வானம்பாடி

வானம்பாடி

தனது இனத்தின் வளர்ச்சிக்குத் தன் பங்களிப்பைக் கண்டு வானம்பாடி மகிழ்ச்சி கொண்டது. தனது கடைக்குட்டி மகனுக்கு பறத்தல் இயல்பான அனிச்சை செயலாக வளர்ந்து விட்டதைக் கண்டு அது ஆனந்தம் அடைந்தது.

தன்னிடம் கடைசியாக இருந்த தனது இனத்துக்குரிய பறக்கும் தொழில்நுட்பத்தை மகனுக்கும் மனைவிக்கும் காட்டியது. பாடிக்கொண்டு சுழன்று சுழன்று வானில் மேலே எழும்பிய பின், செங்குத்தாக வானில் உயரே உயரே பாய்ந்து. மறைந்தது. கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தாலும் தன் இனிய குரலில் அது எழுப்பிய இன்னிசை அந்த வசந்தகாலத்தில் ஒரு புதிய உலகத்தை உதயமாக்கியது. அந்த இன்னிசை கீதம் நீண்ட தொலைவிற்குக் கேட்டது. சடாரென வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக கீழே பாய்ந்து, பின் சின்ன இறக்கைகளை விரித்து வானில் மிதந்து மிதந்து வட்ட மடித்தது. மீண்டும் அம்பெனக் கீழே பாய்ந்து பாடிக் கொண்டே தன் பெட்டையின் அருகில் அமர்ந்தது.
கடைக்குட்டி அப்படியே அதனை உள்வாங்கிக் பறந்துக் காட்டியது. தனது இனத்திற்குரிய தொழில்நுட்பத்தை தனது தந்தையிடம் இருந்து தெளிவாக உட்க்கிரகித்து கொண்டது. தனது பெற்றோரிடம் இருந்து பிரியும் நேரம் வந்து விட்டது.

“சென்று வா மகனே. உன் இசையால் புது உலகை சிருஷ்டி”

பெற்றோர் விடை கொடுத்தனர். குட்டிப்பறவை இறக்கைகளை விரித்து மடக்கி வன்னிப் பிரதேசத்தின் நான்கு திசைகளிலும் பறந்து பறந்து திரிந்தது.

வட்டமடித்துப் பாடிக் கொண்டே வன்னி வயல்களைச் சுற்றிச் சுற்றி வந்து குட்டிப்பறவை பரவச நிலையை அடைந்தது! பச்சை பசேலென எங்கும் நெல்வயல்கள். மரகதப் புல்வெளிகள். பசுஞ்செடி கொடிகள், வானுயர்ந்த மரங்கள். வசந்த காலத்தினை வரவேற்கும் வண்ண வண்ண மலர்கள், பலவித மயக்கும் நறுமணங்கள். காடு, வயல், சமவெளி என்று தன் இனத்தோடு சுதந்திரமாக சுற்றித் திரிந்தது வானம்பாடி.
பாடிக் கொண்டே வட்டமடித்து வானில் எழும்பி, இனிய இசையை உச்சஸ்தாயில் எழுப்பிக் கொண்டே சடாரெனக் கீழே வந்தபோது தன் இணையைக் கண்டது. வானம்பாடியின் இன்னிசைக்குப் பெட்டை மயங்கி முயங்கியது. இரண்டும் இணை சேர்ந்து காதல் கீதம் இசைத்து இழைத்து உறவாடின. சுதந்திர வானில் ஆடிப்பாடி, அலைந்து திரிந்து மகிழ்ந்தன.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை குளிர்ச்சியான பசுமை விரிந்து படர்ந்த நெல்வயலில் தங்கள் காதல் கூட்டைக் கட்டின. சின்னஞ்சிறு பசும்புற்களை நேர்த்தியாய் இழைத்து அடர்ந்து தூர்கள் பரப்பிய நெற்கட்டில் இணைந்து கட்டப்பட்ட கூடு, வானம்பாடி புதுத்தம்பதிகளின் காதல் மாளிகை.
காதல் தந்த பரிசாக அடர்நீல நிறத்தில் அழகிய கரும் புள்ளிகள் கொண்ட நான்கு முட்டைகளை இணைந்து அடைகாத்துக் குஞ்சுகளைப் பொறித்தன. தங்களுக்கு இருக்க இடம் தந்த உழவனுக்கு உதவியாக வயலில் கிடந்த சிறுசிறு புழுக்கள், பூச்சிகளை விரட்டிப் பிடித்து வானம்பாடிகள் பசியாற உண்டன. குஞ்சுகளுக்குத் தந்தன. சிவந்த சின்னஞ் சிறு அலகுகளைத் திறந்து குஞ்சுகள் வானம்பாடிகளை அழைக்கும் அழகிற்கு குழலும் யாழும் ஈடாகாது என வானம்பாடிகள் மகிழ்ந்து கூத்தாடின.

நெற்கதிர்கள் பூத்துக் குலுங்கி இரம்மியமான மகரந்த வாசனையைப் பரப்பி பின் பால் பிடித்தது. நெல்மணிகள் உருண்டு திரண்டு முற்றத் தொடங்கின. அறுவடையாகும் முன்பே தன் குஞ்சுகளுக்கு இறகுகள் நன்கு வளர வேண்டுமென வானம்பாடிகள் மனமுருக வேண்டிக் கொண்டன.
வன்னிவயல்களில் நெற்பயிர்கள் முற்றிப் பரந்து விரிந்த தங்கநிறக் கம்பளங்கள் அடுக்கடுக்காய் விரித்ததுபோல் கிடந்தன. குஞ்சுகளுக்குப் புதிய இறகுகள் முளைத்து கொள்ளை அழகுடன் திகழ்ந்தன.

