புரிந்து கொள்ளாத பாசம் (சிறுகதை)...

என்னங்க....நம்ம விஸ்வாவுக்கு நாளைக்கு பிறந்தநாள்.அவனுக்கு எதாவது ஸ்பெஷல் கிப்ட் வாங்கிக்கொடு்க்கணும்.என்ன வாங்கி கொடு்க்கலாம்ணு சொல்லுங்களேன்.-செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த தன் கணவன் சுரேஷிடம் கேட்டாள் கமலா.
விஸ்வாவுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுண்ணு என்னவிட உனக்குத்தானே நல்லா தெரியும்.அவனுக்கு பிடிச்ச மாதிரி நீயே எதாவது வாங்கி கொடு. நீ என்ன வாங்கி கொடுத்தாலும் அவன் உன் பாசத்த புரிஞ்சுக்கவே போறதில்ல.அப்புறம் உன் விருப்பம்.........சற்று அலட்சியமான குரலில் சொன்னான் சுரேஷ்.
கொஞ்ச நாளாவே கம்ப்யூட்டர் வாங்கணும்ணு அவனுக்கு ரொம்ப ஆச.இந்த பிறந்தநாளுக்கு அவனுக்கு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தா அவன் ரொம்ப சந்தோசப்படுவாங்க. கம்ப்யூட்டர் வாங்கிக்கொடுக்கலாமா? ஆர்வத்தோடு கேட்டாள் கமலா.
யோசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா கம்ப்யூட்டர் வாங்குற அளவுக்கு இப்ப நம்ம கையில பணம் இல்லையே. பணத்துக்கு என்ன செய்ய? -கேட்டான் சுரேஷ்.
ஆமாங்க.......அதுவும் சரிதான்.நான் பணத்த பற்றி யோசிக்கவே இல்ல. பணத்திற்க்கு என்ன செய்யலாம்...? என்று யோசித்தவாறு தன் கையில் கிடந்த தங்க வளையலை பார்த்தாள்.

என்னங்க எனக்கு ஒரு யோசனை தோணுது. அத சொன்னா நீங்க என்ன திட்டக்கூடாது. இந்த வளையல் என் கையில சும்மாத்தானே கிடக்குது.இத விற்று அவனுக்கு கம்ப்யூட்டர் வாங்கிக்கொடுத்தா என்ன?- சற்று பயத்துடன் கேட்டாள் கமலா.
வளையல விற்று கம்ப்யூட்டர் வாங்குற அளவுக்கு இப்ப என்ன அவசியம் வந்திடிச்சு? அதெல்லாம் வேண்டாம். -ஆவேச குரலில் சுரேஷ்.
என்னங்க இப்படி சொல்றீங்க. எல்லாம் நம்ம விஸ்வாவுக்காகத்தானே.அவனுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப்போறோம். அப்பா அம்மா இருந்தா வாங்கித்தந்திருப்பாங்களேண்ணு ஒரு சின்ன வருத்தம் அவன் மனசுல வந்தா கூட என்னால தாங்கமுடியாது...-கவலை தோய்ந்த முகத்தோடு கமலா கூற,...சரி சரி வருத்தப்படாத கமலா, நீ சொன்ன மாதிரியே எல்லாம் செய்திடலாம் என்று ஆறுதல் கூறினான் சுரேஷ்.

