என் பாப்பா டீச்சர்

எல்லோருக்கும் தங்கள் முதல் வகுப்பு
டீச்சரை மறக்க முடியாது; இல்லையா?

மரணப் படுக்கையில் ஒருவர்
மூச்சிரைத்துக் கொண்டு இருந்தாலும்
அவர் படித்த பள்ளியில்,
அவரது முதல் வகுப்பு டீச்சரை
நினைவிருக்கிறதா?' என்று கேட்டுப் பாருங்கள்:
ஒரு புன்னகை அந்த மனிதர் முகத்தில் மலரும்.

அப்படித்தான் -
எனக்கு முதல் வகுப்பு சொல்லிக் கொடுத்த
பாப்பா டீச்சர் பற்றிய ஞாபங்களும்;

கருப்பு நிறம்; சுருள் சுருளான கேசம்;
கருப்புத் துணியில் பொதிந்து வைத்த
வைரக் கற்களாய் கண்கள்;
கையில் பிரம்பு இல்லாமலே கண்டிப்பு;
மயில் இறகு இல்லாமலே அன்பு வருடல்;
எப்போதும் கதை சொல்லும் பாப்பா டீச்சர்-
எப்போது கதை சொல்லி முடித்தாலும் எங்கள்
கை தட்டு அவருக்கு கண்ணீரை வரவழைக்கும்; 'எதற்கு டீச்சர் அழுகின்றார்?' என்பது எங்களுக்கு அப்போது விளங்காத ஒரு புதிர்.

நாங்கள் இன்றைக்கு வாழ்க்கை வானில் மின்னுவதற்கு ஒளி கொடுத்த
சூரியக் கதிரொளி பாப்பா டீச்சர்;

இருபதாண்டுகள் கழித்து
அவரின்ஞாபகம் வந்து
எப்படியோ அவரின் முகவரி பெற்று
சந்திக்க அவரது வீட்டு வாசலில் நான்;
அங்கே படியேறும் போது லேசான நடுக்கம்
சமாளித்து உள்ளே போனேன்;
வீட்டாரிடம் அறிமுகம் செய்து கொண்டேன் ;
சில விபரங்களைச் சொல்லி, பிறகு
உள் அறை ஒன்றுக்குள் போகச் சொன்னார்கள்;

ஈசிச் சேரில் ஒரு குழந்தையைப் போல்
படுத்துக் கிடந்தார் என் பாப்பா டீச்சர்;
உடல் சுருங்கிக்கிடந்தாலும், அந்த கண்களின்
ஒளி மட்டும் குறையாமால் இருந்தது;
"வணக்கம் டீச்சர்! நான் உங்கள் பழைய மாணவன்
உங்களிடம் ஒன்னாம் கிளாஸ் படித்தவன்", என்று என் பெயரையும் படித்த பள்ளியையும் சொன்னேன்
லேசான புன்னகை ; அது மட்டுமே நான் சொன்னதற்கு சிறு அங்கீகாரம் ; மற்றபடி எந்த
அசைவோ பேச்சோ இல்லை;

அவர் மருமகள் எனக்கு காபி கலக்கி
என்னிடம் தந்து விட்டு,
"அத்தைக்கு எந்த ஞாபங்களும் இல்லை; என் பெயரைக் கூட மறந்து விடுவார்;
ஒரு குழந்தையாகதான் இருக்கிறார்".
என்ற போது தான் அந்த அற்புதம் நடந்தது..
"அமுதா! இவன் என்கிட்டே படிச்ச மாணவன்;
பெயர் ராஜேந்திரன்", என்று சிரிப்போடு அவர் சொன்னது அவர்கள் வீட்டுக்கே ஒரு ஆச்சர்யம்; எனக்கோ அது ஒரு வரம்.

(அந்தப் பொழுதை இப்போது நினைத்தாலும்
கண்களில் இருந்து அருவியாய்க் கண்ணீர்-
எழுத்துகளைத் தட்டுகிற என்
விரல்களை ஈரமாக்குகின்றது)

பாப்பா டீச்சர் ஒரு குழந்தைதான்; குழந்தைகள்தான் தமக்கு எது பிடிக்கிறதோ அதைக் கடைசி வரை மறக்கமாட்டார்கள்; இல்லையா ?

எழுதியவர் : முத்து நாடன் (10-Nov-11, 2:19 pm)
பார்வை : 349

மேலே