கரை கடந்த நதி…! - சிறுகதை - பொள்ளாச்சி அபி


சாமிநாதய்யரின் விரல்கள் பரபரபவென்று இயங்கிக் கொண்டிருந்தன. இடதுகையில் பிடித்துக்கொண்டிருந்த நாரானது,வலது கையிலிருந்து வந்ந வண்ணவண்ண மலர்களால்,கண்கவரும் மாலையாகிக் கொண்டிருந்த்து.
தினசரி இந்த மதியநேரத்தில்தான்,காலையில் பறித்து வைத்த பூக்களை தொடுப்பார் சாமிநாதய்யர்.விசேஷ நாட்களைத்தவிர,காலை ஒன்பது மணிக்குள் சாமிகும்பிட கொஞ்சம் கூட்டம் வரும்.பிறகு மாலை ஆறுமணிக்கு மேல்தான் அதுவரை இடைப்பட்ட நேரத்தில் உச்சி பூஜைக்குப்பிறகு,வீட்டிற்குப் போய்,மதிய உணவும் முடித்துவிட்டு,நேரே கோயிலுக்கு வந்துவிடுவார்.

ஊரின் முகப்பில்,இந்த கோபாலகிருஷ்ணன் கோவில் அமைந்திருந்தாலும், அதையொட்டி வீடுகளோ,கடைகளோ எதுவும்,கூப்பிடு தூரத்தில் இல்லை. எனவே அவ்வப்போது கோபுரத்தைச்சுற்றி புறாக்கள் இறக்கை அடிக்கும் சப்தம் தவிர எப்போதும் அமைதியாகவே இருக்கும்.
கோவில்கணக்கில் டவுன்கடையிலிருந்து மாலைகள் எவ்வளவு வந்தாலும், கோவில் நந்தவனத்திலிருந்து மலர்களை தானே பறித்து மாலையாக்கி ஆண்டவனுக்கு தினப்படி சார்த்துவதை வெகுநாள் பழக்கமாக வைத்திருந்தார். அவர் மனைவிகூட,“உமக்கேன்னா இந்த அதிகப்படி வேலை..அந்த நேரத்தில் சித்த படுத்து தூங்கலாமே..,அர்ச்சகர் வேலைபோக அதுக்குத் தனியா, தர்மகர்த்தா உமக்கு படியளக்கிறாரோ..? எண்ணி எண்ணி அவர் தருவதை மளிகைக் கடையிலே கொடுத்தா பதினைஞ்சு நாளைக்கு காணமாட்டேங்குது.., கொஞ்சம் சம்பளம் கூட்டித்தரும்படி கேட்கிறதுதானே..?”
“அடி மண்டு..கூலிக்கு செய்யற வேலையா நான் செய்யறது..? தினப்படி மாலை கட்டிப்போடறதுங்கிறது என்னோட ஆத்மதிருப்திக்கு..,என்னாலே முடிஞ்சதை ஆண்டவனுக்கு செய்யறதிலே ஒரு சந்தோஷம்,அந்தக் கண்ணன் நமக்குன்னு என்ன உண்டோ அதைச் செய்யுறான்..,இதுலே என்னடி வேலைக்கும்,கூலிக்கும் கணக்கு..? அந்த நேரத்திலே தூங்கச் சொல்றே..மதியத்தூக்கம் சரீரக்கேடு தெரியுமோ..?.”

சாமிநாதய்யருக்கு,தன் வாழ்க்கை நலத்திற்காக,யாரையும்,எதையம் வேண்டாத மனசு.., “கிடைப்பதை வைத்துக் கொண்டு வாழக்கற்றுக் கொள்ளவேண்டும். அதுதான் பகவான் நமக்கு விதிச்சது.அதன்படிதான் எல்லாமே நடக்கும்” என்பார்.
அவர் மனைவி எவ்வளவோ முறை சொல்லியும்,சம்பளம் கூட்டித்தர வேண்டும் என்று தர்மகர்த்தாவிடம் அவராகக் கேட்டதேயில்லை.அவராக சம்பளம் ஏற்றித்தரும்போது,இது போதாது என்று சொன்னதும் இல்லை.
“உக்கும்..கோவில் குருக்களா இருக்கறவா எத்தனைபேரு வசதியோட இருக்கா,நீங்களும் இருக்கீங்களே..”அவளை இன்னும் பேசவிட்டால்,அது மனஸ்தாபத்திலதான் போய் முடியும் என்று சாமிநாதய்யருக்கு தெரியும்.“சித்த சும்மா இருக்கியா..?” என்பதோடு அவர் பேச்சை முடித்துக் கொள்வார்.

