ந....ட்....பு

"கண்ணாடித்துகள்கள் உன்னை
காயப்படுத்திவிடும் நான்
அப்புறப்படுத்திக் கொள்கிறேன்"
நாம் நட்புக்குள் நுழைய காலம்
ஏற்றிக்கொடுத்த வரவேற்பு வாசகம்

அதன்பிறகு நீ எனக்காக பேசிய
வார்த்தைகள் அத்தனையிலும்
நட்பின் ஏணியில் ஒவ்வொரு
படிகளாய் ஏறியிருக்கிறோம்

"ஐஸ்-கிரீம்" மேல் இருப்பது என்ன ???
"செர்ரி" என்ற அறிவான என் விடைக்கு
"தெளிந்த பைத்தியம்" என்று சொல்லி
சிரிப்புகளை உதிர்த்த நினைவுகள்

ஒரு ஆண்டு விழாவின் போது
அவசர தாகத்திற்கு "கொதிக்கும் நீரை"
கொடுத்து விட அவசரமாய் வாங்கி குடித்து
என் நாக்கு பொத்துப்போன காட்சிகள்

இன்னமும் வெந்நீரை பருகும் போது
நீரோடு கலந்து விடும்
அந்த ஆண்டு விழா நினைவுகள்
நீரையே அமிர்தமாக்கும் நிலைமைகள்

ஒருமுறை என் "பென்சில் பாக்ஸ்" இன்
பொருள்களை களவாடிவிட்டு
நடு வீதியில் என்னை நிறுத்தி
என் பொருட்கள் பற்றி நலம் விசாரித்ததும்

அப்பொழுதே திறந்து பார்க்க சொன்னதும்
அவசர அவசரமாய் திறந்த நான்
அதில் ஒன்றும் காணாமல் திகைத்ததும்
வேடிக்கையாய் என்னை பார்த்து நீ சிரித்ததும்

இப்படி பல வகை குறும்புகளும்
சிரிப்புகளுமாய் நாட்கள் நகர
நமக்கான உரிமைகளில் ஒரு படி
மேலே தான் சென்றிருந்தோம் இருவருமே ...

ஏதோ தவறு செய்து விட்ட காரணமாய் ...
தலைமை ஆசிரியரிடம் என்னை இழுத்து செல்ல
எனக்காக நீ ஆசிரியரிடம் மன்றாடிய போது
நட்பு நகைக்கு காலம் வைரம் பதித்திருந்தது

காலம் நமக்குள்ளே வேறுபட்டு கடந்து
செல்வது பிடிக்காமல் நம் கைகடிகாரத்தில்
ஒரே மணியில் ஒரே நொடியில்
கடிகார முட்களை நிறுத்திக்கொண்டதும் ...

காலத்தோடு நாம் ஒன்றாகவே
பயணித்ததும் வேடிக்கையாக இருந்தாலும்
அதன் இனிமை இன்றும் நம்
இதயத்தை குளிர்விக்கதான் செய்கிறது

இப்படி நாம் சிறுக சிறுக கட்டிய
"நட்புக்கூடு" பள்ளி மாற்றத்தால்
சின்னா பின்னமாய் சிக்கி சிதைவதை
கண் கொண்டு பார்த்திருந்தோம் இருவருமே

கால ஓட்டத்தில்
எங்கோ தொலைந்து விட்ட உன்னை
திரும்பவும் மீட்டுக் கொடுத்திருக்கிறது
நம் இனிய "ந....ட்....பு"

வரவேற்பு வாசகத்தை
ஏற்படுத்திக்கொடுத்த காலத்திற்கு
ஏனோ முடிவுரையை கொடுக்க
தெரியவில்லை பாவம் தெரியவேயில்லை

இதோ!
காலம் நம் முன்
கண்கலங்கி நிற்கிறது பார்!!!

எழுதியவர் : Mazhaithendral (20-Dec-11, 1:50 pm)
Tanglish : natpu
பார்வை : 516

மேலே