ஓசோனில் ஓட்டை! ஏனிந்த அவலம்!
அக்கினியாய் பிறந்த பூமி.
மெல்ல மெல்ல
ஆறிச் சிறந்த பூமி.
ஊழித் தீ அணைந்து
ஆழியும், மணல் தேரியும்
வான் பிறந்த வளியும்
நான் பிறக்க வழியும்
கண்டதிந்த பூமி.
வள்ளுவன் சொன்னபடி
அகழ்வாரை தாங்கும் பூமி.
இனியுமழிவு செய்வாரை
தாங்குமா இந்த பூமி?
காற்றை காயப்படுத்தும்
கரியமில சேட்டைகளாய்
உயர்ந்து நிற்கும்
அந்நிய முதலாளிக்கு
படியளக்கும் நம்மூர்
தொழிற்சாலை புகை போக்கி.
ஆக்சிஜென் ஆலயங்களாய்
நிமிர்ந்து நின்ற மரங்களின்
ஆணி வேரையும் சூறையாடும்
சுயநல சூரர்கள்.
அரசாங்கம் என்பது
இவர்களின் சுருஷ்டி.
சட்டங்கள் எல்லாம்
யாரையோ குளிப்பாட்டும்
சம்பிரதாய சடங்குகள்.
பன்னாட்டு நிறுவனத்திற்கு
தண்ணீர் வியாபாரத்தை
தாரைவார்ப்போம்.
மிச்சமிருக்கும்
உள்ளூர் ஆற்றை
மணல் திருடருக்கு பரிகொடுப்போம்.
இல்லை! பரிசளிப்போம்.
சுற்று சூழல் பற்றி
ரியோவில் டி ஜெனிரோவில்
கூட்டம் போடுவோம்.
அட்டை போட்ட மாதிரி
ஒரே வண்ணத்தில்
சட்டை போட்டுக் கொண்ட
உலக தலைவர்கள்
ஓட்டை விழுந்த
ஓசோன் பற்றி
வருடம் ஒரு முறை
வந்து பேசுவார்கள்.
ஊருக்கு வந்தபின்
அணு உலை மின்சாரம்
அவசியம் என்பார்கள்.
விளை நிலமெல்லாம்
விமான நிலையமாகும்.
மனமில்லாமல் நடக்கும்
மரம் நடு விழாக்கள்.
அது சரி! இனி
ஓசோன் ஓட்டையை
யாராடைப்பது?
மூளையால் உழைத்து
களைத்துப்போன
உலக தலைவர்கள்
குளிரெடுக்கும் அறைக்குள்ளே
ஓய்வெடுக்கட்டும்.
வா!
நானும் நீயும்
ஊருக்குள்ளே
காடு வளர்ப்போம்.
நஞ்சை உமிழும்
வஞ்சகம் எல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாய்
நிறுத்திவிடுவோம்.
வெப்பமாகி
மூழ்கும் உலகை
ஒரு பிஞ்சுக் குழந்தைபோல்
பேணி வளர்ப்போம்.