வையகம் போற்றும் வான் மறை

இனிய திருக்குர்ஆனே!
இறை மறையே!

நீ!
உலகின் இருளை
ஒழிக்க வந்த பேரொளி!

ஆராய்பவர்களுக்கு
அட்சய பாத்திரம்!

அறிவின் வேர்
வேருக்கு நீர்!

அஞ்ஞானத்தின் பலி பீடம்
விஞ்ஞானத்தின் ஆய்வு கூடம்!

ஆத்மீக சூரியன்
லௌகீக சந்திரன்!


சாந்தி நபியின்
சமாதான தூது!

அதிசய அற்புதம்
அற்புத அதிசயம்!

மனித இலக்கியங்கள் போற்றும்
புனித இலக்கியம்!

நூல்களின் உலகம்
உலகின் நூலகம்!

படைப்பினங்களின்
பூரண சரிதை!

இறைவன் எழுதிய
இனிய கவிதை!

ஓ.....
வான் மறைப் பூவே!
உன்னை ஓத ஓத
புதிது புதிதாயல்லவா
புதுமையாய்ப் பூக்கிறாய்!

நீ
வாடாத பூ!
உதிராத பூ!
இறவாத பூ!
ஒற்றைப்பூ!

உன்
உயர்ந்த எழுத்துக்கள்
உயிரோட்டமானவை!
அறிவு இறந்தவர்களால்
இந்த
உண்மையை உணற முடியாது!

உன் அழகிய கருத்துக்கள்
முழுமையானவை!
அறை குறை அறிவால்
அதை
முழுதாய்ப் புரிய முடியாது!


உன்
கருவூலங்களுக்கு அளவேயில்லை!
ஞானமற்றவர்களால்
உனக்கு வியாக்கியானம்
கூறமுடியாது.!

ஓ....
அல்குர்ஆனே!
நீ ஒரு கடல்.!
உனக்கு வெளியே
கானல் நீர்த் திடல்!

உன்னைக் காப்பவன் இறைவன்.
உன் வழி வாழ்பவனே
உண்மை மனிதன்!

எழுதியவர் : - கலாநெஞ்சன் ஷாஜஹான் (5-Aug-12, 11:54 am)
பார்வை : 301

மேலே