புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
“பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது
சிறுத்தையே… வெளியில் வா…..!
எலியென உனை இகழ்ந்தவர் நடுங்க
புலியென செயல்செய்யப் புறப்படு வெளியில்”
என்று, விழிமூடிக் குறட்டை விட்டுக்கொண்டிருந்த தமிழனை உறக்கத்திலிருந்து எழுப்பி விட்டபெருமை பாவேந்தர் பாரதிதாசனைச் சாரும். இருபதாம் நூற்றாண்டில் தமிழர்களின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும் அவர்தம் பங்களிப்பு சொல்லி மாளாது. தன் நாவாலும், பேனா முனையாலும் தமிழர்தம் மனத்தினில் ஆழ விதைத்து பின் அறுவடை செய்தவர் என்று சொன்னால் மிகையாகாது.
அந்த மகத்தான மாகவிஞன் 29.04.1891 - ஆம் ஆண்டு புதுச்சேரியில் கனகசபை முதலியாருக்கும், இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். அவர்தம் இயற்பெயர் சுப்புரெத்தினம் என்றாலும் கூட, பின்னாளில் மகாகவி சுப்பிரமணியபாரதியின் மீது அளவு கடந்த பற்றுதல் காரணமாகத் தன்பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். நான் என்றைக்குமே பாரதிக்கு அடிமைதான் என்று தன் பெயரை அவ்வாறு மாற்றிக்கொண்டு பாரதியின் புகழுக்கு மணிமகுடமாய்த் திகழ்ந்தார்.
மூடத்தனத்தின் முடைநாற்றத்தில் மூழ்கித் திளைத்தவர்களைத் தன் “பா”த் திறத்தாலே பாலித்தவர் பாவேந்தர். நேற்று மணம்முடித்து இன்று கணவனை இழந்தவள் விதவை என்றும், அவள் எதிரே வந்தால் அவசகுனம் என்றும் மீண்டும் அவள் திருமணம் செய்து கொண்டால் பாவம் என்றும் இருந்து வந்த, கண்மூடி பழக்கம் மண்மூடிப் போக விரும்பியவர் பாவேந்தர்.
“மாலையிட்ட மணவாளன் இறந்துவிட்டால்
மங்கை நல்லாள் என்ன செய்வாள்..? – அவளை நீங்கள்
ஆலையிட்ட கரும்பாக்கி உலக இன்பம்
அணுவளவும் அடையாமல் சாகச்செய்தீர்.”
என்று அந்த கைம்பெண்ணுக்கு மறுவாழ்வு தந்துதவ, இவ் உலகத்தோர்க்கு விண்ணப்பம் செய்த மாபெரும் புரட்சியாளன் பாவேந்தர். அதுமாத்திரமல்ல,
“துணைவி இறந்த பின் வேறு துணைவியை
தேடுமோர் ஆடவன் போல் - பெண்ணும்
துணைவன் இறந்தபின் வேறு துணைதேடச்
சொல்லிடுவோம் புவி மேல்”
என்று பறைசாற்றினார். மனைவி இறந்த பின் வேறொரு திருமணம் செய்து கொள்ளும் ஆண்களைப்போல். கணவன் இறந்ததற்குப் பின்னால் பெண்கள் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தினார். பாவேந்தரின் இந்த வற்புறுத்தலையும் வலியுறுத்தலையும் மனத்தில் கொண்டு தான் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், விதவைகள் மறுமணத்திட்டத்தை அமுல்படுத்தியதோடு மாத்திரமல்ல, விதவையைத் திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்களுக்குத் தங்கப்பதக்கமும் அளித்து ஊக்குவித்தார். அதுமாத்திரமல்ல, குழந்தைத் திருமணத்தை வன்மையாகக் கண்டித்தவரும் பாவேந்தர் பாரதிதாசன் தான். முதன் முதலில் தமிழில் பிரதாபமுதலியார் சரித்திரம் என்ற நாவல் எழுதிய பெருமைக்ககுரிய நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள், முதன் முதலில் கைம்பெண்களின் நிலைமையையும், குழந்தைத் திருமணத்தையும் வன்மையாகக் கண்டித்தார். அவர் அன்றைக்கு விதைத்த விதைதான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாக எழுபத்தி முன்று ஆண்டு காலம் இந்த மண்ணில் வாழ்ந்து பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும், அவலங்களுக்கும் தன் பேனா முனையால் பரிகாரம் தேடியவர் ஆவார்.
