இடைவெளிகளில்....
உன்னிடம் -
நான் சொல்ல மறுத்த
ஒற்றை வார்த்தையின் மேல்
உறைந்து நிற்கிறது
தினமும் துயர் துளிர்க்கும்
காலம்.
என்மேல் நகரும் தவிப்புடன்
நீண்டு-
முடிவுறா இடைவெளிகளில்..
ஈரம் சொட்டுகிறது
உன் இதயம்.
ரோஜாக்களின் வாசனை
என்னைத் தாண்டும் சமயங்களில்
எப்படியோ-
உனது வாசனை கடத்தப்படுகிறது
எனது எல்லைகளுக்கு.
தினமும்-
பாதியில் தொலைந்து விடும்
ஒரு கனவில்...
என் விழிகளில் நீந்தும்
உன்னைத் துரத்துகிறேன்...
நீ அறியாத படி.
பின் தவித்திருக்கிறேன்...
பாதிக் கனவுகளோடும்...
மீதிக் காலங்களோடும்....
நானே உருவாக்கிய
இடைவெளிகளில்.

