ்வொரு காலகட்டத்தில் படைக்கப்படும் படைப்புக்கள் காட்டும் காலத்தின் கண்ணாடி

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Aug-25, 12:08 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 4

சிறந்த கட்டுரைகள்

மேலே