அதுமாத்திரமல்ல சாதி, மத கொடுமைகளைக் கடுமையாகச் சாடினார். அவர் கவிஞர் மாத்திரமல்ல, மிகப்பெரிய கட்டுரையாளர் என்பதனை சாதிக்கொடுமைகளுக்கு எதிராக “எம்டன் கப்பல்” என்ற தலைப்பில் 1931-இல் புதுவை முரசு பத்திரிக்கையில், அன்றைக்கு அவர் எழுதிய கட்டுரை, பாமரமக்களின் உள்ளத்தை ஊடுறுவியதோடு மாத்திரமல்ல, படித்தவரின் நெஞ்சத்தையும் நெக்குறுகச் செய்தது.
உலகமகாயுத்தம் துவக்க காலத்தில் ஜெர்மன் தேசத்து “எம்டன்” என்ற ஆயுதக்கப்பல் சென்னையைத் தாக்கிவிட்டு கடல் வழியே புதுவைத் துறைமுகத்தை அடைந்தது. இதனை அறிந்த புதுவை மக்கள், அலறி அடித்துக்கொண்டு, ஆண்களும் பெண்களுமாக, ஏழைகளும் பணக்காரர்களுமாக புதுவையை விட்டு, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, புதுவையிலிருந்து 15 கி.மீ தூரமுள்ள கூனிச்சம்பட்டு என்ற கிராமத்தில் அகதிகளைப்போல தஞ்சமடைந்தார்கள். அந்தக் கிராமத்து மக்கள், அவர்களுக்குத் தங்க இடம் கொடுத்தார்கள். அந்த எம்டன் கப்பல் நம் கிராமத்தையும் தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் அந்த கிராமவாசிகளும் சுயநினைவற்று வந்தவர்களிடம் சாதி மதம் பாராமல் உதவி செய்தார்கள். வந்தவர்களும், இருந்தவர்களுமாக தங்கள் உயிர் போய் விடுமோ என்ற அச்சத்தில் அனைவரும் சமத்துவமாகவும், சகோதரத்துவமாகவும் இருந்தனர்.
இரண்டுநாள் கழித்து எம்டன் கப்பல் புதுவையை வி;ட்டுப் போய் விட்டதாக செய்தி கிடைக்க அனைவரும் அச்சம் நீங்கி இயல்புநிலைக்குத் திரும்பினார்கள். அகதிகளைப்போல வந்த புதுவை நகர வாசிகள் தங்கள் ஊருக்குச்செல்ல ஆயத்தமானார்கள். அப்போது கூனிச்சம்பட்டு கிழவி ஒருத்தி, “செர்மானிய கப்பல் வந்தாலும் வந்துச்சி…. இந்த ஊர்ல கீழ் சாதி, மேல் சாதின்னு இல்லாம.., கேவலம் ஒன்னா இருக்க வேண்டியதா போச்சி…….” என்று இழிவாப் பேசினாள். இதைக்கேட்டு பக்கத்து வீட்டில் நின்றிருந்த நகரத்துப் பெண் ஒருத்தி “ ஏம்மா…. கீழ் சாதி, மேல் சாதின்னு ரெண்டு நாளா தெரியலையா…? இன்னைக்குத்தான் நெனப்பு வந்துச்சா..? நீ.. மேல்சாதின்னு தம்பட்டம் அடிக்கிறத நிறுத்து…” என்றார்.
