நெஞ்சு பொறுக்குதிலையே..... ஒரு உண்மைச் சம்பவம்
தவறு செய்பவர்களை திருத்தவேண்டியதுதான் சட்டங்களின் நோக்கம். ஆனால் அதில் உள்ள ஓட்டைகளால் , அதை மீறுபவர்களாலும், அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாக மீட்டுக்கொண்டுவரும் வழக்கறிஞர்களாலும்,அவர்களுக்கு துணை போகிற அரசு அதிகாரிகளாலும், பல் பிடுங்கப்பட்ட சிங்கம் போன்றதொரு அவலமான நிலைக்கு வந்திருப்பதற்கு உண்மையான இந்தியர்கள் அனைவருமே வெட்கித் தலைகுனிய வேண்டுமென்பது நிஜத்திலும் நிஜம். இதற்கு நான் சமீபத்தில் சந்தித்த ஒரு மோசமான சம்பவம் இன்னுமோர் சாட்சி....
எங்கள் காலனிவாசிகளின் குடும்பங்களில் கடந்த ஒரு மாத காலமாக தொழில் ரீதியாக, குடும்ப ரீதியாக என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டு
மாறி,மாறி மன உளைச்சலை தந்துகொண்டிருக்கின்றன. போன வாரத்தில் காலனி உறுப்பினர் ஒருவர் , இரவு அவரது குழந்தையையும் அழைத்துக்கொண்டு அருகே உள்ள ஒரு ஒட்டலில் புரோட்டா வாங்கிக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது அவருடைய மோட்டார் சைக்கிள் மீது , பின்புறமாக வந்த ஒரு ஸ்கார்பியோ ஜீப் தறிகெட்ட வேகத்தில் மோதியதில் , இவரின் வாகனம் தூக்கி வீசப்பட்டது. தெய்வாதீனமாக.. அவரும், அவர் குழந்தையும் வெறும் சிராய்ப்பு காயங்களோடு உயிர் தப்பினார்கள்.அதே சமயம், சடர்ன் பிரேக் அடித்ததில் ஜீப் இரண்டு குட்டிக்கரணம் போட்டு சாலையின் மறு ஓரத்திற்கே போய்விட்டது. ஒரு பக்கம் முழுதுமே நல்ல சிராய்ப்பும், சேதாரமும். ஆனால் உள்ளே இருந்த ஆட்களுக்கு எந்த ஒரு காயமும் இல்லை. மோதிய இடம் வாகனப்போக்குவரத்து அதிகமாக உள்ள இடமாக இருந்ததால் மோதியவர்களையும், வாகனத்தையும் கூட்டம் பிடித்துக்கொண்டது. பிரச்னை பெரிதாக ஆவதற்குள்ளாக அந்த வழியே வந்த இரு காவலர்கள் , கூட்டத்தின் கொந்தளிப்பை கட்டுப்படுத்தி அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு வாகனத்தையும் , வாகன ஓட்டியையும் அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
இதிற்கிடையில் பைக்கை ஓட்டி வந்த என் நண்பரையும், அவரது குழந்தையையும் அருகிலிருந்த டாக்டரிடம் அழைத்து சென்று முதலுதவிக்கு ஏற்பாடு செய்தோம்.
அடுத்த நாள் காலை ... காவல் நிலைய ஏட்டு இரு தரப்பினரையும் எப் ஐ ஆர் பதிவு செய்ய அழைத்திருந்ததார் . யாருக்கும் பெரிதாக அடிபடாத நிலையில் , கேஸ் போட்டால் நீண்ட நாள் நடத்த வேண்டும் என்று என் நண்பர் தயங்க , ஜீப்பிற்கு இன்சூரன்ஸ் எடுக்காத நிலையில் , கேஸ் போட்டால் வண்டியை வெளியே எடுப்பது தாமதமாகும் என்று ஜீப் ஓட்டி வந்தவர் கருத , பிரச்னையை பேச்சு வார்த்தை மூலமே முடித்துக்கொள்ளலாம் , கேஸ் வேண்டாம் என்று இரு தரப்புமே கருதியதால் போலீஸ் நிலையத்துக்கு வெளியில் பேச்சு வார்த்தை நடந்தது.
பேச்சு வார்த்தைக்கு ஜீப் ஓட்டுனர் தரப்பில் பேச, இரண்டு வாலிபர்கள் , நல்ல வாட்ட சாட்டமாக , கையில் தங்க மோதிரங்கள், தங்க காப்பு , கழுத்தில் வடமாலை மாதிரி தங்க செயின் என மைனர்கள் போல வந்திருந்தார்கள்.
எங்களுக்கு கொஞ்சம் வியப்புதான்... பேரம் பேசி வண்டியை எடுக்க வந்திருப்பவர்கள் இப்படி அல்டாப்பு காண்பிக்க் வேண்டிய அவசியம் என்ன.. ? இதையே சாக்காக வைத்து எதிராளிகள் அதிகம் பணம் கேட்கக்கூடுமென ஏன் அவர்களுக்கு தெரியவில்லை... ? எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை..
ஜீப் ஓட்டி வந்தவரின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நேர்ந்திருந்ததாலும் , வண்டிக்கு இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தாலும் அவர்களும் புகாரில் சிக்கிக்கொள்ளாமல் வண்டியை எடுத்துச்செல்வதிலேயே குறியாக இருந்தார்கள்.
