ஒருவர் எந்தெந்த சந்தர்ப்பங்களில் நீராட வேண்டும்?

ஒருவர் உடல் நலத்திற்காக எந்தெந்த சந்தர்ப்பங்களில் நீராட வேண்டும்? என்று ஆசாரக்கோவை-பாடல் 10 ல் தரப்பட்டிருக்கிறது.

ஆசாரக்கோவை பாடல் 10

"தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலோ டிணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறா தாடுக நீர்".

பதவுரை:

வாலாமை - தூய்மை குன்றியகாலத்தும்,
உண்டது கான்றல் - உண்டதை வாந்திசெய்தவிடத்தும்,
ஊண் பொழுது - உண்ணும் பொழுதும்,
வைகு துயிலோடு -பொழுதேறத் தூங்கிய விடத்தும், வைகு – விடியல்,
இணைவிழைச்சு -புணர்ச்சியான காலத்தும்,
ஏனை மயல்உறல் - மலசலங் கழித்த காலத்தும்,

பொருளுரை:

ஒவ்வொருவரும்
1.தாங்கள் வழிபடும் தெய்வத்தை வழிபாடு செய்வதற்கு முன்னும்,
2.துன்பம் தரும் கனவைக் கண்டபொழுதும்,
3.உடல் தூசுடன் தூய்மை குறைபாடுள்ள காலத்தும்,
4.சாப்பிட்டதை வாந்தி செய்த நேரங்களிலும்,
5.தலை, முகம் மற்றும் உடலிலுள்ள மயிர் களைந்த நேரங்களிலும்,
6.காலை, மாலை உண்ணும் பொழுதும்,
7.இரவு தூங்கி விடியலில் விழித்த பின்பும்,
8.மனையாளிடம் உறவு கொண்ட காலத்தும்,
9.காலைக் கடன்களாகிய மலசலங் கழித்த காலத்தும்
ஆகிய சந்தர்ப்பங்களிலும் சந்தேகத்திடமின்றி நீராடி உடல் தூய்மை செய்வது அவசியமும், கட்டாயமுமாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jul-12, 10:57 am)
பார்வை : 363

சிறந்த கட்டுரைகள்

மேலே