அந்தி நேரம்

வானமதில் வெண்ணிலவு தோன்றும் நேரம்
வையமதில் அல்லி முகம் மலரும் நேரம்
கானமதைக் கருங்குயிலும் இசைக்கும் நேரம்
கரிய குழல் பூவினுள் ஒளியும் நேரம்
நானமர்ந்து கவியிதனை எழுதும் நேரம்
நங்கையவள் நின்றிருந்தாள் சாலை ஓரம் !

பூவையவள் விழிகளிலே சோகம் கண்டேன்
பூவிழிகள் எங்கும் அலைபாயக் கண்டேன்
பாவை தேடுவது என்னவன தெரிந்துக் கொண்டேன்
பால் வடியும் அவள் முகத்தில் கவிதை கண்டேன்
நங்கையவள் நினைவுதனை மனதிற் கொண்டே
நானிந்தக் கவிதையினை எழுதுகின்றேன் !

வண்டமர்ந்து மலரினைத் தழுவும் நேரம்
வாசமுள்ள பூவினம் மயக்கும் நேரம்
வைத்தவிழி எடுக்காமல் சாலை ஓரம்
வஞ்சி அவள் நின்றிருந்தாள் அந்தி நேரம்
வான் பறக்கும் பறவையினமும் ஓயும் நேரம்
கார் குழலாள் காத்திருந்தாள் சாலை ஓரம் !

பார்த்திருந்த நாயகனும் வந்து விடவே
பூத்திருந்த முகத்தினிலே பொலிவு கண்டேன்
காத்திருந்த கண்கள் அனல் வீசக் கண்டேன்-முகம்
சேர்த்தணைத்து காதலனும் கெஞ்சக் கண்டேன் !

நால்விழியில் நடக்கின்ற லீலைகளை இனி - தான்
நாணமின்றி பார்த்து நிற்கக் கூடாதென
வானில் ஒளி வீசி நின்ற நிலவும் கூட
மேகத்தின் ஊடே போய் ஒளியக் கண்டேன்
நான் மட்டும் நிற்கலாமோ அந்த நேரம் - என
நானுணர்ந்து நடக்கின்றேன் அந்திநேரம் !!

எழுதியவர் : ஜெயா பத்மனாபன் (2-Sep-10, 7:23 pm)
சேர்த்தது : JayalakshmiPadmanabhan
பார்வை : 647

மேலே