சுரேஷின் தம்பிதான் விஸ்வா. விஸ்வாவுக்கு சிறு வயதாக இருந்தபோதே அவன் அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள். சுரேஷை விட விஸ்வா 12 வயது சிறியவன். சுரேஷிற்கு குழந்தை இல்லாததால் சுரேஷும் ,கமலாவும் அவனை தங்கள் சொந்த குழந்தையாகவே நினைத்து வளர்த்து வந்தனர்.
சுரேஷை விட கமலாவுக்குத்தான் விஸ்வா மீது அதிக பாசம். அவனின் பாசத்திற்காக பலமுறை ஏங்கியிருக்கிறாள். ஆனால் விஸ்வா அதை புரிந்து கொள்வதே இல்லை. விஸ்வா தன் அண்ணி கமலாவை அன்னியமாகவே நினைத்தான். அம்மா அப்பா இல்லாததால் , தனக்காக யாருமே இல்லை என்றும், தன் விருப்பப்படி எதையும் செய்யலாம் என்றும், தன்னை கண்டிக்க யாரும் இல்லை என்றும் அவன் நினைத்தான். அவனை பொறுத்த வரையில் அண்ணி என்பவள் அண்ணணின் மனைவி, அவ்வளவு தான்.அதையும் மீறி ஒரு நல்ல தாய் பாசம் அவளிடம் இருக்கின்றது என்பதை அவன் புரிந்து கொள்வதே இல்லை.

விஸ்வாவின் பிறந்தநாளன்று காலையில்,
தூங்கிக்கொண்டிருந்த விஸ்வாவை மெதுவாக தட்டி எழுப்பினாள் கமலா.
ம்...ம்...என்ற மொனங்கலுடன், போர்வையை முகத்திலிருந்து விலக்கி கண் விழித்துப் பார்த்தான் விஸ்வா.
என் செல்ல விஸ்வா குட்டிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...-புன்னகை பூத்த முகத்தோடு கூறினாள் கமலா....
ஐயோ...அண்ணி , இத சொல்றதுக்குத்தான் தூங்கிக்கிட்டு இருந்த என்ன எழுப்புனீங்களா...? ஐயோ...என் தூக்கமே போச்சே என்று சலித்து கொண்டான் விஸ்வா.
கமலாவின் முகம் சற்று வாடியது. சரி, பறவாயில்ல ...இவன் இப்படி சொல்றது புதுசா என்ன? என்று தனக்குத்தானே பேசி மனதை தேற்றிக்கொண்டாள்.

விஸ்வாவுக்காக வாங்கி வைத்திருந்த பிறந்தநாள் கேக்கை எடுத்து அதில் மெழுகுவர்த்தி ஏற்றி அலங்கரித்தாள். கேக்கை வெட்டி விஸ்வாவின் வாயில் கொடுக்க வேண்டும். பதிலுக்கு அவனும் தனக்கு ஊட்ட வேண்டும்.அந்த சமயத்தில் அவனுக்காக வாங்கி வைத்திருந்த கம்ப்யூட்டரை பரிசளிக்க வேண்டும். அப்போது அவன் முகத்தில் ஏற்படும் சந்தோசத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்தாள் கமலா
அதற்குள் விஸ்வா எழுந்து குளித்து , புத்தாடை அணிந்து வெளியில் செல்ல தயாரானான். பைக் சாவியை எடுத்துக்கொண்டு .... ஓகே, பாய் அண்ணி என்று சொல்லி கிளம்ப தயாரானான்.
போக வேண்டாம் என்று சொன்னால் ,ஏதாவது முரணாக பேசி விடுவானோ என்ற பயத்தில் தன் மனதில் இருந்த கற்பனைகளையெல்லாம் மூட்டை கட்டு விட்டு , செய்வதறியாமல் மௌனமாய் நின்றாள் கமலா

