நான் யார்

நான் யார்?
பெற்றோர்கள் இல்லாத அந்த மகளிர் விடுதியின், கவுரவ இயக்குநரான எலிசபெத் அம்மையார், தனது காரியதரிசியான கனகத்தை கூப்பிட்டு அவளுக்கு கிடைத்திருக்கும் சந்தோசமான விசயத்தை சொன்னபோது முகத்தில் எந்த உணர்வு பிரதிபலிப்பும் இன்றி கனகம் அந்த செய்தியை வாங்கி கொண்டாள்.
எலிசபெத் அம்மையாருக்கு ஆச்சர்யமாக இருந்தது? என்ன இந்த பெண்? இந்த இடத்தில் யாருக்கும் கிட்டாத திருமண வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. அதுவும் கணகம் போன்ற பெண்தான் எனக்கு வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கும் மணமகன்.
எலிசபெத் அம்மையார் அயல்நாட்டை சேர்ந்தவர், வயது நாற்பது இருக்கும், திருமணம் செய்து விவாகரத்து வாங்கியவர். ஹங்கேரி நாட்டில் இருந்து ஒரு சமூக அமைப்பின் “கலந்தாய்வு மாநாட்டுக்காக” தமிழ்நாட்டிற்கு வந்தவர். ஹங்கேரியில் அரசு பணியில் சமூக நலன் சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்.
மாநாட்டு நிகழ்வுகள் முடிந்து, தமிழ்நாட்டில் மாநாட்டை நடத்திய அமைப்பு, கலந்து கொண்ட வெளி நாட்டவரை அழைத்துக்கொண்டு உள்ளுரில் இருக்கும் சமூக சூழ்நிலைகளை காட்டுவதற்காக, எல்லா ஊர்களுக்கும் கூட்டி சென்றார்கள்.
எலிசபெத் அப்பொழுது தாய் தகப்பனை இழந்த பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள், என்பதை கண் கூடாக கண்டு விட்டு, தன் நாட்டிற்கு சென்று பணி ஓய்வு வாங்கி, பணிக்கொடைகள் அனைத்தையும் பெற்று கொண்டு இந்தியா வந்தவர்கள்.
தன் கையிருப்பு மற்றும், தன் நாட்டில் இருக்கும் செல்வந்தர்கள் ஒரு சிலரிடம் நன்கொடை பெற்று தாய் தகப்பனை இழந்த பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் இந்த ஆசிரமத்தை சிரமபட்டு அமைத்தார். திண்டுக்கல் நகரில் மலை ஓரமாய் கிட்டத்தட்ட மூன்று ஏக்கரில் அமைந்திருந்தது இந்த ஆசிரமம்.
தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் “பெற்றோர் இல்லாமல்” அநாதையாகும் பெண் குழந்தைகளை இவர்களே தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை ஏற்று திறம்பட நடத்தி வந்து கொண்டிருந்தார்கள்.
இருபது வருடங்களில் அரசாங்கம் கூட இங்கு பெண் குழந்தைகளை அனுப்பி வைத்து காப்பாற்றி வளர்க்க சொல்லும் அளவுக்கு இதன் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. எலிசபெத் பதினைந்து வருடங்கள் நிர்வாகியாக பணி புரிந்து பின் தானாக ஓய்வு பெற்று, தனது அடுத்த நிலையில் இருந்த நிர்மலா அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, தனது நாட்டிற்கு செல்ல விரும்பாமல் இங்கேயே தங்கி விட்டார்.
நிர்மலா அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தாலும், ஆசிரமத்து இயக்கும் அமைப்பு இவரை ஒரு “கவுரவ இயக்குநராக” இருக்கும்படி கேட்டு கொண்டதால் இவரும் தன்னாலான உதவிகளை செய்து கொண்டு இங்கு தங்கியிருக்கிறார்.
