நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை
வீடு கட்டக் கொட்டப்படுகிற
ஆற்றுமணலில் இன்னும்
சிப்பிகள் கிடப்பதை.
அதனினும் முடியாதது
சிப்பியின் உட்புறச் சுவர்களின்
மாய மினுமினுப்புக்குள் குதித்து
எல்லாச் சிறுபிள்ளைகளும்
நீந்திக் கொண்டிருப்பதை.
மணல் நறநறக்கிற
சொப்பனங்களுக்கிடையில்
அவர்கள் புரண்டு படுக்கையில்
பொத்திய கைகளுக்குள்
புதைந்திருக்கும்
சிப்பிகளின் இதயத்திலிருந்து
பெருகுகிறது
வற்றாத நதி ஒன்றின்
பாடல்.

எழுதியவர் : (27-Mar-12, 5:36 pm)
சேர்த்தது : Vinay kumar
பார்வை : 146

மேலே