டேய் நில்லுடா...என்ற ஆவேச குரல் கேட்க, அது யாரென்று பார்க்கையில்,அது விஸ்வாவின் அண்ணன் சுரேஷின் குரல்
உனக்காக உன் அண்ணி என்னென்ன ஏற்பாடு எல்லாம் செய்து வச்சிருக்கா பாருடா. உனக்காக ஒரு ஸ்பெஷல் கிப்ட் கூட வாங்கி வச்சிருக்கா.அத உனக்கு தர அவ ஆசை ஆசையா காத்திருக்கா.அத கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம, எங்க போகடா களம்பிட்ட.... வா....வந்து கேக் கட் பண்ணு--என்று சுரேஷ் சொல்ல.....
சாரி அண்ணா ,அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்ல.என் ப்ரெண்ட்ஸ் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. மதியம் நான் வந்த பிறகு எல்லாத்தையும் பார்த்துக்கலாம்.ஓகே பாய் என்று கூறி கிளம்பினான்.
டேய் நில்லுடா...டேய்...டேய்...என்று ஆதங்கப்பட்டு கத்தினான் சுரேஷ்.எதையும் காதில் வாங்காமல் பைக்கில் ஏறி சென்றான் விஸ்வா
யார் மனதையும் புரிஞ்சுக்காத ஜென்மம். இதெல்லாம் எப்பத்தான் திருந்தப்போகுதோ?-- கோபமாக பேசினான் சுரேஷ்
பிறந்தநாள் அதுவுமா எதுக்குங்க அவனை திட்டுறீங்க. ப்ரெண்ட்ஸ் கூட வெளியில தானே போயிருக்கான். இப்ப வந்திடுவான்.--மனதிற்குள் வருத்தம் இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் சாந்தமாய் பேசினாள் கமலா

மதிய உணவிற்காக சமையல் வேலையை ஆரம்பித்தாள். விஸ்வாவிற்கு என்னவெல்லாம் புடிக்குமோ அதையெல்லாம் நேர்த்தியாக சமைத்தாள். சமைத்துக்கொண்டுருக்கும்போதே விஸ்வாவின் பைக் சத்தம் கேட்க அவன் வந்துவிட்டான் என்பதை அறிந்து வெளியில் சென்று பார்த்தாள்.
வா விஸ்வா.... உனக்காகத்தான் காத்திருக்கிறேன். சீக்கிரம்போய் கை கால் கழுவிட்டு வா. உனக்கு என்னதெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் சமச்சி வச்சிருக்கிறேன். இன்றைக்காவது நல்லா சாப்பிடு என்றாள் கமலா
இல்ல அண்ணி,எனக்கு இப்போ சாப்பாடு வேண்டாம். அப்புறமா சாப்பிடுறேன் என்று விஸ்வா சொல்ல... அவன் குரலில் ஒரு தடுமாற்றம் இருப்பதை உணர்ந்தாள் கமலா.
என்னடா...ஒரு மாதிரியா பேசுற. உடம்பு எதாவது சரி இல்லையா? என்று சொல்லியவாறு அவனருகில் சென்றாள்.அவனருகில் சென்ற கமலாவுக்கு ஒரே அதிர்ச்சி. அவனருகில் செல்லவே முடுயவில்லை.அந்த அளவுக்கு நாற்றம்.அவன் குடித்திருக்கிறான் (மது அருந்தியிருக்கிறான்) என்பதை அறிந்து கொண்ட கமலாவுக்கு அதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.ஏனென்றால் விஸ்வா அன்று தான் முதன்முறையாக குடித்திருந்தான்.

என்னடா பண்ணிக்கிட்டு வந்திருக்க? உன் அண்ணன் கூட இதுவரைக்கும் குடிச்சது இல்ல.ஆனா நீ இந்ந சின்ன வயசிலே......(சொல்வதறியாமல் திகைத்தாள்).இப்படி இருந்தா உன் எதிர்காலம் என்னவாகுமோணு எனக்கு பயமாயிருக்கு. இதுவரைக்கும் நீ செய்த தப்பையெல்லாம் பொறுத்துக்கிட்டேன்.இனி என்னால பொறுக்க முடியாது. இதுக்கு இப்பவே ஒரு முடிவுகட்டியாகணும்.-விஸ்வா மீதுள்ள பாசத்தால் ஆவேசமாக கத்தினாள் கமலா.