இதைக்கேட்ட கிழவிக்கு வந்தது கோபம். அந்தத் தாழ்ந்த சாதியின் பெயரை உச்சரித்து, “ உங்க.. சாதிக்கே உள்ள புத்திய காட்டிட்டியே…” என்று கேவலமாக வசை பாடத் தொடாங்கினாள். இதைக்கேட்ட அந்த நகரத்துப்பெண் கண்ணீர் விட்டழுதாள். ஊருக்கு செல்ல வண்டியை தயார்படுத்திக் கொண்டிருந்த கணவன், மனைவியின் அழுகையைக் கேள்வியுற்று வந்து அந்தக் கிழவியை வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்த்தான். இதனைக்கேட்டு, சாப்பிட்டுக்கொண்டிருந்த அந்த கிழவியின் மருமகன் விறுவிறுக்க ஓடிவந்து, அந்த நகரத்துப் பெண்ணின் கணவனைவச் சாதிப் பெயர் சொல்லி திட்டித்தீர்த்தான். பிறகு ஒருவருக்கு ஒருவர் கைகலப்பு உருவானது.
பிறகு அந்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள தாழ்ந்த சாதியினரும், மேல் சாதியினரும் கூடினர். இரண்டு பிரிவினருக்கும் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு, சாதிக்கலவரமாக உருவானது. இதில் 20 பேர் பலத்த காயமடைந்தார்கள். 15 பேருக்கு கைகால் முறிவு ஏற்பட்டது. ஒருவர் உயிர் இழந்தார். மருத்துவமனையில்லாத அந்தக் கூனிச்சம்பட்டு கிராமத்தை விட்டு, புதுவை மருத்துவமனைக்கு, பாதிக்கப் பட்டவர்களையும், அவரது உறவினர்களையும் ஏற்றிக்கொண்டு வண்டிகளில் வரிசையாகச் சென்றனர். வழியில் என்ன நடந்தது என்று கேட்டவர்களுக்குப் பதில் கூற வெட்கமாக இருந்தது. இது தான் பாவேந்தர் எழுதிய கட்டுரையின் சாராம்ஸம். உண்மையில் நிகழ்ந்த இந்த நிகழ்வை, பாவேந்தர் கட்டுரையாகத் தீட்டியிருப்பதனை இன்றைய இளைய சமுதாயத்தினரின் இதயங்களில் பதிவு செய்வதில் பெருமைப்படுகிறேன். அதுமாத்திரமல்ல, அந்த கட்டுரையின் இறுதியில், “ வெட்கக்கேடு…… ஜெர்மானிய யுத்த கப்பலான எம்டனிடமிருந்து தப்பித்துக் கொள்வது சுலபம். ஆனால் சாதி என்னும் அக்கிரமத்திலிருந்து தப்பி உயிர் பிழைப்பது என்பது சுலபமானது அல்ல…” என்று எழுதி முடித்தார்.
இதனைத்தான் பாரதி சொன்னாhன்,
“அக்கினி குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிடை பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு”
என்றான். அக்கினி குஞ்சு என்று இன்றைய இளைஞர்களையும், பொந்து என்று, கூனிச்சம்பட்டுக் கிழவியைப்போன்ற பழைமைவாதிகளையும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கலாமோ எனக் கருதுகிறேன். ஏனென்றால் பல ஆண்டுகளாக தழைத்திருக்கும் மரத்தில் தான் பொந்து விழும். ஐந்து ஆண்டு, ஆறு ஆண்டு, பத்தாண்டு கழித்த மரங்களில் பொந்து ஏற்படாது. பல ஆண்டு காலம் இருக்கும் மரத்தில் தான் ;பொந்து விழும். எனவே சாதி, மதம் பேசிவரும் “பழைமைவாதி” என்ற பொந்தில், அக்கினி குஞ்சாகிய இன்றைய இளைஞர்களைப் பயன்படுத்தி ஓட்டு மொத்த பழைமைவாதிகளை ஒழித்திடுவோம் என்ற பொருளில் தான், பாரதி பாடியிருப்பாரோ என்ற ஐயப்பாடு எனக்குள் எழுகிறது.