அவர் திருமணமே செய்து கொள்ளாததால், தனது நாட்டிற்கு சென்று தனித்து வாழ்வதை விட இங்கு மக்களோடு மக்களாக வாழ்ந்து கொள்வோம் என்னும் எண்ணத்தில் தங்கி விட்டார்கள். அதே நேரம் தனது நாட்டில் செய்த அரசுபணியின் காரணமாக கிடைத்தை ஓய்வூதியத்தை கூட இங்கு தங்கும் கட்டணமாக கொடுத்து கொண்டிருந்தார்.
பெற்றோர்கள் இல்லாமல் வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் இங்கிருந்து படித்து நல்ல வேலைக்கு சென்றவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் ஒரு சிலர் இன்னும் தொடர்பில் இருந்து தன்னாலான உதவிகளையும் செய்து கொண்டிருந் தார்கள். அதே போலத்தான் வளர்ந்த நிறைய பெண்களை திருமணம் செய்து கொள்ள நினைத்து பெண் கேட்டு வரும் இளைஞர்களை இவர்களின் அமைப்பில் இருக்கும் ஒரு “புலன் அமைப்பு” அந்த இளைஞர்களை பற்றி நன்கு விசாரித்து, அவர்களின் குணநலன்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நடத்தை இவைகளை அலசி அவர்கள் ஒப்புதல் கொடுத்த பின்புதான் இங்கிருக்கும் பெண்ணை திருமணம் செய்து வெளியே அனுப்புவார்கள்.
அப்படி வந்த வாய்ப்புதான் ‘கார்த்தி’ என்னும் இளைஞன், பெங்களூர் ஐ.டி நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணி புரிந்து கொண்டிருந்தவன், தன்னுடைய பெற்றோர்கள் சிறு வயதில் இறந்து விட்டதால், தன்னை போன்ற நிலையில் இருக்கும் பெண்ணத்தான் திருமணம் செய்து கொள்வது என்னும் பிடிவாதத்தில், இங்கு வந்தவன் “கனகத்தை” கண்டதும் பிடித்து போய், தலைமை நிர்வாகியான நிர்மலா அம்மையாரிடம் இதை பற்றி விசாரித்திருந்தான்.
நிர்மலா அவனை இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருக்க சொல்லி விட்டு அவனை பற்றிய அனைத்து விவரங்களையும் “புலன் அமைப்பிடம்” விசாரிக்க சொல்லி அவர்களும் இவனை பற்றிய நல்ல குறிப்புகள் கொடுத்த பின்னால், எலிசபெத் அம்மையாரிடம் சென்று விவரம் தெரிவித்தார்கள்.
கனகம் அப்பொழுது எலிசபெத் அம்மையாருக்கு காரியதரிசியாக இருந்ததால், மிகுந்த மகிழ்வுடன் கனகத்திடம் இதை பற்றி தெரிவித்தார். ஆனால்..அவள்..?
அவளின் போக்கு எலிசபெத்துக்கு மட்டுமல்ல, நிர்மலாவுக்கும் சங்கடமாக இருந்தது. நாளை விருப்பமில்லாத பெண்ணை யாருக்கோ திருமணம் செய்து அனுப்பி விட்டார்கள் என்னும் பழிச்சொல் கூட வரலாம், அதனால் கனகத்தின் அறையில் அவளுடன் தங்கும் மேரியையும், பிரேமாவையும் கூப்பிட்டு கனகத்திடம் இதை பற்றி பேச சொன்னார்கள்.
கனகம் அப்படி ஒன்றும் அழகியல்ல, என்றாலும் திருத்தமான முகம், மாநிறம், மற்றும் மெலிந்த உடல், பட்டதாரியாகவும் இருந்தாள், காரியதரிசிக்குரிய கணிணி பணிகள் அனைத்தையும் கற்றிருந்தாள்.