நான் குடிச்சா உங்களுக்கென்ன? உங்க வேலைய நீங்க பாருங்க. தேவையில்லாம என் விஷயத்தில் தலையிடாதீங்க.என் எதிர்காலத்தை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். -திருந்தாத நாக்குடன் உளறினான் விஸ்வா
தப்புப்பண்ணிக்கிட்டு தத்துவமா பேசுற....! -என்ற ஆதங்கத்தில் நிலைதடுமாறி விஸ்வாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் கமலா

சிவந்துபோன கன்னங்களுடன் விஸ்வா......

என்னை அடிக்க நீங்க யாரு..? உங்க பிள்ளையா இருந்தா நீங்க இப்படி அடிப்பீங்களா...? என்னப்பற்றி கேட்க யாரும் இல்லேணுதானே இப்படி அடிக்கிறீங்க...!-என்று கன்னத்தை தடவியபடி கேட்டான்.

அதை கேட்டதும் கமலாவுக்கு நெஞ்சில் ஆணி அடித்தது போல் இருந்தது. அடப்பாவி! இப்படி ஒரு கேள்வி என்னை பார்த்து கேட்டுட்டியேடா!.நான் உன்ன, என் புருசனுக்கு தம்பியா ஒரு நாளும் நினைத்ததே இல்ல. நான் பெற்ற பிள்ளையா தானடா உன்ன நினைத்தேன்.அதுக்கு நல்ல பரிசு தந்திட்டடா.
ஐயோ...கடவுளே!.இவன் எப்பத்தான் என் பாசத்தை புரிஞ்சுக்கப்போறான்னு தெரியலயே--தலையில் கை வைத்தபடி அழுதாள் கமலா.

கோபத்தில் விஸ்வா சட சடவென்று மீண்டும் பைக்கில் ஏறி எங்கோ சென்றான்.குடி போதையில் இருந்ததால் நிலைதடுமாறி எதிரே வந்த வண்டியில் மோதி விபத்து ஏற்பட அருகில் இருந்தவர்கள் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

விஷயம் அறிந்ததும் அலறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினாள் கமலா.......
விஸ்வாவிற்கு சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட்டது.தன் ரத்தமும் விஸ்வாவின் ரத்தமும் ஒரே குரூப் என்பதால் ரத்தம் கொடுத்து காப்பாற்றினாள் கமலா. மருத்துவமனையில் விஸ்வாவிற்காக அவள் பட்ட வேதனையும் , அவள் அழுத அழுகையும் காண்போர் நெஞ்சை உருக வைத்தது.

மருத்துவமனையில் விஸ்வாவை அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தார்கள்.கமலா வெளியில் நின்று அழுது கொண்டே இருந்தாள்.

இரண்டு நட்களுக்கு பின்.......

மெதுவாக நினைவு திரும்ப,கண் விழித்து பார்த்தான் விஸ்வா. அவன் கண் விழித்ததை பார்த்த நர்ஸ் அவனருகே ஓடி வந்து,
என்னப்பா......இப்ப உடம்பு எப்படியிருக்கு என்று கேட்க , உடலை அங்கும் இங்குமாக மெதுவாக அசைத்துப்பார்த்து விட்டு....இப்போ கொஞ்சம் பறவாயில்ல சிஸ்டர் என்று பதிலுரைத்தான் விஸ்வா.
சரிப்பா.....நீ கண் விழித்த விஷயத்தை உன் அம்மாக்கிட்ட சொல்லிட்டு வரேன்.அவங்க ரொம்ப சந்தோசப்படுவாங்க என்று நர்ஸ் கூற,....
அம்மாவா...? என்று வாயை பிளந்தபடி அதிர்ந்தான் விஸ்வா.
ஆமாப்பா...உங்க அம்மா தான் உனக்கு ரத்தம் கொடுத்தாங்க. அவங்கள மாதிரி ஒரு அம்மா கிடைக்க நீ ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். உன் மேல அவங்களுக்கு எவ்வளவு பாசம். உனக்காக அவங்க அழுத அழுகையை பார்த்து எனக்கே மனம் உருகிடிச்சி. நீ கண் விழிக்கிற வரைக்கும் எதுவுமே சாப்பிடமாட்டேன்னு உட்கார்ந்திருக்காங்க. நான் போய் அவங்கள கூட்டிட்டு வரேன் என்று நர்ஸ் கூறினாள்.

