இந்த உலகம்.........!

துளசி மாடம்.....
தூய காற்று.....
சூரிய உதயம்...
சுப்ரபாதம்......
இனிய உதயம்.....
புதிய உலகம்.....
எனது பயணம்.....
கவிதை தினமும்.......!

புள்ளினங்கள் பாடியது - புத்தம் 
புதுமலர்கள் ஆடியது....!
வண்டினங்கள் கூடியது - மலரில் 
தேனருவி தேடியது....!

வெள்ளியோடை ஓடியது - மானினம் 
விரும்பி அதை நாடியது...!
காற்று மலர் சூடியது - மனசில் 
கவலைத் துயர் வாடியது.....!

கயல்களெலாம்  சாடியது - நதியில்
கவிதைகள் போல நீந்தியது...
இன்பங்கள் கோடியது - இதயம்
இனிமைதனை ஏந்தியது.....!

கதிரவன் ஒளி அது - என்
கவி நடக்க வழி அது
காற்றடிக்கும் ஒலி அது - என்
கனவுலக மொழி அது......!

இன்ப இயற்கை எனக்குத் தந்த
இறைவனுக்கு நன்றி சொல்ல
ஆழ்மனசில்  மகிழ்ச்சி பொங்க 
ஆஹாவென ஆர்ப்பரிக்க.....
ஆண்டவனை தேடி நானே......
ஆலயத்துக்குள் செல்லலானேன்....!

பொற்றாமரைக் குளத்துக்குள்
புஷ்பங்கள் பூத்திருக்க.....
பொன் வண்ண மீன்கள் கூட்டம்
புதுப் பொலிவாய் துள்ளி விழ....
அப்பப்பா ஆனந்தம்.......!
ஆன்மாவின் சொர்க்கம் அது
ஆண்டவன் சன்னதி என்றுணர்ந்தேன்....!  

இனிமையான நிசப்தம்.....!
இதயம் அது தவக் கோலம்...!
இமை மூடி 
இறை வேண்டி சிலை போலே நின்றிருந்தேன்...!

பக்திப் பரவசம்.........
பரமாத்மாவோடு கலக்கும் சமயம்........

தன்னிலை மறக்கும் நேரம்...........
தடாலென ஒரு சத்தம்........ 

திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்

கருவறை இடுக்கிலிருந்து.......
கலைந்த சீலை சரி செய்தபடி
அரைக் கிழவி ஒருத்தி அவசரத்தில் ஓடி வர....
களவாணிப் பூசாரி
கரும் பூனைபோல் பின் மெல்ல வந்தான்......!

அட.....
கருமம் பிடித்த சனியன்களா.....!
உங்கள்....
காமக் களியாட்டத்திற்கு
கடவுள் சன்னதிதான் பள்ளியறையா......?

கூனிக் குறுகிப் போய் விட்டேன்......
குமட்டியது உள்ளுக்குள் எனக்கு.....

உணர்வால் செத்துப் போன நான்
உடனேயே கோவிலில் இருந்து வெளிவந்த போது...
ஏனோ........
தாசி மாளிகையிலிருந்து தப்பித்து வந்த உணர்வு...!

விழிகளில் கோபம் ஜிவ்வென்று இருக்க....
வெறுத்துப் போய் பார்க்கிறேன்........

போதை வஸ்துவாகவே
புலப்படுகிறது........
துளசி மாடமும் தூய காற்றும்....

ச்ச...... ச்ச.....!
என்ன உலகம் இது........?!

விழித்துக் கொண்டே......
குருடர்களாக வாழ வேண்டுமோ.....?

கடவுளே உன் 
கற்பை காப்பாற்றிக் கொள்......!  

எழுதியவர் : (7-Jun-12, 11:33 pm)
பார்வை : 199

மேலே