வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம் விருந்தோம்பல் பெண்டீர் சிறப்பு - சிறுபஞ்ச மூலம் 42
நேரிசை வெண்பா
வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்
வெருவாமை வீழ்ந்துவிருந் தோம்பித் - திருவாக்குந்
தெய்வதையும் எஞ்ஞான்றுந் தேற்ற வழிபாடு
செய்வதே பெண்டீர் சிறப்பு! 42
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
தம்கணவரது வரும்படிக்குத் தகுதியாகிய வழங்குதலை (செலவை)த் தெரிந்து (செய்து), பந்துக்கள் (தங்கள் கோபச் சொல்லால்) பயந்தொதுங்காமல், (அவர்களை) விரும்பி விருந்தினரைப் பேணி செல்வத்தை மென்மேலும் உயரச் செய்கின்ற தெய்வத்தையும் எப்பொழுதும் தெளிவாகிய வணங்குதலைச் செய்வதே மாதர்க்குரிய சிறப்புகளாம்.
கருத்துரை:
இல்வாழ்க்கைக்குத் துணைவியர்க்குச் சிறப்புக்களாவன கணவருடைய வரவினளவைத் தெரிதலும், அதற்குத்தக்க செலவு செய்தலும், சுற்றந் தழுவுதலும், விருந்தோம்பலும், தெய்வத்தை வழிபடுதலும் என்பனவாம்.
சுற்றம் – சூழ்வாரை யுணர்த்தியது!