மானுட நேயம் காப்போம்
மானுட நேயம் வளர்ப்போம்
நேர்மை கொண்டோர் வாருங்கள்
நேசக் கரத்தினை நீட்டுங்கள்
உதவிடத்தானே கரம் நமக்கு
உன்னதம் படைக்கட்டு மவைபிறர்க்கு..!
ஆதர வற்றோர் இல்லங்கள்
ஆனது யாரால் கூறுங்கள்
அன்பு செய்தால் ஒரு கூரை
அதனை விடுத்தால் பலகூரை..!
சுயநலம் உம்மில் உண்டென்றால்
சுடுகாட் டிற்கு விரட்டுங்கள்
நேயத்திற் கதுவே முதலெதிரி
நெஞ்சில் ஏற்றிச் செயல்படுவீர்..!
திறமை யிருந்தும் பலனில்லை
ஏழைக் கல்வி இறக்கத்திலே
ஏற்றிவைக்க இரங்கிடுவீர்
ஏணி யாகி உதவிடுவீர். !
குருதிக் கொட்டத் துடித்தாலும்
கொஞ்சமும் மனதில் ஈரமில்லை
கைபேசி வழியே படம்பிடிக்கும்
கல்மனத் தாரால் துன்பநிலை
விபத்தில் எவரும் விழநேரின்
வேடிக்கைப் பார்த்து நில்லாதீர்
வேண்டிய உதவி யவர்க்காக
விரைந்து புரியத் தவறாதீர்..!
அழிகின்ற நேயம் காப்பதற்கு
அன்பெனும் நீரைப் பாய்ச்சுங்கள்
அழகாய் மானுடம் சிறப்பதற்கு
அன்பே காரணம் அறியுங்கள்..!
இரக்கம் தொலைத்த மானுடத்தின்
இதயத்தில் அன்பை ஊன்றுங்கள்
ஆல்போல் தழைக்கட்டும் நேயங்கள்
அன்பால் ஒளிரட்டும் தேசங்கள்..!
#சொ.சாந்தி