எனவே இளைஞர்கள் வருங்கால இந்தியாவை சாதி சமயமற்ற புதியதோர் சமுதாயத்தைப் படைத்திட வீறுகொண்டு எழவேண்டும். சாதி என்பது சாமான்ய மக்களை மாத்திரம் பாதிப்புக்குள்ளாக்குவதில்லை. பெரிய பெரிய பொறுப்புகளில் உள்ள பெரிய பெரிய தலைவர்கள் கூட பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, பாபுஜெகஜீவன்ராம். இவர் இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சராகவும், துணைப்பிரதமராகவும் அங்கம் வகித்தவர். ஓருநாள் வாரணாசியில் “சம்பூர்னாநத்” சிலை திறப்பு விழாவிற்குப் பாபுஜெகஜீவன்ராமை அழைத்தார்கள். அவரும் வந்திருந்து அந்தச் சிலையயை திறந்து வைத்தார். விழா முடிந்தது, அனைவரும் சென்று விட்டனர். இதனை அறிந்த காசி சர்வகலாசாலையில் பயிலும் 15 மாணவர்கள் கங்கையிலிருந்து எடுத்து வந்த புனித நீரை “சம்பூர்னாநந்”தின் சிலையின் மீது ஊற்றினர்.
அங்கிருந்தவர்கள், அந்த மாணவர்களிடம் “ஏன் சிலை மீது தண்ணீரை ஊற்றுகிறீர்கள்..? என்ற கேட்க, “தாழ்த்தப்பட்ட பாபுஜெகஜீவன்ராம் எங்கள் புனித தலைவரின் சிலையை திறந்து வைத்ததனால் சிலை தீட்டுப்பட்டு வி;ட்டது எனவே கங்கை நீரைக்கொண்டு இந்தச் சிலையை புனிதமாக்குகிறோம்” என்றார்கள். இப்படிப்பட்ட கொடுமை நம் தேசத்து பாதுகாப்பு அமைச்சரைக்கூட விட்டுவைக்கவில்லையே… அந்த கங்கை நீரைக்கொண்டுவந்து பாபு ஜெகஜீவன்ராமின் தலையில் ஊற்றியிருந்தால் அவரும் புனிதத் தன்மையைப் பெற்றிருப்பாரே. இந்த மூடத்தனத்தைத்தான், இந்த சாதீய கொடுமையைத்தான் பாவேந்தர் தன் கடுமையான கவிதைவரிகளால் விமர்சித்தார்.
நம் நாடு அடிமைபட்டுக்கிடந்த நேரத்தில் வீதிக்கு வந்து வெள்ளையருக்கு எதிராக கோஷங்களும், போராட்டங்களும் நடத்தாமல் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு “சுதந்திரம் வேண்டும், சுதந்திரம் வேண்டும்” என்று மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தவர்களை, கூண்டில் அடைபட்டுக்கிடக்கும் பச்சைக்கிளியை பார்த்துக் கூறுவது போல,
“தச்சன் கூடுதான் உனக்கு சதமோ..?
அக்கா.. அக்கா… என்று நீ அழைத்தாய்.
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா.. மிளகா சுதந்திரம் கிளியே..?”
