சீர்திருத்தவாதிகள்

"அவருல்லாம் அப்பிடிப் பண்ணிருக்க மாட்டாருங்க. அவரு கறுப்புச்சட்டைக்காரருங்க. அவரு எப்படிங்க அப்பிடிப் பண்ணிருப்பாரு? இவங்க ஏதோ சொல்லி கெளப்பி விடுறாங்க"

"புகழேந்தி டாக்டராங்க அப்பிடிப் பண்ணினாரு? இருக்காதுங்க. அவரு நல்ல மனுஷனுங்க"

புகழேந்தி அந்தக் கிராமத்துக்கு டாக்டராக வந்து கொஞ்ச நாட்கள் தான் ஆகியிருந்தது. வந்து கொஞ்ச நாட்களிலேயே அவரது புகழ் ஊர் முழுக்கப் பரவியிருந்தது. "கைராசிக்கார டாக்டருங்க" என்றார்கள்.

டாக்டரின் கிராம வாழ்க்கை சீரும் சிறப்புமாக நடைபெற்றது, இடையில் நடந்த ஒரு சின்ன சம்பவத்தைத் தவிர. மாரியம்மாள் அவளது ஆறுவயதுப் பையனை ரத்தச் சேறாக அள்ளிக் கொண்டு வந்தாள். "ஐயா, எம்புள்ளய வண்டிக்காரன் இடிச்சுப்போட்டுப் போயிட்டான்யா. அவன எப்பிடியாவது காப்பாத்துங்கய்யா". மாரியம்மாள் புகழேந்தியின் கால்களில் விழுந்து புலம்பத் தொடங்கினாள். புகழேந்தி அவளை ஒரு புழுவைப் போல் பார்த்தார். "சீ, தள்ளிப்போ, கீழ்சாதி நாய்ங்க மேல எல்லாம் நான் கை வைக்க முடியாது". மாரியம்மாளின் குரல் ஓங்கி ஒலித்தது. புகழேந்தி கண்டு கொள்ளவில்லை. வேகமாக போய் காரில் ஏறி டவுனில் இருந்த பிரைவேட் கிளினிக்குக்குப் புறப்பட்டுவிட்டார்.

அடுத்த டாக்டர் வருவதற்கு இன்னொரு அரை மணிநேரம். "அதிகமா ரத்தம் போயிருச்சும்மா. இனி எதுவும் பண்ண முடியாது. சாமி விட்ட வழி. என்னால முடிஞ்சத பண்றேன்", என்றார் அவர். அவராலும் எதுவும் பண்ண முடியவில்லை. அந்த இளங்குருத்து உலகின் ஏமாற்றங்களையும், ஏக்கங்களையும் அனுபவிக்காமலே மரணமடைந்தது.

சாயங்காலம் மாரியம்மாள் புகழேந்தியின் வீட்டுக்கு முன் நின்று மணலை வாரியிறைத்து சாபமிட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு அது தான் மரணம். புகழேந்தி நூறு மரணங்களுக்கு மேல் பார்த்தவர். அவரை எதுவும் பாதிக்கப் போவதில்லை.

ஒரு வாரம் ஊர்க்காரர்கள் பேசியிருப்பார்கள். ஓரிரண்டு "கீழ்சாதி நாய்கள்" மட்டும் வயிற்றை நனைத்து வந்த அந்த ஊரில் மாரியம்மாளின் மகன் மறக்கப்பட்டுப் போனான்.

புகழேந்தி மேலேறிக் கொண்டிருந்தார். சில கட்சிக் கூட்டங்கள்; சில பதவிகள்; சில கட்சிகள்; சில மருத்துவமனைகள்; சில கோடிகள்; ஒரு மரணம்.

இன்று அமைச்சர் வருகிறார். "சாதியொழிப்பு வீரர்" புகழேந்தியின் திருவுருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைக்க ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து வருகிறார்.

(கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியத்தில் கூறப்படும் கதையின் நவீன வடிவம்)


_

எழுதியவர் : (5-Feb-12, 8:17 pm)
பார்வை : 486

மேலே