கவரிமான்களைக் காக்கும் விலைமான்கள் !

நகரம் சொர்க்கமாக
தங்களை நரகமாக்கிக் கொண்டவர்கள் !

ஊரார் சுகாதாரத்திற்காக
ஓடுகிற அவசிய சாக்கடைகள் !

விரகதாப விட்டில்களை
தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ளும்
விளக்கு மாதர்கள் !

காம மின்னல் வெட்டின்
தாக்குதலில் இருந்து தப்பிக்க
கண் சிமிட்டி நிற்கும் இடிதாங்கிகள் !

'பிறன்மனை நோக்காமை பேராண்மை ',
என்னும் குறள் நெறி வரிகளை
நடைமுறையாக்க
தங்களையே ஆகுதியாக்கி
எரிகிற அபலை வேள்விகள் !

மத்தேறிய மனித மாடுகள்
மழலைக் கதிர்களை
மேய்ந்து விடாமலிருக்க
சாலையோரம் நடமாடும் வேலிகள் !

போதைக் காற்றினால்
துருப் பிடித்த இரும்பு மனங்களை
சமூக மண்ணில் இருந்து
பிரித்து எடுக்க
பயன்படும் பெண் காந்தங்கள் !

கற்பு நெறிக் கவரிமான்கள்
காமக் கொடூர விலங்குகளிடம் இருந்து
காப்பற்றப்பட
தங்களையே இரையாக்கும் விலை மான்கள் !

எழுதியவர் : முத்து நாடன் (6-Jan-12, 5:15 pm)
பார்வை : 230

மேலே