மாலையின் ஒருபக்க திண்டு பூர்த்தியாகி விட்டது.இனி மற்ற பக்கமும் சுற்றி,சின்னதாய் ஒரு குஞ்சம் வைத்துவிட்டால் முடிந்தது.வாகான நீளத்தில் தடியான ஒரு நாரெடுத்துக் கொண்டு,சுற்றத் தொடங்கினார்.கைகள் எப்போதும்போல் வேகவேகமாய் சுற்றத் தொடங்கினாலும்,மனம் என்னவோ மந்த கதியில் யோசித்துக் கொண்டிருந்தது.அவ்வப்போது தோன்றும் யோசனைகள் தான் என்றாலும்,இன்னும் அவரால் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை.

நேற்று இரவில்கூட இதுகுறித்துத்தான் அவரது சகதர்மினியும் புலம்பித் தீர்த்தாள். “ஏன்னா..வருஷத்தை முழுங்கிட்டு காலம் ஓடிட்டிருக்கு.. நெகுநெகுன்னு பொண்ணு வளர்ந்து நிக்கிறா..நீங்க மனசிலே என்னதான் நெனச்சிண்டிருக்கேள்..?” இரவு உண்டுமுடித்துவிட்டு,படுக்கையில் உறக்கத்தை எதிர்பார்த்து கண்மூடிக் கிடந்தவரை உசுப்பிவிட்டாள்.
மூன்றுவருடமாகவே தன் ஒரேமகளுக்கு திருமணம் முடிக்க பணம் ஒரு தடங்கலாய்,அவருக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டேயிருந்தது. பொன் வைக்கும் இடத்தில்,பூ வைக்கலாம் என்றுதான் இருந்தார்.அதற்கும் இதுவரை வழியுண்டான படியில்லை.அதனாலேயே வரன்கள் தானாய் வந்ததுபோலவே, தட்டியும்போயிற்று.
“நான் என்னதான் பண்றது தர்மு,நம்ம கோவில் தர்மாகர்த்தா ஏதேனும் ஏற்பாடு பண்றேண்ணிருக்கார்.இந்த வருஷத்திலே காரியம் கைகூடிரும்னுதான் நெனக்கிறேன்..”

“ஆமா..முதல் வருஷம் விளைச்சல் சரியில்லேன்னு ஒன்னும் தர முடியாதுன்னார்.இரண்டாம் வருஷம் மனைவிக்கு ரோகம்வந்து இறந்து போயிட்டா,அடுத்த வருஷம் கும்பாபிஷேகத்திற்கு செலவு அதிகமாயிடுச்சுன்னு கைவிரிச்சார்.இப்படியே மூணு வருஷம் ஓடிடுச்சு..,நம்ம பொண்ணு காரியம் நமக்குதானே முக்கியம்.அவாளுக்கென்ன போச்சு..?”

“அப்படியில்லே தர்மு..இந்த வருஷம் கண்டிப்பா உதவறேன்னு வாக்கு கொடுத்திருக்கார்.”
“அதெப்படின்னா..பட்டணத்துக்கு வேலைக்குப் போன அவரோட பையன், வேற்றுஜாதிப் பொண்ணை காதலிச்சு,கல்யாணம் பண்ணிண்டான்.இனி அவருக்கு அந்தக்கவலையிலே,நம்மளை எங்கே நெனக்கப்போறார்..?”

