[152 ] வழிநடத்திச் செல்ல வாரும்..!

சிதைபொருள் இல்லை வாழ்க்கை!
....சேர்த்தவை அழிந்து போகும்!
விதைகள்ஒன் றான போதும்
....வீழிடம் பொறுத்து வாழ்க்கை!
கதையிது சொல்லி நாங்கள்
....கைச்செயல் புரிந்து வாழப்
புதைபொருள் எடுத்துத் தூவிப்
....பொய்முகம் களைய வந்தீர்!

நோவுகள் நீங்கச் செய்தீர்!
....நொந்தவர் களிக்கப் பார்த்தீர்!
காவு,எனச் சிலுவை ஏறிக்
....காதலின் உயர்வு காட்டிச்
சாவிகள் அகற்ற வந்தீர்!
....சாத்திரம் விளக்கிக் காட்டிச்
சேவைகள் ஏற்க வன்றிச்
....செய்து, உயிர் தழைக்க வாழ்ந்தீர்!

பாவிகள் பிழைக்கப் பாடு
....பட்டுயிர்த் தெழுந்து 'மேசி
யா'வென வென்று நின்றீர்!
....யாவரும் புகழ வாழ்வீர்!
....................[வேறு]
பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றப்
....பிறர்க்குதவி இறைத்தொண்டாய் ஆற்ற
அறிவின்கண் அகங்காரம் நீக்க
....'அடுத்தவரின் பிழை'மறந்து தூக்கத்
'தெரிந்தவர்பால் கோடாமை' ஊக்கித்
....தெளிந்தமதி உள்ளவனாய் ஆக்கி
வறியன்எனை உயர்த்திடவே வாரும்!
....வாய்எனதோ உம்புகழே பேசும்!
..............................[வேறு]
செறிந்தபொருள் கவிதையிலே சிறக்க வேண்டும்
....சிந்தையிலே அதுமுதலில் பிறக்க வேண்டும்!
எறிந்தபொருள் கீழிறங்கி வருதல் போல,
....எடுத்தோத , அதுகாதில் இறங்க வேண்டும்!
அறிந்தவர்கள் மட்டுமிலா தனைத்துப் பேரும்
....அனுபவிக்கும் திறன்வேண்டும், ஆர்வம் வேண்டும்!
அறிந்தவனே! ஏசப்பா! அன்பின் ஊற்றே!
....அடியேனை வழிநடத்தி அழைத்துச் செல்லும்!
[வேறு]

அன்பும் அருளும் பொங்கட்டும்!
....அமைதி உலகில் தங்கட்டும்!
துன்பம் விலகிப் போகட்டும்!
....துயரம் மறைந்து சாகட்டும்!
தென்பும் திறனும் பெருகட்டும்!
....தேச எல்லை மறையட்டும்!
தன்போல் பிறரை நேசிக்கும்
....தன்மை எங்கும் வளரட்டும்!

-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (12-Mar-12, 8:06 am)
பார்வை : 164

மேலே