லட்சுமி ஷெகாலே ! வீரவணக்கம்

சென்னையில் பிறந்த நீ
நினைத்திருந்தால் ஆடம்பரமாய் வாழ்ந்திருக்கலாம்
தேசத்தின் விடுதலைதான் தெய்வதரிசனம்
என்று நினைத்திருந்தாய்
தேசம் காக்க தீபம் ஏந்தி
தெருவில் இறங்கி போர்க்களம் புகுந்தாய்

நீ வாழ நினைக்கவில்லை
வாழ்விக்க நினைத்தாய்
நீ வாழ நினைத்திருந்தால்
பிணங்களுக்கு கூட
வைத்தியம் பார்த்திருப்பாய்

நேரிய வழியில் நேதாஜியின் படையில்
ஜான்சியின் படைப்பிரிவில்
எத்தனை கம்பீரம் எத்தனை தியாகம்
அத்தனையும் நாட்டுக்காக அர்ப்பணித்தாய்

நீ தேர்ந்தெடுத்த மார்க்சியப்பாதை
மனிதகுலம் உய்விக்க வந்த பாதை
அதுதான்
சரியென்று ஆணித்தரமாய் சொன்னாய்

ஏழ்மைக்கு நீ எளிமையோடு
உதவி செய்த போதெல்லாம்
உனது பார்வையில் கடவுளைக் கண்டேன்

உன் தியாகத்தைஎல்லாம்
தேசத்தின் சொத்தாக்கிவிட்டு
இறுதியில்
எங்கள் மனதில் அணையாத தீபமாய்
அணைந்து போனாய்

கடவுளுக்கு கண்ணில்லையா
என்று நான் கதை பேச மாட்டேன்
ஏனென்றால் வாழ்வும் சாவும்
இயற்கையின் நியதி

எனக்குத்தெரியும்
நீ சாகும் போது உழைக்கும் வர்க்கம்
இன்னும் உருப்பெறவில்லையே
என்றுதான் ஏங்கி இருப்பாய்
கவலைப்படாதே
உன் லட்சிய தீபம் என் நெஞ்சில்
கேப்ட்டன் லட்சுமி செகாலே
உனக்கு என் வீர வணக்கம்

எழுதியவர் : porchezhian (24-Jul-12, 4:53 pm)
பார்வை : 249

சிறந்த கவிதைகள்

மேலே