“அவருக்கென்ன கவலை..அதான் மனசொத்துப் போயிட்டாங்களே..,நாளைக்கு சாயங்காலம் அஞ்சுமணிக்கு பட்டணத்திலிருந்து நேரா,மகன் மருமகளை அழைச்சுக்கிட்டு கோவிலுக்குத்தான் வர்றார்.அப்புறந்தான் அவரோட ஆத்துக்கு அழைச்சுட்டுப் போறார்.அதனால பூஜையெல்லாம் பலமா இருக்கணுமின்னு என்னன்ட சொல்லிட்டு போயிருக்கிறார்..”

“ஓஹோ..அதும் அப்படியா..?அப்படின்னா நாளைக்காவது கண்டிப்பா கேட்டுடுங்கோ..,சீக்கிரம் ஏற்பாடாயிடுத்துன்னா,சுப்புணி சொன்ன கிளார்க் பையனையே முடிச்சுருவோம்..”

“உம்..உம்..பேஷா கேட்டுர்றனே..”, மகள் படுத்திருந்த அறையின் கதவு திறந்திருந்தது போலும்.இப்போது சத்தமின்றி சாத்தும் முயற்சியில் மெல்லிய கிரீச்சொலி கேட்டது.‘அவள் திருமணத்தைப் பற்றிப்பேசிய பேச்சுக்களை எல்லாம்,இதுநேரம்வரை கேட்டுக்கொண்டிருந்தாளா..? பாவம்,காலாகாலத்தில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் கைகூடாமல் எதிர்பார்ப்பிலேயே காலத்தை தள்ளிக் கொண்டிருப்பதை நினைத்தால்,அவருக்கு மிகுந்த சங்கடமாயும்,துக்கமாயும் இருந்தது.
தர்மு,நிம்மதியாக தூங்கிப்போயிருந்தாள். ‘கவலையில்லாமலா..?’அவளுக்கும் கவலைகள் இருக்கும்.அதனால்தானே புத்திசாலித்தனமாய் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்ள,என்னையும் மீறி வழிசெய்து கொண்டாள்.கணவனின் சம்பாத்தியத்தை அனுசரித்து எதிர்காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டாளோ..,அவளுடைய பொறுப்பை அவள் சரியாக நிறைவேற்றிவிட்டாள். அந்த ஒரு குழந்தையின் எதிர்காலத்தை பார்த்துக்கொள்ள கணவன் இருக்கிறானே..,என்ற ஆறுதல் அவளுக்கு இருக்கும்.ஆனால் எனக்கு..? அந்த ஆண்டவன் விட்டவழி..’என்று எண்ணமிட்டவாறே உறங்கிப்போனார்.

இப்போதும் அதுபற்றித்தான் அவரது சிந்தனை சுழன்று கொண்டிருந்தது. ‘இன்று தர்மகர்த்தாவிற்க்கு நினைவூட்டும்படியான சந்தர்ப்பம் அமையுமா..?, இல்லாவிட்டாலும் அமைத்துக் கொள்ளவேண்டும்’என்று வேண்டிக் கொண்ட போதே,அவருடைய மகளின் முகம் நினைவில் ஒருகணம் மின்னியது. ‘இந்த தைமாதம் வந்தால் அவளுக்கு இருபத்திநாலு வயது முடிந்துவிடும்.என்னை மன்னிச்சுக்கம்மா..ஒரு தகப்பனா இருந்து என்னோட கடமையை இதுநாள்வரை நிறைவேத்தாமலிருக்கிறது தப்புதான்.’இந்த ஒரு எண்ணம்தான் யாரிடமும் உதவியைக் கேட்டுப்பெறாத சாமிநாதய்யரை,தர்மகர்த்தாவிடம் கையேந்தச் சொன்னது.அதுவும் கடனாகத்தான்.எப்படியாவது தன்வருமானத்திலிருந்தே தவணையாக கட்டி முடித்துவிடுவதாகவும் வாக்கு கொடுத்திருக்கிறார்.

கட்டிக்கொண்டிருந்த மாலையின் இருபக்கத் திண்டுகளும் சுற்றிமுடிந்தது.குஞ்சம் மட்டும்தான் பாக்கி.கோவிலின் பிரகாரத்தில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்.மணி நான்கு.இன்னும் ஒருமணிநேரத்தில் அவர்கள் வந்துவிடுவார்கள். பத்துநிமிடத்தில் மாலையைக் கட்டி முடித்துவிட்டு,சுவாமிக்கு அலங்காரம் தொடங்கவேண்டும்.