வார்த்தைக்கு வார்த்தை உன் அம்மா, உன் அம்மா என்று சொல்வதை கேட்ட விஸ்வாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. நம்ம அம்மாத்தான் இறந்திட்டாங்களே.அப்படீன்னா அது யாரு.....? அம்மா என்று சொல்லும் அளவிற்கு, யார் என் மேல் அதிக பாசம் வைத்திருக்காங்க....? என்று யோசித்தவாறு குழப்பத்தில் ஆழ்ந்தான்.

நர்ஸ் கமலாவை கூட்டிக்கொண்டு வந்து, இதோ பாருங்க உங்க பையன் கண் விழிச்சிட்டான் என்று கூற.....,
விஸ்வா அதிர்ந்து போனான். அண்ணியை பார்த்து தான் அம்மா என்று நர்ஸ் சொன்னதை புரிந்து கொண்டான். ஐயோ… நம்ம அண்ணி நம்ம மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காங்க. இவ்வளவு நாளும் அத புரிஞ்சுக்காம இருந்திட்டோமே. இவங்க முகத்தில எப்படி முழிக்கிறது….. என்று வெட்கத்தால் தலை குனிந்தான்.

கமலா விஸ்வாவின் அருகில் வந்து , அவன் கையை பிடித்து , இப்போ உடம்பு எப்படியிருக்கு? நீ எதை நினைத்தும் கவலைப்படாதே.எல்லாம் சரியாகி விடும் என்று ஆறுதல் கூறினாள்.
அதை கேட்டதும் விஸ்வாவின் கண்களில் இருந்து கண்ணீர் மடமடவென கொட்டியது.

அண்ணி என்ன மன்னிச்சிருங்க.நான் உங்க மனச எவ்வளவோ நோகடிச்சிருக்கேன்.ஆனா நீங்க அதையெல்லாம் மனசில வைக்காம, எல்லாத்தையும் மறந்து அன்பாய் பேசுறீங்க. அம்மா அப்பா இல்லாததால எனக்காக யாருமே இல்லையென்று நினைத்து உங்களை அன்னியமாகவே நினைச்சிட்டேன். அண்ணி வடிவில் அம்மா என் கூடவே இருக்காங்க என்று நினைக்காம போயிட்டேன். என்ன மன்னிச்சிருங்க அண்ணி. உங்க பாசத்தை கொஞ்சம் நேரத்திற்கு முன்னாடி நர்ஸ் மூலமா புரிஞ்சிக்கிட்டேன். இனிமேல் நான் உங்களுக்கு ஒரு நல்ல மகனாய் இருப்பேன்.-அழுகை குரலுடன் விம்மி விம்மி சொன்னான் விஸ்வா.
விஸ்வா சொன்ன வார்த்தைகளை கேட்டதும் கமலாவின் முகம் மகிழ்ச்சியால் நிரம்பியது. தன் பாசத்தை அவன் புரிந்து கொண்டதை பார்த்து பிரம்மித்து போனாள். கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வடிய ..... , அன்போடு அவனை கட்டியணைத்து முத்தமிட்டாள்.

அங்கு நடந்த காட்சியை கண்டபிறகுதான் கமலா என்பவள் விஸ்வாவின் அம்மா இல்லை, அண்ணி என்பதை நர்ஸ் புரிந்துகொண்டாள். இப்படியொரு பாசமா...! என வியந்து நின்றாள்.

அம்மா இல்லாதவர்களுக்கு அண்ணியும் ஒரு அன்னை தானே...!

எழுதியவர் : anisheeba (8-Feb-12, 3:55 pm)
பார்வை : 1218

மேலே