பொங்கப் பாண இட்லி.......

கொண்ட சேவல் ஒன்னு
குடுச மேல நின்னுகிட்டு,
குய்யோ முறையோன்னு கூவுது.
செங்கப் பொடிய செதரவிட்ட
மாதிரி, செவந்து கிடக்குது
வானம்.
பக்கத்து குடுச ராமாத்தா
வாசத் தொலிக்கிற சத்தங்கேட்டு,
ரணகளப் பட்டு எழுந்திரிச்சா
ராக்காயி.
விடிஞ்சு போன சேதிய
தம் புருஷன் காளியப்பனுக்கு,
காலால உதச்சு உணரவச்சா.
ஆறு வயசு ராசுக்குட்டியும்
ஆவேசத்துல திமிறி எழுந்து,
ஆத்தா இட்லி! ஆத்தா இட்லின்னு!
ஆர்பரிச்சான்.
அட எடுபட்ட கிறுக்கா.
உன்ன நான் அவுதியல
பெத்தேனோ?
பொழுது விடிஞ்சு இன்னும்
கக்கிசு கூட போகிலியே,
அதுக்குள்ள உன் வகுத்துக்கு
தீணி கேக்குதோன்னு,
ராக்காயி கண்டிஞ்சு உலுந்தா.
இதகேட்ட நம்ம பய,
இடுக்குல இருந்த ஈரல
துண்ட, கட்டவெரலுல சுத்தி,
வாயுக்குள்ள முட்டு குடுத்தான்.
பொங்கலோ பொங்கல்ன்னு
ஊரு சனம் கூவும் சத்தம்,
காளியப்பன் காத கிழிக்க.
கமுக்கமா ராகாயி காதுல
பொங்க அரிசியும், வெள்ளம்
வாங்க காசு இல்லன்னான்.
கூடவே ஈடு ஈடா இட்லி சுட்டு
நம்ம குட்டி மவராசன
குசிப் படுத்துன்னு சொல்லிப் போட்டான்.
இதக் கேட்ட ராக்காயி,
உண்டற லட்சணம் தெரியாதோ?
இல்ல ஊரு சனந்தான் அறியாதோ?
முந்தாநேத்தே முதலியார்கிட்ட
கந்து வட்டிக்கு, கடன வாங்கி,
இட்லி மாவரைச்சு,
தேக்குசாவுல நெரச்சுப்
போட்டேன்னா ராகாயி.
எகத்தாளம் பேசாதா
எருமைக்கு பொறந்த சிறுக்கி,
கால வாரி நெலத்துல
அடிச்சிடுவேன் , கம்முன்னு
இருந்துக்கோ சொல்லிப் போட்டன்.
முதுகெலும்பு ஒடஞ்சு போக
வயகாட்டுல செத்து வந்தாலும்,
கெடக்கிற கூலி வெறும்
அறுபது ரூவா.
இதுல எங்க சேத்து வக்க,
இல்ல பொங்க பொங்கித்தான்
திண்ணு பாக்க.
எட மறச்ச ராக்காயி,
அட கூறுகெட்ட மச்சான்,
சும்மா வெசனப் படாத,
இந்த கேணச் சிறுக்கி
சொன்னது அம்புட்டும் நெஜமில்ல,
நீ ரோசிக்கவும் தேவையில்ல.
மனசு கலங்காம,
பாயி கடைக்கு போயி,
ஒடச்ச கடலையும்,
ஒரு ரூவாக்கு தேங்கா
கீத்தும் வாங்கியா சொன்னா.
காஞ்சு கெடந்த வெறகேடுத்து,
மருந்துபோல மண்ணெண்ன காட்டி,
பதுக்கி வச்சிருந்த நாலு
தீக்குட்ச்சீல ஒன்நெடுத்து,
சூதானமா ஒரசிவிட்டு,
அடுப்ப பத்த வச்சா.
வச்சிருந்த ஒரு பானையில
தண்ணி நெரப்பி,
கொதிக்க விட்டு,
தட்டக் குச்சிய ஏத்த
எறக்கமா வச்சு,
நறுக்கி வச்ச பழைய லுங்கி பிட்ட,
கசக்கி எடுத்து,
தட்டக் குச்சி மேல விரிச்சு விட்டு,
குழி பண்ணி,
அதுல மாவ நெரப்பி,
ஒயர் கூடைய பாண மேல கவுத்தி,
இவ மாத்துப் பொடவையாள
ஒயர் கூடைய பொத்தி வச்சு,
இட்லிய வேக விட்டா.
வெந்த இட்லிய,
ஆவி பறக்க,
அலுமினிய தட்டுல போட்டு,
அரச்சு வச்ச தேங்காச் சட்டினிய
ஊத்தி விட்டு,
ராசுகுட்டிய எழுப்பி விட்டா.
எழுந்த குட்டி பய,
கோட்டு வாய துண்டுல தொடச்சி,
சம்மனங்காலிட்டு தட்டுமேல
பாஞ்சான்.
இட்லியை பிச்சு பாத்தா,
பிய்யவே இல்ல,
முட்டி முட்டி முடியாம போக.
கையாள இட்லியை எடுத்து
கடிச்சுப் பார்த்தான்.
ஐயோன்னு ராக்காயி கத்த,
என்னாச்சுன்னு காளியப்பன் கதற,
ராசுக்குட்டிக்கு ஒன்னுமே புரியல.
கொல்லையில போறவனே,
நெதம், நெதம் நடுசாமத்துல
என் கையை கடிக்கிறதே
வேலையா போச்சு.
இன்னைக்கும் கெனாவா?
அதே இட்லியா?
இட்லி திண்ணு ஆறு
மாசங்கூட ஆவுலையே,
அதுக்குள்ளே குறு நில
ராசாவுக்கு இட்லி கேட்க்குதோ?
இழுத்துப் பொத்திட்டு தூங்கு
இல்லன்னா குடிக்கிற கஞ்சியையும்
கொறச்சு புடுவேன்னு சொன்னா,
ராக்காயி!!!!