ஈதல் நன்றோ?
சுமார் அறுபதிலிருந்து எழுபது வரை, வயசு இருக்கும் அந்த மரத்திற்கு. 'நவீன மயம்' என்ற சொல்லில் சிக்கிக் கொண்ட ஊரின் டீக்கடை முன்பு, விளம்பர பலகைகள் மாட்ட அடிக்கப்பட்ட ஆணிகளை தன் நெஞ்சில் தாங்கிக் கொண்டு, கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது. நெடுஞ்சாலை பகவான் தன் இரு கரங்களையும் விரித்த போது அது தன் சொந்தங்களைப் பறிகொடுத்திருக்க வேண்டும். இது மட்டும் எப்படியோ தப்பித்து, 'நகர' போர்க்களத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் சொர்க்கத்தின் படிகட்டுகளை ஏறிக்கொண்டு இருந்தது.
அதன் அடியில் அதே போல் ஒரு கிழவன். முகத்தில் தோல் சுருங்கியிருந்தது. அவை அனுபவத்தைக் குறிக்கின்றன என்று தெளிவாகக் கூறமுடியாது. 'விரைவில் நான் வருவேன்' என்ற காலனின் கையொப்பம்.
அவனது வெள்ளை நரையின் இடையில் சிக்கிக் கொண்டிருந்த புழுதி மண், அந்த மரத்தடி தான் அவனது சமீபத்திய வீடு என்று உணர்த்தின. வெள்ளை நிறம் என்று சொல்வதற்கே தகுதியற்ற அழுக்கு படிந்த வெள்ளை நிற வேட்டியை அவன் கட்டியிருந்தான். அவன் சட்டையோடு ஒட்டாத வயிறு, பசியில் வாடியிருந்தது. கைகள் இரண்டையும் தன் மார்பைக் கட்டி அணைத்தவாறு, குத்த வைத்து மரத்தில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தான்.
அவனருகில் அவனை விட மோசமாக ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவன் கையில் ஒரு அலுமினியத் தட்டு இருந்தது. அந்தத் தட்டில் கொஞ்சம் சில்லறைகளும் இருந்தன."ஐயா... ஏதாவது தர்மம் போடுங்க சாமி" என்று அந்தப் பக்கம் செல்லும் அனைவரிடமும் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அந்தக் கிழவன் எதுவும் பேசவில்லை. அவனிடம் அலுமினியத் தட்டும் இல்லை. அவன் பிச்சைக்காரன் இல்லை.
பிச்சைக்காரன் தட்டில் சில்லறைகள் விழுவதை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான், கிழவன். கடந்த இரண்டு நாட்களாக அவன் இதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.
"பிச்சை எடுப்பது எல்லாம் ஒரு தொழிலா?", கிழவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
"ஆனால் தர்மம் செய்வது தவறில்லையே", அவனுள்ளே பசியின் குரல் ஒலித்தது.
"பிச்சையும் தர்மமும் ஒண்ணா?"
"பிச்சையின் விளைவு தானே தர்மம்"
"பிச்சையெடுக்கறதுக்குப் பேசாம சாகலாம்"
"பிச்சை எடுக்காவிட்டாலும் இப்பொழுது நீ இறந்து விடுவாய். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?"
பசியின் குரல் அவனுள் கணீரென்று ஒலித்துக் கொண்டிருந்தது.அருகில் இருந்த பிச்சைக்காரன் தன்னிடம் தேறிய சில்லறைகள் சிலவற்றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டான். பக்கத்துக் கடையில் ஒரு சாப்பாட்டுப் பொட்டலத்தை வாங்கினான். கிழவன் அருகில், சம்மணம் இட்டு உட்கார்ந்தான். பொட்டலத்தைப் பிரித்து, தன் அழுக்குக் கைகளால் அள்ளி சாப்பிட்டான். தன் தாடியில் சோற்றுப் பருக்கைகள் சிக்குவதை அவன் பொருட்படுத்தவில்லை.
கிழவனின் பசிகுரல் வயிற்றுக்குள் கர்ஜித்தது. சூரியனின் வெப்பமும் உடன் சேர்ந்து கொண்டது. கிழவனால் தாக்குப் பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அவன் சமாளித்துக் கொண்டு மரத்தின் நிழலில் ஒதுங்கி ஒடுங்கினான். தலை சுற்றுவதை உணர ஆரம்பித்தான். மரத்தைப் பற்றியவாறு எழுந்தான்.
அருகில் சென்றவனிடம் தன் கைகளை வாய்க்கும் வயிற்றுக்கும் இணைத்துக்காட்டியவாறு தன் கைகளை அவன் முன் நீட்டினான். அவன் கைகள் நடுங்கின. இறுதியில் பசி வென்றது.ஆனால் பலன் இல்லை. சாலையில் சென்று கொண்டிருந்தவன் எதுவும் பிச்சையிடவில்லை. சற்றும் யோசிக்காமல் பின்னாடி வந்தவனிடம் தன் கைகளை ஏந்தி வயிற்றைச் சுட்டிக்காட்டினான். அந்த வழிப்போக்கன் ஒரு நொடி நின்று கிழவனைப் பார்த்தான். தன் பர்ஸை எடுத்து இருபது ரூபாய் நோட்டை கிழவன் கைகளில் போட்டு விட்டு நகர்ந்தான்.
கிழவனின் கண்கள் கலங்கின. அவசரமாக அந்த இருபது ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு பக்கத்துக் கடைக்குப் போனான். எதுவும் பேசாமல் அந்த இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.
"என்ன?சாப்பாடா?", என்றான் கடைக்காரன்.
தன் தலையை மெதுவாக ஆட்டினான் கிழவன்.
"சரி, வெளிய நில்லு தரேன்" என்று கூறினான் கடைக்காரன்.
சில நிமிடங்களில் சாப்பாடு பொட்டலம் அவன் கையில் வந்தது. அதை வாங்கிக் கொண்டு தன் மரத்தடி நிழலில் போய் அமர்ந்தான்.பிச்சைக்காரன் அவனருகில் மண்மீது போடப்பட்டிருந்த இலையில் தனது காலை உணவையோ, மதிய உணவையோ உண்டு முடிக்கும் கட்டத்தில் இருந்தான்.கிழவன் அவனை ஒரு கணம் பார்த்தான். அவன் இடத்திலிருந்து எழுந்தான். பிச்சைக்காரன் அருகில் சென்றான். பொட்டலத்தைப் பிரித்து பிச்சைக்காரன் இலையில் கொட்டினான். அவன் கைகள் நடுங்கின, கண்கள் கலங்கின.
தன் பழைய மரத்தடி இடத்தில் வந்து அமர்ந்தான். "தர்மம் தலை காக்கும்" என்று எண்ணி தன் தலையை மரத்தில் சாய்த்தான்....