ஏய் கிளியே.. உனக்குத் தச்சன் வடித்துக்கொடுத்த கூண்டுதான் கதியா..? அந்த கூண்டுக்குள் இருந்து கொண்டு அக்கா, அக்கா என்று கத்திக்கொண்டிருக்கிறாய். அக்கா வந்து உனக்கு சுக்கையும், மிளகையும் தரலாம். ஆனால் சுதந்திரத்தை மட்டும் தரமுடியாது. எனவே, கூண்டை உடைத்துக்கொண்டு வெளியே வா என்று ஒட்டு மொத்தத் தமிழர்களையும், தன் “பா” திறத்தாலே பாடி வீதிக்கு அழைத்து வந்து, வெள்ளையனுக்கு எதிராகப் போராடத்தூண்டியவர் பாவேந்தர்.
அதுமாத்திரமல்ல, காதலைப்பற்றி அவர் யாத்த கவிதைகளோ ஏராளம் ஏராளம்…,
“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கும் மாமலையும் ஓர் கடுகாம்”
ஒரு பெண்ணினுடைய கடைக்கண்பார்வை ஒருவனுக்கு கிடைக்கப் பெற்று விட்டால், மிகப்பெரிய எவரஸ்ட் சிகரம் கூட அவன் பார்வைக்குக் கடுகைப்போன்று சிறிய அளவில்தான் தென்படுமாம்.
காதலியின் கடைக்கண் பார்வை கிடைக்கப்பெற்ற காதலனின் உளப்பாங்கை கவிஞர் வைரமுத்து கூறும்போது,
“உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்
ராத்திரியின் நீளம் விளங்கும்
உனக்கும் கவிதை எழுத வரும்
கையெழுத்து அழகாகும்
உன்பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்”
என்று “காதலித்துப்பார்” என்ற கவிதை வரிகள், பாவேந்தரின் கவிதை வரிகளால் வந்த, தாக்கம் தான் என்றால், மிகையல்ல.
கோவிலின் கர்ப்பக் கிரகத்துக்கு உள்ளே உள்ள கற்சிலைக்கும் செப்புச்சிலைகளுக்கும் அமுதம் படைப்பது ஏன்? அது என்றைக்காவது சாப்பிட்டது உண்டா? பசிக்கு கையேந்துவோர் மகிழ்சி தான், கடவுளின் மகிழ்சி என்றார்.
நடமாடு கோவில்கட்கே
நாமொன்று தந்தால்- இரங்கி
நலமொன்று புரிந்தால் - அது தான்
உடனே போய் பரமனுக்கே
உவப்பைச் செய்யுமப்பா…
பசியால் துடிக்கும் அனைத்து உயிர்களையும் நடமாடும் கோவில் என்றும், நாம் அவர்களின் பசியைப் போக்கிவிட்டால், அது கடவுளுக்கே மகிழ்சியைத் தருமென்றும் புரட்சி பண் பாடியவர் பாவேந்தர்.
இதைத்தான் சுவாமி விவேகானந்தர் “எந்த ஒரு உயிருக்கும், ஒரு துண்டு ரொட்டி கூடக் கொடுக்காத, எந்த ஒரு மதத்தையும் நான் மதம் என்று ஏற்றுக்கொள் மாட்டேன்” என்றார்.
தொழிலாளர் நிலை பற்றி எழுதும் போது,
“மாடாய் உழைப்பவர்க்கு வீடில்லை சோறில்லை
நாடோறும் அங்கம் வளையல் - ஆண்டை மனைவி
போட மட்டும் தங்க வளையல்.”
மாடாய் உழைப்பவனுக்கு இருக்க வீடுமில்லை, உண்ண உணவும் இல்லை அவன் அங்கம்(உடல்) வளைந்தது தான் மிச்சம் என்றும், முதலாளியின் மனைவி போட்டுக்கொள்ள மட்டும், அங்கமெலாம் தங்கத்தால் வளையல்கள். என்று பாட்டாளியின் நிலையையும், அவன் உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளியின் வசதியான வாழ்க்கையையும் வெளிச்சம் போட்டுக்காட்டியவர் பாவேந்தர்.
