என் தங்கை இசைப்பிரியா
கண்ணுக்கு எதிரிலேயே
கற்பழித்துக் கொல்லப்பட்ட
அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு
ஒரு கையாலாகாத அண்ணனின்
கண்ணீர் அஞ்சலி.
என்ன அழகடி
உன் தமிழும்
தைரியமும்!
சின்னஞ்சிறு இதழ் விரித்து
சிங்கார உச்சரிப்பில்
செய்திகள் வாசிப்பாயே!
இப்போது நீயுமொரு
செய்தியாகிப் போவாய் என்று
கனவிலேனும் யோசித்தாயா?
இப்போதுதான் பூத்த
பனித்துளிகூட விலகாத
ஒரு காலைரோஜாவின்
அழகைக் கொண்டவளே!
எப்படியடி சிக்கிக் கொண்டாய்
திமிர் பிடித்த சிங்களனின்
திணவெடுத்த கரங்களுக்குள்?
ஆடையின்றி
பிணமாக
ஒரு சிங்கள காட்டுக்குள்
நீ
படுத்திருந்த காட்சி...!
நீ
துடிதுடிக்க
கொல்லப்பட்ட போதும்,
உன் துணிமணிகள்
அவிழ்க்கப்பட்ட போதும்,
தொலைக்காட்சிப் பெட்டியிலே
உன் தொலைதூர ஓலங்கள்
ஒலித்த போதும்
சத்தியமாய் அழுதேனடி
அழுது புலம்புவதைத் தவிர
இந்த அண்ணனால்
ஆவதென்ன தோழி?
ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்
தொகுப்பாளராய் பணியாற்றி
தன் வாழ்க்கை
தொகுக்கப்படும் முன்பே
ஒரு சிங்கள காட்டுக்குள்
சிதைந்து போய் கிடக்கும்படி
தவறு என்ன செய்தாயடி?
தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?