எங்கே அவள் நிலவே?
நான்பிறந்தேன் அன்புக் கூட்டினிலே இந்த
நாட்டினிலே ஒருவீட்டினிலே
தானிருந்தாய் நிலா வானத்திலே நீயும்
தூரத்திலே முகிலோரத்திலே
ஏன் நடந்தேன் அந்திநேரத்திலே நதி
யோரத்திலே மனப்பாரத்திலே
தேன் ஒளிர்ந்தாய் அந்த நேரத்திலே அந்த
நீலத்திரை விரிமேகத்திலே
வானத்திலே நினைக் காண்கையிலே வரும்
மோகத்திலே உணர்வேகத்தீயே
கானத்திலே இழைராகமென எனைக்
கூடி இருந்தவள் போனதெங்கே?
மீனதிலே வடிவானதென விழி
மூடும் இமைகளைத் தானுடையாள்
தேனதிலே குளித்தேகும் மொழிகளைத்
தூவும் அவளினைக் காணவில்லை
சோலை மலர்களும் தூங்கியதே தென்றல்
ஏங்கியதே மணம் வாங்கியதே
மாலைவெயில் மஞ்சள் போயிடவே
மலர்மீதினிலே வண்டு தூங்கியதே
பாலையிலே உள்ள நீரெனவே இவள்
பார்வையிலே இருளானதுமேன்
மேலையிலே ஒளி ஆதவனும் ஒளி
மாழுவதாய் எண்ணம் மாறியதேன்?
காரிருளே சுற்றிக்காணலிலே அவள்
காதலிலேமனத் தேடலிலே
நீரினிலே உள்ளதானலையே எனும்
நேரழகில் மனமாடியதே
தேரினிலே வரும் தேவியென அவள்
தீயெனப் பூமனம் தீண்டியவள்
ஏரெனவே உளம்மீதெழுதும் இள
ஏந்திழையோ எனை ஏய்த்ததுமேன்
தேனெனவே ஒளிப் பால்நிலவில் அலை
துள்ளிடவே மின்னி ஆடியதே
மானெனவே துள்ளி ஓடியதே ஒரு
மங்கையென்றே நதி பொங்கிடவே
தண்ணிலவே உனை எண்ணியன்றோ - ஒரு
அல்லிமலர்ந் துள்ளம் ஏங்கியதே
எண்ணமதி லுனைத் தான்நினைத்தே பெரும்
ஏக்கமதில் நீரிலாடியதே.
இன்பம்தருங்குளிர் வீசியதே உடல்
கூசியதே மெல்ல ஆடியதே
சின்னதென இசை தென்றலிலே வந்து
சேர்ந்திடவே தேனும் பாய்ந்திடவே
அன்பை இழந்தவன் நெஞ்சினிலே வந்து
ஆறுதல் சொன்னது உன்னொளியே
நன்றிசொல உனைத்தேடுகின்றேன் அந்தோ
நாடி வந்த முகில் மூடியதேன்?