அரைமணிநேரத்தில் அலங்காரம் முடிந்தது.தனது கைவேலையினை ரசிக்கும் பொருட்டு,சற்றே தள்ளிநின்று சுவாமியைப் பார்த்தார்.அவரைப் பாராட்டும்படியாக கோபாலகிருஷ்ணன் சிரித்துக் கொண்டிருந்தான். மார்கழி மாதங்களில், கட்டளைப்படி வேண்டுதல் செய்பவர்கள் கொண்டுவரும் மாலைகள், துணிகள், எலுமிச்சை,துளசி போன்றவற்றை வைத்தே சாமிநாதய்யர் செய்யும் அலங்காரத்தை ரசிப்பதற்காகவே,அந்த அதிகாலையில் கிருஷ்ணனை சேவிக்க வரும் பக்தர்கூட்டம் அதிகமாயிருக்கும்.

தர்மகர்த்தா வரும்போது எல்லாம் திருப்திகரமாய் இருக்கவேண்டும் என்று எண்ணியபடியே,பூஜைக்குரியவற்றை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு, கருவறையைவிட்டு வெளியே வந்தவர் ஒருகணம் துணுக்குற்றார்.
கோவிலின் வெளிவாசற்படியின்மேல் தலைவைத்து குப்புறக் கிடந்தது ஒரு உருவம். ‘யாரேனும் குடித்துவிட்டு வந்து,கோவில் என்று அறியாமல் படுத்திருக்கிறார்களா..? யாராயினும் எழுந்து போகச் சொல்லவேண்டும்’ என்று நினைத்து வெளியே வரும்போது,அந்த உருவத்தின் கைகளும்,கால்களும் இருந்த நிலையைப் பார்க்கையில் விழுந்துகிடந்ததைப் போலிருந்தது.
ஆமாம்,விழுந்துதான் கிடந்தது.செருப்பில்லாத கால்களைப் பரப்பிக்கொண்டு, இடதுகை புரண்டு கிடந்ததில் உள்ளங்கை வானத்தைப் பார்த்தபடி,வலதுகை தலைக்குமேல் நீண்டு கிடந்தது.மேல் சட்டையில்லாமல் இடுப்பிலே பழுப்புநிறமாய் ஒருவேட்டி,கருத்தமேனியெங்கும் முதுமை வரைந்த சுருக்கங்கள்..
‘மயக்கமா..,இல்லை..’ அருகில்வந்து நாசியருகே கைநீட்டிப்பார்த்தார்.‘அப்பா.. மூச்சு வருகிறது.அட இதென்ன முகம்முழுக்க சிவப்பாய்,திட்டுத்திட்டாய்
இரத்தமா..?.ஐயோ..வாசலின் நீளக் கல்படியின் விளிம்பில் தலைமோதிவிட்டது போலும்..’ சாமிநாதய்யர் பதட்டத்துடன் சுற்றும்முற்றும் பார்த்தார். ‘இவனுக்கு முதலுதவி செய்யவேண்டுமே..ஒத்தாசைக்கு ஒரு ஆளையும் காணோமே,இது என்ன சோதனை..?’
‘இன்னும் சற்றுநேரத்தில் அவர்கள் வந்துவிடுவார்களே..,வரும்போது கோவிலின் முன்பாக இவன் இப்படிக்கிடந்தால்..அபசகுனமாய் நினைப்பர்களே.., அவர்கள் வருவதற்குள் மயக்கம் தெளிவித்து அனுப்பிவிடவேண்டும்.’