“நாளைக்குப் பறக்கலாம் கண்ணுங்களா!”
“இன்னிக்கே பறக்கலாம்ப்பா . . .”

குஞ்சுகளின் செல்ல கொஞ்சலில் வானம்பாடிகள் மயங்கின. மஞ்சள் வெயிலில் தத்தித்தத்தி நெல்வயலில் பறக்க முயற்சி செய்தன. மாலை முயங்கி இருள் கவ்வியது. வானம்பாடிகளின் கதகதப்பில் இருந்த குஞ்சுகள் சுதந்திர வானில் பறக்கப் போவதை கனவில் கண்டு மகிழ்ந்தன.

கறுத்த வானில் சின்னஞ்சிறு விண்மீன்கள் மின்னுவதைக் குஞ்சுகள் கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன. எங்கேயோ ஒரு எரி நட்சத்திரம் நகர்ந்து சென்று அழகாக மறைந்தது.

பெரிய எரி நட்சத்திரம் படுவேகமாக வயலை நோக்கி வந்தது. நெருப்புக் குண்டு வெடித்து வயல்கள் பற்றி எரிந்தன. தொடர்ந்து நாலாப் பக்கங்களிலும் குண்டுகளும், ஷெல்களும் வெடித்துச் சிதறின. எல்லா இடங்களிலும் வயல்கள் பற்றிக் கொழுந்து விட்டு எரிந்து சாம்பலாயின. தூரத்தில் ஊரெல்லாம் தீப்பிடித்தும், குண்டுகள் வெடித்துச் சிதறும் பேரொலியும் ஓயாமால் கேட்டன.

பயந்து கீறிச்சிட்ட குஞ்சுகள் பெற்றோரைக் கட்டி அணைத்துக் கொண்டன. எங்கோ இருந்து பறந்து வந்த ஷெல் வானம்பாடி கூட்டின் அருகில் வெடித்தது. பாடுபட்டு ஒவ்வொரு சிறு புல்லாய், நாராய் சேகரித்து, இழைத்துப் பின்னப்பட்ட அழகிய கூடு பிய்த்து எரியப்பட்டது.

ஒரு குஞ்சு பற்றி எரியும் நெருப்பில் விழுந்து கருகியது. ”அம்மா . . ” என்று அலறக்கூட, போர் அதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இன்னொன்று இரத்தச் சகதியில் குற்றுயிராய்த் துடிதுடித்து அலறிக் கொண்டே உயிரை விட்டது. பயத்தில் மயக்கமடைந்து கிடந்த இரண்டு குஞ்சுகளையும் ஆளுக்கொன்றாய்த் தூக்கிக் கொண்டு வானம்பாடிகள் காட்டை நோக்கி அடைக்கலம் தேடிப் பறந்தன.

போரின் கொடூரங்கள் எங்கும் கிடந்தன. மனிதர்களின் உடல்கள் அங்காங்கே சின்னா பின்னமாய் இரத்தக்கூளமாய் சிதறிக் கிடந்தன. போர் விமானங்கள் வானில் தொடர்ந்து குண்டுமழை பொழிந்தன. நிலமெங்கும் கருகும் வாசனையும் தீப்பிழம்புகளும் காணப்பட்டன. காட்டிலும் புள்ளிமான்கள், வண்ணமயில்கள், முயல்கள், புலிகள் என்று அனைத்துவகை உயிர்களின் உடல்களும் சிதறிக் கிடந்தன. வயல்களிலும், ஊர்களிலும் குற்றுயிராயும், சிதைந்தும் மனித உடல்கள் எங்கும் சிதறிக் கிடந்தன.

மனிதர்கள் சகமனிதர்களை ஏன் இப்படிக் கொன்று குவிக்கின்றனர்? த உழைத்து உற்பத்தி செய்த வீடுகளை, மாடமாளிகைகளை, வயல்களை குண்டுகளை கொண்டு தாங்களே தகர்ந்து அழிப்பதும் ஏன்? ஒன்றும் புரியாமல் வானம்பாடிகள் அஞ்சிப் பறந்துக் கொண்டு இருந்தன.

பொழிந்த குண்டு மழையில் ஒரு சிதறல் தாய் வானம் பாடியையும், அது தூக்கிச் சென்ற குஞ்சினையும் சுக்குநூறாய் பிய்ந்து எறிந்தது. காதல் மனைவிக்கும், ஆசைக் குழந்தைக்கும் கண்முன் நடந்த கோரத்தைக் கண்டும் கதறி அழக்கூட அந்த வானம்படியால் முடியவில்லை. இன்னிசைக்குரல் ஒடுங்கி ஊமையாய்ப் போனது. வாய் விட்டு அலறக்கூட சக்தியற்று, மரண பயத்தில் போரில் சிதலமடைந்த டாங்கி ஒன்றினுள் குஞ்சுடன் தஞ்சமடைந்தது.
பயத்தில் வானம்பாடி கழிசலாய்க் கழிந்தது. அது டாங்கியினுள் கிடந்த புத்தனின் அமைதித் தழுவும் முகத்தை அகோரமாக்கிச் சிதைத்தது. இன்னொரு குண்டு டாங்கியில் விழ அந்த இடமே சுடுகாடாகி போனது.

எழுதியவர் : கி.நடராசன் (19-Jun-12, 7:37 am)
சேர்த்தது : நடராசன்.கி
பார்வை : 196

மேலே