சமூக அவலங்கள் (கவிதை திருவிழா) லலிதா விஜயகுமார்

நாகரீகம் என்ற பெயரில்
நாசமாகிக் கொண்டிருக்கும்
இளம் பெண்கள்.

கணினி முன்பு அமர்ந்துக்கொண்டு
அயல் நாட்டிற்கு வேலை செய்வதை
பெருமையாக சொல்லிக்கொள்ளும்
படித்தவர்கள்.

வீட்டையும் கெடுத்து
நாட்டையும் கெடுக்க - எந்நேரமும்
போதையிலே தள்ளாடும்
குடிமகன்கள்.

டேட்டிங் என்ற கலாச்சாரத்தை
காப்பாற்ற போராடும்
பேஸ் புக் பிரியர்கள்.

கைபேசி வாங்கியதும்
காதலனை கண்டெடுக்கும் யுவதிகள்.

காதலன் என்று கண்டவனோடு
பழகி கற்பிழந்து பின் தற்கொலை
செய்துக் கொள்ளும் கோழைகள்.

பெண்ணை பெற்றவரை
மண்ணை தின்ன வைக்கும்
வரதட்சணை.

அழிக்க முடியாத
சின்னங்களாக அங்கங்கே
பிச்சை எடுக்கும் சாலையோர
சிறுவர் / சிறுமியர்கள்.

பணத்திற்காக ஒட்டு போடும்
பைத்தியக்காரர்கள்.

குறைக்கும் நாய்க்கு எலும்பு
துண்டாக பணத்தை கொடுத்து பதவி
வாங்கும் அரசியல்வாதிகள்.

காவி உடையை திரையாக்கி
கலவி கொள்ளும் கள்ள சாமியார்கள்.
ஏழைக்கு உதவ மனமின்றி, நிம்மதி தேடி
இவர்களிடம் ஏமாறும் பணக்கார மூடர்கள்.

பேரமாகி போன கல்வி.
ஆரோக்கியத்தை அழிக்கும்
கலப்பட உணவு.

மரங்களை அழித்து
மமதையுடன் நிற்கும்
அடுக்குமாடி கட்டிடங்கள்.

ஏர் பிடித்தவனின் ஏழ்மை.
IPL போட்டிக்கு கோடிக்கணக்கில் செலவு.

அதிகரிக்கும் அநாதை குழந்தைகள்.
நிரம்பி வழியும் முதியோர் இல்லங்கள்.

மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும்
ஈழ தமிழர்கள் விஷயத்தில் அரசாங்கம் கடைபிடிக்கும் அமைதி.

நான்கு புறம் கடல்
நடுவிலே உலகம் என்பது போல்
அவலங்களுக்கு இடையில்
சிக்கி தவிக்கிறது சமூகம்.

இல்லையெனில் இப்படியொரு
தலைப்பில் கவிதை எழுத நேரிடுமா?

எழுந்திடுவோம் கவிஞர்காள் - நம்
எழுத்தால் இவைகளை மாற்றியமைப்போம்.
\\\\\\\"சமூக அவலம்\\\\\\\" என்ற சொல்லை அகராதியை
விட்டே அகற்றுவோம்.

எழுதியவர் : லலிதா.வி (8-Jun-12, 12:36 pm)
பார்வை : 1266

சிறந்த கவிதைகள்

மேலே