உள்ளே ஓடிச்சென்று ஒருசெம்பில் நீர் எடுத்துவந்தார்.இரண்டுமுறை முகம்நோக்கி தண்ணீர் தெளித்த பின்பு அந்த முகத்தில் லேசான அசைவு தெரிந்தது.
ஈரமாய் இருந்த இரத்தத்திட்டுக்கள் நீரினால் கலைந்தபின்பு முகம் நன்றாக அடையாளம் தெரிந்தது. ‘இது..இது..கோவிலுக்கு முறைவாசல் செய்யவரும் மாராக்கிழவியின் சகோதரனல்லவா..? இவனுக்கு புத்திசுவாதீனமும் கிடையாதே. சேரிப்பக்கமிருந்து ஊரைச்சுற்றிக் கொண்டு இங்கே எப்படி வந்தான்..? ஊரின் பார்வையில் பட்டால் விபரீதமாகிவிடுமே..!’

ஆலயப் பிரவேசம் என்பது எங்கெங்கோ நடந்ததென்று செய்தி ஒரு காலத்தில் வந்ததென்றாலும்,இந்த ஊரைப்பொறுத்தமட்டில்,இரத்தத்த்pல் ஊறியிருந்த அடிமைத்தனத்தில்,சேரியின் வம்சாவளிகள்,தம் எஜமானர்களுக்கு சமதையாய், கோவிலின் உள்ளே வந்து சாமி கும்பிடுவதை,அவர்களுக்கு செய்யும் துரோகமாகவே நினைத்தார்கள்.எப்போதோ ஒருவன் கோவிலுக்குள் வந்ததற்காய், இப்போது இருக்கும் தர்மகர்த்தாவின் தந்தை, ஊர்ப்பஞ்சாயத்தில், அவனின் குடும்பத்திற்கு தண்டணையளித்து, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தவராம்.

“தண்ணீ..தண்ணீ..” குப்புறக்கிடந்த கிழவனிடமிருந்து லேசான முனகல் வெளிப்பட்டது.
‘இவனுக்கு எப்படி தண்ணீர் புகட்டமுடியும்..?’ஒரு விநாடி யோசித்தார்.கிழவனின் அருகே படிக்கட்டில் அமர்ந்து அவனைப்புரட்டினார்.வயிறு ஒட்டிக்கிடந்தது. ‘சாப்பிட்டு எத்தனை நாளாயிற்றோ..?’அவன் தலையைத் தூக்கி தன்மடியில் இருத்திக் கொண்டார்.செம்பிலிருந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்ட ஆரம்பித்தார்.அவன் நிதானமாக குடிக்க தொடங்கினான்.அப்போதுதான் கோவிலின் முன்பாக அந்தக் கார் வந்து நின்றது.

பின் சீட்டிலிருந்து தர்மகர்த்தாவின் மகனும்,மருமகளும் இறங்கினர்.அவள் உடுத்தியிருந்த பட்டுச்சேலையும்,வெட்டியிருந்த பாப்தலையும்,உதட்டில் தீட்டியிருந்த சிவப்புச்சாயமும் ஒன்றுக்கொன்று பொருந்தாமலிருந்தது.இயற்கையாய் இருந்த முகஅழகை முடிந்தவரை கோரப்படுத்தியிருந்தாள்.பார்வையில் பட்ட சகலத்தின் மீதும் ஒரு அலட்சியம் இருந்தது.அவள் கணவன் அவளுக்கு பின்னால் நின்றுகொண்டான்.
முன்சீட்டிலிருந்து இறங்கிவந்த தர்மகர்த்தா,சாமிநாதய்யரைப் பார்த்ததும் அதிர்ச்சியானார். “அய்யரே..என்ன இது..?.” காட்டுக்கத்தலாய் அவர் வீசிய கேள்வியால் கலைந்து கோபுரத்திலிருந்த புறாக்கள் சில வானத்தில் எழும்பியது.

கிழவன் இன்னும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான்.சாமிநாதய்யர் எழுந்திருக்கவில்லை.நிமிர்;ந்துபார்த்தார்.

எப்போதும் தன்னிடம் பணிவும்,மரியாதையும் காட்டுபவர்,பேசாமல் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது,தர்மகர்த்தாவிற்கு உள்ளம் கொதித்தது. தங்களுடைய பாரம்பரிய கௌரவம் காயப்படுத்தப்பட்டதுபோல உணர்ந்தார். அவருடைய மருமகள் “சே..நாஸ்டி..”என்று வாய்விட்டு முனகியதைக் கேட்டபோது அவருக்கு அவமானமாய் இருந்தது.

