---- பாசம் பழைய கதை ---

---- பாசம் பழைய கதை ---

கிராமத்தின் ஒரு மூலையில்
கீற்று குடிசையின் கீழே
கிழிந்த சேலைக் கட்டி வாழும்
கிழட்டு தாய்க்கு
கூழோ கஞ்சியோ
குடித்து வாழ
மாதமாதம்
பணம் அனுப்பி வைக்கும்
முதல் தினத்தில்.....

பாடை கட்டும் பருவம்
பக்கத்தில் வந்துவிட்டதென
ஆசுவாசம் அடைகிறது மனசு..

ஒரு நாள்.....

அலுவலக கோப்புகளை
அலசும் வேலையில்
அதன் இடுக்கிலிருந்து
அழுக்கு படிந்த
கருப்பு வெள்ளை புகைப்படமொன்று
அவிழ்ந்து விழுகிறது.

காலமான கரப்பான்பூச்சியை
கையில் எடுக்கும் முனைப்பில்
அருவருப்போடு
அப்புகைப்படத்தை
விரல்களின் நுனியில்
பற்றி எடுத்தேன்.

இந்திர தேசத்தின்
இளவரசிப் போல
அங்கமெல்லாம் தங்கமணிந்து
மங்காத பட்டுடுத்தி
மந்தகாச புன்னகையில்
மருமகளாக நிற்கும்
என் தாயின்
திருமண புகைப்படம் அது.

அவள் அணிந்த தங்கமெல்லாம்
அடகு கடைக்கு வந்தால்தான்
நான் அமெரிக்காவிற்கு.......

தகப்பன் போனபின்னே
என் தலைவலி போக்க
தாலி அடகு வைத்த
தாயின் ஞாபகம்
மறுபடியும்
மண்டை வலிக்கும் போது
மட்டும்தான்.....

--- தமிழ்தாசன் ---

எழுதியவர் : ----தமிழ்தாசன்---- (2-Mar-12, 2:16 pm)
பார்வை : 399

மேலே