என்னதான் பெண்கள் ஒற்றுமையாக இருப்பது போல வெளியில் தெரிந்தாலும் அங்குள்ளவர்களுக்கு ‘கனகத்திற்கு’ கிடைத்த வாய்ப்பு அவள் மீது ஒரு வித பொறாமை எண்ணத்தை கொடுக்கத்தான் செய்தது.
மேரிக்கும், பிரேமாவுக்கும் கூட இத்தகைய எண்ணம் இருந்தது. அவர்கள் இருவரையும் விட சுமாரான கனகத்துக்கு எப்படி இப்படி ஒரு அதிர்ஷ்டம்? அதுவும் கண்ணுக்கு அழகான வாட்டசாட்டமான இளைஞன் கார்த்தி அவனுக்கு எப்படி இவளை பிடித்தது?
இருந்தாலும் வெளியே சொல்லமுடியாமல் கனகத்தை அன்று இரவு ‘கேலியும் கிண்டலும்’ செய்து நீ எப்படியோ எங்களை விட்டு போக போறே? ம்… இழுத்தனர். அவர்களின் பேச்சுக்கு எந்த விதமான பிரதிபலிப்பையும் காட்டாமல் அவள் பாட்டுக்கு தான் தூங்க போவதாக சொல்லி சென்று விட்டாள்.
இவர்கள் இருவரும் மறு நாள் நிர்மலாவிடம் கனகத்துக்கு அந்த கல்யாணத்துல இஷ்டமில்லை போலிருக்கு, என்று சொல்லி விட்டார்கள்.
நிர்மலாவுக்கு கொஞ்சம் மனசு தடுமாறியது, கார்த்தி நல்ல பையன், அவனை பற்றிய குறிப்புகள் மனதுக்கு நெருக்கமாக இருந்தது, இந்த காலத்தில் இப்படி ஒரு பையன் கிடைப்பது எவ்வளவு சிரமம்? இவள் ஏன் இப்படி இருக்கிறாள்?
கனகத்தை நேரிடையாக அழைத்த நிர்மலா, உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லையின்னு தோணுது, அதனால நான் இன்னைக்கு அந்த தம்பிகிட்ட சொல்லிடலாமுன்னு நினைக்கிறேன். இதை சொல்றதுக்கு எனக்கு மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இங்க வளர்ந்த பொண்ணுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைச்சும் தட்டி போறது மனசுக்கு சங்கடமா இருக்கு.
கனகம் நிர்மலா அம்மையாரையே சிறிது நேரம் உற்று பார்த்தவள், “மேம்” எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையின்னு நான் சொல்லலை, கல்யாணம், குடும்பம், இப்படி எல்லாம் கிடைக்கறதுக்கு எனக்கு தகுதி இருக்கான்னு என் மனசு சின்ன வயசுல இருந்தே, எனக்குள்ளே கேட்டுகிட்டே இருக்கு. அதை மீறி நான் இந்த கல்யாணத்தை பண்ணிட்டாலும் என் மனசு ‘ஓரத்துல’ இந்த கேள்வி எழுந்திட்டே இருக்கும்.
நிர்மலாவுக்கு ஏதோ புரிந்தது, கனகம் மன குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை கண்டு கொண்டவர்கள், உனக்கு என்ன மனசுக்குள்ள எண்ண் தோணுதோ அதை விருப்பமிருந்தா நீ தாராளமா என் கிட்ட சொல்லலாம், அதுவும் விருப்பமிருந்தா?
கனகம் தயங்கி தயங்கி கேட்டாள் என்னை எப்படி தத்து எடுத்தீங்க?
இது என்ன கேள்வி? கனகத்தை பார்த்த நிர்மலா, உன்னைய மட்டுமில்லை, அன்னைக்கு மட்டும் நாலு பொண் குழந்தைங்களை பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி அரசாங்கம் எங்க கிட்ட அனுப்பி வச்சது.