“வாங்கோ..!” அய்யரின் வரவேற்பில் சந்தோஷமில்லை. வருத்தமுமில்லை. அம்மாசிக்கிழவனை நிமிர்த்தி சுவரோரமாய் சாய்த்து உட்கார வைத்துவிட்டு எழுந்து நின்றார்.“புத்திசுவாதீனமில்லாதவர்.எப்படியோ வழிதவறி,பசி மயக்கத்தோடு இங்கே வந்து விழுந்துட்டார்.தலையிலே வேறு காயம் பட்டுடுச்சு.அதான் கொஞ்சம் ஜலம் குடிக்கவெச்சேன்.யாராவது வந்தா சொல்லியனுப்பி,இவரைக்கூட்டிண்டு போகச்சொல்லலாம்..”

“நிறுத்தும்யா..ஆசாரமில்லாத வேலையைச் செஞ்சுட்டு காரணம் வேற சொல்றீராக்கும்..யாரோ எக்கேடோ கெட்டுப்போகட்டும்..உமக்கென்ன.., உம்வேலையை நீர் பாக்கறதுக்கென்ன..?”

அய்யர் “நம் கண்முன்னாடி ஒருத்தர் கிடக்கும்போது உதவி செய்யலேன்னா..”, தர்மகர்த்தா குறுக்கிட்டார், “ஆமா..அதுக்குத்தான் எங்க பாட்டன் கட்டிவெச்ச இந்தக்கோவிலில் உம்மை வெச்சிருக்கமா..? பூஜை செய்றது மட்டும்தான் உம்மவேலை.அதுக்குத்தான் சம்பளமும்..” அவரது பேச்சில் எச்சிலோடு ஆணவமும் தெரித்தது.

“மனுஷனுக்கு,மனுஷன் உதவிசெய்யறதிலே என்ன தப்பு..?ஆபத்துக்கு உதவுறதிலே நான் அந்தஸ்தோ,கௌரவமோ பிரதிபலனோ பாக்கறதில்லே..” அய்யரின் வார்த்தைகளில் இருந்த நிதானம்,தொடர்ந்து அவருடைய மருமகளை ஒருநொடி பார்த்துவிட்டு,தன்னைப் பார்த்தது தர்மகர்த்தாவை இன்னும் கோபப்படுத்தியது. ‘பார்வையாலேயே தன்னைக் குத்திக்காட்டுகிறாரோ..?’
“நீர் மனுஷனாய்யா..? ஏற்கனவே ரெண்டு ஊர்லே இப்படித்தான் ஊர்க்கட்டுப்பாட்டை மதிக்காமே,உம்ம மூக்கை நுழைச்சுத்தானே வேலையைத் தொலைச்சீரு..ரெண்டு தடவை பட்டும் உமக்கு புத்தி வரவேண்டாமா..? இப்படி ஆசாரம் மறந்துட்டு கீழ்சாதிலே பொறந்தவனைத் தொட்டுத் தூக்கலாமா..?, தர்மகர்த்தா நாக்கிலே சூட்டுக்கோலை வைத்துக்கொண்டு,சுரீர்,சுரீர் என்று இழுத்தார்.
“அய்யா..மனுஷங்கள்ளே நல்லவன் கெட்டவன்னு ரெண்டு ஜாதியைத்தான் நான் பார்க்கிறேன்.இரண்டு வருஷமா சித்தம் கலங்கிப் போயிருக்கிற இவரும், குழந்தை மாதிரிதான்.குழந்தையும் தெய்வமும் ஒண்ணுண்னு பெரியவங்க சொல்லியிருக்கச்சே,இவருக்கு செய்யற உதவி,அந்த ஆண்டவனுக்கு செய்யற சிசுருக்ஷை மாதிரிதான்.அதுலே நான் பேதம் பிரிச்சு பாக்கவிரும்பலை..” சாமிநாதய்யரின் குரல் அழுத்தந்திருத்தமாக ஒலித்தது.