பைக்கிற்கும், என் நண்பர் மற்றும் அவரின் குழந்தைக்குமென.. மருத்துவ செலவாக இதுவரை ஏழாயிரம் ரூபாய் ஆகி இருந்தது. அது போக அவருக்கு முதுகுத் தண்டில் லேசாக வலி இருந்ததால் , ஒரு வாரம் பார்த்துவிட்டு வலி குறையவில்லை என்றால் ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துவிடலாம் என்று டாக்டர் சொல்லி இருந்தார். எப்படியோ இன்னுமோரு மூன்றாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ரூபாயாவது குறைந்தது செலவாகும் என்று தெரிந்தது. அதுபோக பத்து நாள் ஓய்வு எடுக்கவேண்டுமென டாக்டர் கூறிவிட்டார்.
இதை கணக்கில் கொண்டு இருபதாயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பித்தால்தான் இறுதியாக ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு வருவார்கள் , ஓரளவிற்க்காவது செலவுகளை சரிகட்டி விடலாம் என்று நாங்கள் கருதியால் இருபதினாயிரம் ரூவாயிலிருந்து பேரத்தை ஆரம்ப்பித்தோம்.
”அதிகமாக கேட்கிறீர்கள் , அவ்வளவெல்லாம் தரமுடியாது .. இவ்வளவுதான் தரமுடியும் “ என்று ஒரு தொகையை குறிப்பிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த எங்களுக்கு அவர்கள் சொன்ன பதில் தூக்கி வாரிப்போட்டது.
“ஹலோ சார் , கேட்கறதுங்கறதுக்காக என்ன வேணாம் கேட்கலாம்னு பார்க்கிறீங்களா.. ? என்ன சார் செலவு ஆச்சு உங்களுக்கு.. ? வண்டிக்கு ஒரு ரெண்டாயிரம், ஆளுக்கு ஒரு மூவாயிரம் ஆகியிருக்குமா.. ? எங்களுக்கு பாருங்க .. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல செலவு இருக்கு... வண்டியோட சைடு மொத்தமா அவுட்..”
” உயிரை பத்தி யோசிக்காமா , மேல உட்டு தூக்கி இருந்தோம்னா கூட, அதிக பட்சம் ஒரு பத்தாயிரம்தான் எங்களுக்கு செலவாகியிருக்கும்... இப்படித்தான் போன வாரம் கூட , நைட்டு பழனியிலிருந்து வர்றப்ப எங்க லாரி டிரைவர் .. லேசா ஒரு செகண்டு அசந்துட்டார்.. எதுத்த மாதிரி மொபட்டில வந்த இரண்டு பேரு காலி... எங்களுக்கு எவ்வளவு செலவு ஆச்சு தெரியுமா... வெறும் இருபதாயிரம்தான்...ஒரே வாரத்தில வண்டியை எடுத்தாச்சு.. ஆளும் ரிலிஸ்.. வண்டி இப்ப லைன்ல ஓடுது... ஆள தூக்கினாலே வெறும் பத்தாயிரம் தான் செலவு... நீங்க என்னடான்னா.... சும்மா லேசா காயம் ஆனதுக்கு.. இருபதாயிரம் குடு.. முப்பதாயிரம் குடுன்னுட்டு... “
இதைவிடவும் இன்னொருவர் , அந்த டிரைவரிடம் சொன்னதுதான் உச்சகட்டம்...
” ஏப்பா.... மணி... இதுக்குதான் எப்பவுமே ஆள்கள் குறுக்கே வந்தா தேவையில்லாமா வண்டியை ஒடிச்சு , ப்ரேக் அடிக்காமா , மேலயே உட்டு தூக்கிடுன்னு திரும்ப, திரும்ப சொல்றது... இப்ப பார்.... வண்டிக்கு செலவு பண்றதுமில்லாம...சாறுகாயம் பட்டதுக்கே இருபதாயிரம், முப்பதாயிரம் கேட்கறாங்க...
வண்டிக்கு இன்சூரன்ஸ் வேற கட்டாமா விட்டு தொலைச்சுட்டே... இன்சூரன்ஸ் இருந்திருந்தா வக்கீலுக்கு ஒரு ரெண்டாயிரம், கோர்ட்டு பைன் ஒரு ரெண்டாயிரத்தை கட்டிட்டு வண்டியை தூக்கிட்டு போயிருக்கலாம்.. இப்ப பார்... தெண்டமா எத்தனை காசு செலவாகுதுன்னு “”
உண்மையிலேயே விக்கித்துப்போனேன் நான் .. காசுக்கு இருக்கிற மரியாதையில் ஒரு கால்வாசி கூடவா மனித உயிர்களுக்கு இல்லை... அடக்கடவுளே... மனிதர்களை காப்பாற்ற வேண்டிய் சட்டங்களே இப்போது அவனது கழுத்தில் மாட்டி இறுக்கிக்கொண்டிருக்கிறதுபோலும்...
இன்றைய காலகட்டத்தில் மனித உயிருக்கு மதிப்பு குறைவென்பது நிஜம்தான்.... என்றாலும் இவ்வளவு மலிவாக, ஆட்டையும்,மாட்டையும் விடவும் கேவலமாக போனதைத்தான் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை..
ச்சீ. ச்சீ. என்றாகி விட்டது எனக்கு.
மனிதாபிமானமே அற்றுப்போன அந்த மனிதர்களிடம் பேரம் பேச எனக்கு உடன்பாடில்லை.. என் நண்பர்தான் தொடர்ந்து பேசி
பணம் பத்தாயிரம் ரூபாயை இறுதியாக வாங்கிக்கொடுத்து பிரச்னையை முடித்து வைத்தார். இருந்தாலும் இன்னுமே என் மனத்தை ரணப்படுத்திய அந்த அக்றிணை மனிதர்களை என்னால் மறக்கவே முடியவில்லை..
இனி... எந்த கண்ண பரமாத்மா வந்தாலும் குணப்படுத்த முடியாத அளவிற்கு கலி முற்றித்தான் போய்விட்டது.... ???!!