‘அதுதான் மேம்’ என் மனசு முழுக்க அரிச்சுகிட்டிருக்கற கேள்வி. நான் தெருவோரத்துலயோ, இல்லை குப்பை தொட்டியிலயோ கிடந்த குழந்தையோன்னு என் மனசு கேட்டுகிட்டே இருக்குது. அப்படி இருந்தா நான் ஒரு ஒழுக்கமான முறையில பிறந்தவளா இல்லாம இருக்க கூடிய நிலையில இப்படி ஒரு கெளரவமான கல்யாணம் எனக்கு அவசியமான்னு? கேட்டுகிட்டே இருக்குது என் மனசு, சொல்ல சொல்ல அவள் கண்களில் கண்ணீர்.
நிர்மலா திகைத்து போனாள், ஒரு பெண்ணின் மனசுக்குள் எப்படி பட்ட மன வலிகள் கொண்ட குழப்பம், சட்டென கனகத்தை பிடித்து இழுத்து சென்றவள் தன் அலுவலகத்தில் இருந்த பீரோவை திறந்து பழைய மக்கிப்போன “கோப்புகளை” தேடி கடைசியாக அடியில் இருந்த கோப்பை வெளியில் எடுத்தாள்.
மள மளவென கோப்பில் இணைக்கப்பட்டிருந்த தாள்களை ஒவ்வொன்றாக பிரித்து பார்த்துகொண்டே வந்தாள். தாள்கள் நைந்து தொட்டால் கிழியக்கூடிய நிலையில் இருந்தது, சட்டென ஒரு ‘தாளின்’ மீது கவனம் செலுத்தியவள் முகம் முழுக்க பிரகாசமாக “இதோ பார் நீயும், உன்னை போல நான்கு பேரும் இங்கு ‘தத்தாக’ அரசாங்கம் கொடுக்க வந்த போது, வந்த செய்தி
“பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அந்த நேரத்தில் ஒரு மலைக்காட்டுக்குள் பக்கத்து ஊரை சேர்ந்த பொதுமக்கள் பலர் குடும்பம் குடும்பமாக சென்று சாமி கும்பிட்டு கொண்டிருந்த போது, பெருகி வந்த வெள்ளம் சாமி கும்பிட்டு கொண்டிருந்தவர்களை அடித்து சென்று விட்டது. அன்று தப்பி பிழைத்த அவர்களின் குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை யாரும் ஏற்றுக்கொள்ள முன் வராததால் அரசு இங்குள்ள இந்த காப்பகத்திடம் ஒப்படைத்தது”.
அன்னைக்கு வந்த குழந்தையில நீயும் ஒருத்தி. மத்த மூணு பேர்ல இரண்டு பேரு வேலை கிடைச்சு வெளியூரு போயிட்டாங்க, ஒரு பொண்ணை அவங்க உறவுக்காரங்க தாங்களே வளர்க்கறதா கூட்டிகிட்டு போயிட்டாங்க.
அந்த செய்தியையே நீண்ட நேரம் உற்று பார்த்த கனகத்தின் கண்களில் கண்ணீர், ‘மேம்’ அப்ப நான் தவறான வழியில வந்த குழந்தை இல்லை, வெளியுலகத்துல குடும்பமா இருந்தவங்களோட குழந்தை, அப்படித்தானே..!
அடி அசடே, இதையவா நினைச்சு இத்தனை வருசம் மனசுக்குள்ள புழுங்கிட் டிருந்தே, நீ ‘இயற்கையோட’ கோபத்துல பாதிக்கப்பட்ட குழந்தை அவ்வளவு தான். நீயும் ‘கெளரவமா’ கல்யாணம் செய்து ஒரு குடும்பத்தை உருவாக்க போற பொண்ணூ, போதுமா?
கனகத்தின் தலையசைப்பில் அவள் முகம் “பூவாய் மலர்ந்திருந்ததை” நிர்மலா பார்த்தார்கள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Dec-25, 3:05 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : naan yaar
பார்வை : 7

மேலே