தர்மகர்த்தாவின் மருமகள் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவள்,தன் கணவனின் காதருகே சென்று கிசுகிசுத்தாள்.அவன் வாயைத் திறந்தான். “அப்பா..கீழ்ஜாதிங்கிற விஷயத்திற்காக,நீங்க இன்னைக்கு அவரைக் கண்டிக்கிறீங்க..நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சினைன்னா வேற ஜாதிங்கி றதுக்காக எங்களையும் குத்திக்காட்ட தயங்கமாட்டீங்கன்னு நாங்க அபிப்ராயப் படறோம்.அதனாலே நாங்க இத்தனை நாள் இருந்த மாதிரியே டவுன்லேயே குடியிருந்துக்கிறோம்.உங்களுக்கு விருப்பமானா,வந்து போயிட்டு இருங்க..” என்றவன் மனைவியிடம் “வா..ரோஸி, போகலாம்” என்று கூறியபடி திரும்பி நடக்கத்துவங்கினான்.

தர்மகர்த்தா,தன் பாசமகனிடமிருந்து இப்படியொரு கோணத்தில் தாக்குதல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.அவருக்கு தமது ஜாதிப்பெருமையை விட்டுக் கொடுப்பதா..?,மகனுக்காகப் பார்ப்பதா..?, சிலவிநாடிகள் யோசித்தார், ‘மகனும் மருமகளுமாய் இரண்டு உயர்ஜாதியிலே உண்டான சம்பந்தமும்,அய்யருக்கும் இந்தக்கிழவனுக்கும் உண்டான சம்பந்தமும் ஒன்றா..?’ அவரால் பின்னதை ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை.

சுற்றும் முற்றும் பார்த்தார்.யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.’நல்லவேளை உறவுகளையெல்லாம் வீட்டுக்கு வரச்சொன்னோம்.சரி தற்போதைக்கு சற்று விட்டுக்கொடுப்போம்.பின்னாளில் சொத்துக்கு வாரிசாக வரவேண்டுமெனில்,அந்தப்பெண்ணையும் நம் ஜாதிக்கே மாறச் சொல்ல வேண்டியதுதான்’என்று எண்ணமிட்டவாறே,“நில்லுடா..இப்ப ஒண்ணும் குடி முழகிப்போயிடலை.உன் சந்தோஷம்தான் என் சந்தோஷமும்” என்றவர் அய்யரைப் பார்த்து,அதிகாரத்தோரணையுடன்,“சரி..சரி..இந்தத்தடவை மன்னிச்சுர்றேன்.சீக்கிரம்போயி குளிச்சுட்டு வந்து பூஜையை ஆரம்பியும்.நாங்க பத்துநிமிஷம் காத்திருக்கோம்..”என்று மகனையும்,மருமகளையும் பார்த்தார்.
அவர்களும் ஆமோதித்து தலையாட்டினர்.ஆனால் சாமிநாதய்யர் நகரவில்லை. மூவரும் அவரையே கேள்வியுடன் பார்க்க,அவர் நிதானமாய் சொன்னார்.
“மனுஷ ஸ்நேகம் இருக்கிற இடத்திலேதான் ஆண்டவன் இருப்பான்கிறது என்னோட நம்பிக்கை.அது இல்லாத இடத்திலே ஆயிரம் கோவில்கள் இருந்தாலும்,அங்கே வெறும் சிலைகள்தான் இருக்குமேயொழிய,கடவுள் அருள் இருக்காது.இனிமே இந்த விக்ரகத்தை ஆண்டவனா நினைச்சு என்னாலே பூஜையும் பண்ணமுடியாது. மன்னியுங்கோ..”கிழவனை எழுப்பி,கைத்தாங்கலாய் அணைத்தபடி,சேரியை நோக்கிநடந்தார் சாமிநாதய்யர்.
“அய்யா..உம்ம பேரென்ன..?” சாமிநாதய்யரின் கேள்விக்கு,அந்தக் கிழவன் “கோபால கிருஷ்ணன்” என்று மெல்லியகுரலில் முனகியது மற்றயாருக்கும் கேட்காமலே போயிற்று.


பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (28-Nov-11, 2:06 pm)
பார்வை : 686

மேலே