விருட்சத்தின் உரம் குருதி

இப்போதும் நறுமணமாயிருக்கிறது
ரத்த ஆறுகள்
தேசக் கனவிற்காய்
சிந்திய குருதி என்பதால் !
எமது
குருதி தடங்களையெல்லாம்
அழித்தொழிக்க
திட்டமிட்டார்கள்
தீயவர்கள் !
வாசனைப் பூக்கள் மலர மறந்து
ரத்த வாடையில் மலர,
மகிழ்ச்சி செத்து,
கானல் புன்னகை மட்டும் மிஞ்சியது.
கூடவே
மரணத்தில் மகிழ்ந்து
மலர்ந்து
கொண்டன எங்கள் முகங்கள்!
எமது தாய்மண்
நிறமாறிப்போனது.
விடுப்பு இல்லாமல்
எப்போதும் ஒப்பாரி ஒலித்துக் கொண்டது,
மரணங்கள் பிரசவிக்கும் மண்ணாகியது
என் இனமழித்தல் அங்கு அரசபணியானது
எமைக் கொல்லும் விமானங்கள்
தேசியப் பறவையாய் பிறப்பெடுத்தது!
தமிழர்கள் எப்போதும் மரணத்தில்
மகிழ்ந்து கொண்டார்கள்
மண்ணின் கனவோடு
தெருவெங்கும் பிணமாகி,
பயிலுமிடமெலாம்
தசைகள் சிதறி,
மூலஸ்தானமெல்லாம் குருதி அபிசேகம்
தமிழர் குருதியில்
செய்தனர் பகைவர்
குசியாய் இருந்தனர் கடவுள்களும்-தமிழன்
கசியும் ரத்தத்தில் !
தமிழினம்
தேசக் கனவின் மகிழ்ச்சியோடு
மரணித்துக் கொள்கிறது ,
சுவாசித்துக் கொள்கிறது
அப்போது வழிந்த
ரத்த ஆறு !
வரும் தேசத்தின் வணங்குமிடம்,
அரும்பும் விருட்சத்தின் உரம் !