சிதையும் திராவிடம்

திராவிடம் என்பது தமிழ் மக்களின் இனவிடுதலைக் கருத்தியலாகும். இக்கருத்தியலின் தொடக்க இயக்கமாக நீதிக்கட்சி விளங்கியது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டி நீதிக்கட்சி செயல்பட்டமையே அதனைத் திராவிடக் கருத்தியலுக்குள் கொண்டு வந்தது. டி.எம். நாயர், பி.டி. தியாகராயர் ஆகியோரே திராவிடக் கருத்தியலின் முன்னோடிகளாவர்.

இருப்பினும், திராவிடக் கருத்தியலுக்கு தெளிவான வடிவம் தந்து அதனைச் செயல்படுத்த முயன்றவர் தந்தை பெரியார் தான். தான் அங்கம் வகித்து வந்த பேராயக் கட்சி ஒரு குறிப்பிட்ட சாதியின் கூடாரமாகவும், வருணாசிரமத்தின் புகலிடமாகவும் விளங்கி வருவதைக் கண்ட தந்தை பெரியார் அக்கட்சியிலிருந்து வெளியேறி தனி சமூக இயக்கமாக திராவிட இயக்கத்தைக் கொண்டு செல்ல முனைந்தார்.

அவரது ஆரம்பகால செயல்திட்டங்களுக்கு நீதிக்கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதைக் கண்ட அவர், நீதிக்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோமான்களின் கோட்டையாகத் திகழ்ந்த நீதிக்கட்சி மக்கள் செல்வாக்கை இழந்து, வெள்ளையனின் அடிவருடிகள் என்ற இழிபெயரைப் பெற்றிருந்த காலம் அது. மக்கள் நீதிக்கட்சிக்கு எதிராக வாக்களித்தனர்.

நீதிக்கட்சி செல்வந்தர்களின் கூடாரமாக மாறிப்போனதைக் கண்ட தந்தை பெரியார், நீதிக்கட்சியைக் கலைத்து விட்டு திராவிடர் கழகத்தைப் பெரும் சமூக இயக்கமாக நடத்த முயன்றார். அதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றியும் பெற்றார்.

பெரியாரின் திராவிடக் கோட்பாட்டுக்கு அடிநாதமாக விளங்கியவை இரண்டு,
1. வருணாசிரம எதிர்ப்பு
2. கடவுள் மறுப்பு.

இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே. இந்து மதமே வருணாசிரமக் கோட்பாட்டின் ஆதார சுருதியாக விளங்கி வந்தது. அதனால் பெரியார் வருணாசிரமத்தின் வேரிலேயே கை வைத்தார்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், சாதிய ஒழிப்பு ஆகிய இவ்விரண்டிலும் பெரியாரின் கனவு குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேறியது. இருப்பினும் கடவுள் மறுப்பு விஷயத்தில் பெரும்பாலானோர் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களாகவே இருந்தனர்.

பெரியாரின் திராவிடக் கோட்பாட்டின் மீதான முதல் தாக்குதல் 1949ல் தி.மு.க தொடங்கப்பட்ட போது நடந்தது. பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டது வெளிப்படையான காரணமாகக் கூறப்பட்டாலும், அண்ணாவுக்கும், பெரியாருக்குமான கருத்துச் சிக்கல் 1947லேயே தொடங்கி விட்டது. விடுதலை நாளைப் பெரியார் துக்க நாள் என்றார். அண்ணாவோ இன்ப நாள் என்றார். தொடர்ந்து இருவருக்குமான மனவேறுபாடு முற்றி 1949ல் தி.மு.க உருவாக்கத்தில் போய் முடிந்தது.

தி.மு.க 8 வருடங்கள் சமூக இயக்கமாகத் தொடர்ந்தது. 1957ல் அண்ணாவின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்தனர். தேர்தல் அரசியலில் ஈடுபட்ட அண்ணா கடவுள் மறுப்பைக் கைவிட்டார். 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்றார். (கடவுள் மறுப்புக் கொள்கையில் தனக்கு உடன்பாடில்லை என்று அண்ணா தெரிவித்ததாக கண்ணதாசன் எழுதியுள்ளார்). இது திராவிடக் கொள்கைக்கு விழுந்த முதல் அடி.
திராவிட இயக்கத்தினர் திரைப்படத்தின் மூலம் தங்கள் கருத்தைப் பரப்பினர். எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் இக்கருத்துப் பரவலில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நேரத்தில் ஒரு புதிய முகம் தலையை நீட்டியது. கதாநாயகனாக மட்டும் நடிக்க விரும்பிய அந்த முகம் அதிகமான மக்கள் விரும்பும் கருத்துகளைச் சொல்லி, திராவிடத்தின் காட்டத்தைக் குறைத்து மக்கள் செல்வாக்கை வளர்த்துக் கொண்டது. அந்த முகம் பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட ராமச்சந்திரனுக்குச் சொந்தமானது. எம்.ஜி.ஆர் வெளிப்படையான மூகாம்பிகை பக்தர். அவர் தி.மு.கவோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அவரது செல்வாக்கு கட்சிக்கு உபயோகப்பட்டது. கட்சியின் செல்வாக்கு அவருக்கு உபயோகப்பட்டது. சினிமா என்னும் மாயையில் அகப்பட்டுக் கிடந்த மக்களை அவர் தன்வசப்படுத்திக் கொள்ள அதிக காலம் ஆகவில்லை. காலம் கனிந்தவுடன் அவர் தி.மு.கவிலிருந்து விலகினார். அ.இ.அ.தி.மு.கவைத் தொடங்கினார், அடுத்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். இது திராவிடத்தின் மீது பட்ட அடுத்த அடி.

பெரியார் சினிமா நடிகைகளை குச்சுக்காரிகள் என்பார். அவர்களுக்கு பத்திரிகைகளால் அளிக்கப்பட்ட செல்வாக்கை அவர் கடுமையாக வெறுத்தார். திராவிடக் கருத்தியல் பார்ப்பனியத்துக்கு முற்றிலும் எதிரானது. ஆனால் திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொண்ட அ.தி.மு.க திராவிடக் கொள்கைகளுக்கு சற்றும் பொருந்தாத வகையில், சட்டசபையிலேயே "நான் பார்ப்பனத்தி" என்று பறைசாற்றக்கூடிய ஜெயலலிதாவைத் தலைவராக்கியது. இது திராவிடம் என்னும் கோட்பாட்டுக்கு பெருஞ்சிதைவை ஏற்படுத்தியது.

சில வருடங்களுக்கு முன் இன்னொரு நகைச்சுவை நடந்தது. தன்னைக் கறுப்பு எம்.ஜி.ஆர் என்று அழைத்துக் கொண்ட ஒருவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார். அவர் எந்த தேசியத்தைக் குறிப்பிடுகிறார்? என்பதை எவரும் அறியார். திராவிடம் என்ற சொல் மிகக் கொச்சையாக மலினப்படுத்தப்பட்டு விட்டது.

கடந்த வாரம் ஒரு ஆங்கிலப் பத்திரிகையைப் பார்த்தேன். புட்டபர்த்தி சாமியாரின் பக்தர்கள் வரிசையில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் பெயரும், அவர் மகன் ஸ்டாலின் பெயரும் இடம் பெற்று இருந்தது.

ஆக மொத்தத்தில் திராவிடம் எங்கே போகிறது?

எழுதியவர் : (7-Nov-11, 10:08 pm)
பார்வை : 708

சிறந்த கட்டுரைகள்

மேலே