தமிழின் சிறப்பைக்கூற வந்த பாவேந்தர், பழங்களில் உள்ள சுளையின் சுவையை விட, கரும்பில் உள்ள சாற்றின் சுவையைவிட, குளிர்ந்த மலரில் உள்ள தேனின் சுவையைவிட. சுண்டக்காய்ச்சிய வெல்லப்பாகின் சுவையைவிட, பசு தரும் பாலின் சுவையைவிட, தென்னை தரும் இளநீரின் சுவையைவிட, என் தமிழின் சுவை பன்மடங்கு சுவைதரக்கூடியது. அதுமாத்திரமல்ல, என் உயிரே கூட தமிழ்தான் என்று தமிழின் இனிமையைச் சுவைபடக் கூறினார்.
மனிதனுக்கும் நோய் வந்தால் மருத்துவரை அணுகி மருந்து உட்;கொள்ளலாம். கால்நடைகளுக்கு நோய்வந்தால் மருத்துவரை அழைத்துக் குணமாக்கலாம். தமிழுக்கு நோய் வந்தால்……..? தமிழுக்கு நோயா..? ஆம்… இதோ… அந்த நோயையும் அதுதீர்க்க மருந்தையும் பாவேந்தர் சொல்லாலே கேளுங்கள்.
“கடவுள்வெறி, சமயவெறி கன்னல் நிகர் தமிழுக்கு நோய்..நோய் நோயே…..!
இடைவந்த சாதியெனும் இடர் ஒழிந்தால் ஆள்பவள் நம் தாய்…தாய்..தாயே…!”
என்று இந்த சமூக மறுமலர்ச்சிக்கு, புதுயுகம் புலர்வதற்கு பூபாளம் பாடியவர் பாவேந்தர். இப்படி தன் பேனா முனையால் மூவா தமிழெடுத்து தமிழர் தம் நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றி, வீழ்ச்சியுற்று, விசையொடிந்து போய்க்கிடந்த தமிழனை மீண்டும் வீறுகொண்டு எழுச்செய்தவர் பாவேந்தர்.
அந்த மகத்தான மாகவிஞனின் தமிழ்த்தொண்டைப் போற்றும் விதத்தில் 28.07.1946 - இல் கி.ஆ.பெ.விசுவநாதம், நாவலர் சோமசுந்தரபாரதியார், இரா.பி.சேதுபிள்ளை, ஜீவா, மு.வரதராசனார், நாவலர் நெடுஞ்செழியன், பம்மல் சம்மந்த முதலியார், ம.பொ.சிவஞானம் போன்ற தமிழறிஞர்களெல்லாம் வாழ்த்துரை நல்கிட, பேரறிஞர் அண்ணா பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கி அவருக்குப் பெருமை சேர்த்தனர். அந்த பொற்கிழியை அண்ணா கொடுத்தபோது, எங்கே பாவேந்தரின் கை கீழே தாழ்ந்து போய்விடுமோ எனக் கருதி, பித்தளை தாம்பாளம் ஒன்றை எடுத்து வரச்சொல்லி, அதில் அந்தப் பொற்கிழியை வைத்து, பாவேந்தரை எடுக்கச்செய்தார். பாவலர் பாவேந்தரின் கரங்கள் பொற்கிழி வாங்கும் நிலையிலும் உயர்ந்தே இருக்கவேண்டும் என்று எண்ணியே, கொடுக்கும் அண்ணாவின் கை தாழ்ந்தும், பாவேந்தர் கை உயர்ந்தும் இருக்கும்படி செய்து, பாவேந்தருக்கு சிறப்பு சேர்த்து, தமிழப்புலவர்களின் பெருமித நோக்கை உலகறியகச் செய்தார்.
அப்படிப்பட்ட அந்த மகத்தான மாகவிஞன் 21.04.1964 -இல் இயற்கை எய்தினாலும், “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்ற அவர்தம் கவிதை வரி வாயிலாக என்றும் நிலைத்திருப்பார்.
வாழ்க…அவர் தம் தமிழ்த் தொண்டு..!