ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !
சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !
கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !
எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !
காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !
காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?
பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?
இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?