3ஆதலினால் காதலித்தேன் பொள்ளாச்சி அபி

வகுப்புத் தோழியாய் இருந்த வளர்மதி,பிரிந்து சென்ற பின்,தோழி என்ற இடத்தை நிரப்ப மற்றறொருத்தி வந்துசேர்ந்தாள். கேரளாவிலிருந்து புதிதாய் எங்கள் வீட்டருகே குடி வந்திருந்தது அந்தக்குடும்பம்.மலையாளமும் தமிழும் கலந்துகட்டி அவர்கள் பேசும் தமிழும் புதியதாக இருந்தது.அவளை மலையாளப்பள்ளியில் சேர்த்துவிடலாம் எனில் அது மிகவும் தூரமாக இருந்ததால், தமிழ்வழிப்பள்ளியிலேயே பயிலட்டும் என்று அவளுடைய தந்தை நான் படித்தபள்ளியிலேயே சேர்த்தும் விட்டார்.அவளுக்கு தமிழ் சொல்லித்தரவேண்டிய ஒருநிலையும் எனக்கு ஏற்பட்டது.
அவள் ஏற்கனவே மலையாளப்பள்ளியில் நன்கு படித்தவளாக இருந்ததால்,தமிழையும் எளிதாகக் கற்றுக் கொண்டாள்.அவளின் ஆர்வமும் வேகமும் தமிழை எளிதாகப்படிக்கவும் எழுதவும் வைத்தது.அதைக்கண்ட அவளது பெற்றோர் ஏதோ என்னால்தான் அவள் தமிழைக் கற்றதுபோல,என்னைப் புகழ்ந்துபேசி பெருமைப்படுத்தினார்கள்.அதுவே எனக்கு அவள் மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியது.
அப்போதெல்லாம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நாயகர்களான,இரும்புக்கை மாயாவி,ஜானிநீரோ, பேந்தம்,லாரன்ஸ் டேவிட்,ரிச்சாட் கெர்பி,மான்ட்ரேக் லோதார்,காரிகன் ஆகியோரின் கதைப்புத்தகங்கள் கடைக்கு வந்தவுடன் வாங்கிப் படித்துவிடுவதில் நான் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்.நான் படித்துமுடித்தவுடன் முதலில் அவளுக்குத்தான் அதனைக் கொண்டுபோய்த் தருவேன்.அவளும் வாசித்துவருவது தொடர்ந்தது.
அப்போதுதான் ஒருநாள் அவள் மலையாள மொழியில் வெளியாகியிருந்த சித்திரக் கதைப்புத்தகங்களைக் கொண்டுவந்து என்னை வாசிக்கப்பழகிக் கொள்ளச் சொன்னாள்.உக்கும்..எனக்கெங்கே வாசிக்கத் தெரியும்.?
ஏன் உன்னிடம் நான் தமிழ் கற்றுக் கொள்ளவில்லையா.? நீயும் வாசிக்கப்பழகு..நான் சொல்லித்தருகிறேன். என்று அவள் சொன்னபோது அது நல்லயுக்தியாகவே பட்டது.வீட்டுப்பாடங்கள் எழுதி முடித்தவுடன் மலையாள‘அட்சரங்களையும்’அவள் எனக்கு அறிமுகப்படுத்தினாள்.நானும் ஆவலாகக் கற்கத் துவங்கினேன்.
அவள் எங்கள் வீட்டருகே குடிவந்தபோது இருந்த அவளின் உடல்நிலையில் சற்றே பெரியபெண்கள் போன்ற மாறுதல்கள் வெளிப்படையாகத் தெரியத்துவங்கியது.முன்புபோல என்அருகே அவள் நெருங்கி உட்காரும் நிலைமாறி சற்றே இடைவெளிவிட்டு உட்காரத்துவங்கினாள்.அந்த அந்நியம் எனக்குள் உறுத்தத் தொடங்கியது.இதுகுறித்து அவளிடம் என்னவென்று,எப்படியென்று கேட்கத் தெரியவில்லை
.இந்த தவிப்பினூடாக,திடீரென ஒருநாள் அவள் வீட்டிற்கு உறவினர்கள் வருவதும் போவதும்,மகிழ்ச்சியுடன் சிரித்துப் பேசி விருந்துண்டு செல்வதுமாகக் கழிந்தது.
எனது அன்னையிடம்,“என்னம்மா அவர்கள் வீட்டில் விசேஷம்.?”என்று கேட்டேன்.“அவள் பெரியமனுஷியாகி விட்டாள்”என்று சொன்னார்கள்.உடல்நிலையில் சற்றே மாறுதல் ஏற்படத்துவங்கி விட்டால் பெண்கள்‘பெரீ..ய மனுஷியாகிவிடுவர்களா..?’என்று எனக்குள் பெருத்த சந்தேகம்.அப்படியென்ன இவள் என்னைவிட பெரிய மனுஷி.? எனக்கும் அவளுக்கும் ஒரே வயதுதானே.? என்னை இன்னும் வாடா போடா..என்றுதான் அவள் கூப்பிடுகிறாள்.
ஆனால்,நான் மட்டும் அவளை வாடி போடி என்றெல்லாம் சொல்லக்கூடாதாம்.வழக்கமாக நான் அவளை அப்படியெல்லாம் விளித்ததில்லை எனினும்,எப்போதேனும் சொல்லியிருப்பேன் என்றுதான் தோன்றுகிறது.ஆனால் இனி எப்போதுமே அப்படி சொல்லக்கூடாதாம்.!
“ஆமாம்,உண்மையில் பெரியமனுஷியாவதென்றால் என்னம்மா..?”என்று கேட்டபோது,என் தாய் சிலவிநாடிகள் என்னை உற்றுப்பார்த்தார்கள். ‘இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாதோ.?’ ‘உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் இந்தப்பையனுக்கு எவ்வாறு சொல்லி விளங்கவைப்பது என்று யோசித்திருப்பார்களோ.?’
பின்பு,சிலவிநாடிகளே நீடித்த அவரின் மௌனம் கலைந்தது.மிகத்தெளிவான குரலில், “இனிமேல் அவளுக்கு கல்யாணம் செய்துவைக்கலாம் என்று அர்த்தம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.அதற்குமேலும் சந்தேகம் கேட்டால் எப்படி விளக்குவது என்ற தர்மசங்கடமாயிருக்கலாம் என்பது அவருடைய அவசர நகர்தலில் தெளிவாகப் புரிந்தது.
இருந்தாலும்,எனக்குத் தெரிந்து நான் சென்றுவந்த திருமணங்களிலெல்லாம் மணப்பெண்கள் இவ்வளவு சின்னவயதாய் இருந்ததில்லையே..!,அப்படியானால் இன்னும் சிலவருடங்கள் கழித்துதான் இவளுக்கு திருமணம் செய்வார்கள் போலிருக்கிறது எனது யோசனையின் முடிவு எனக்கு ஆறுதலாகவும் இருந்தது.
ஓகோ..அப்படியா..? என்று எனக்குள் கேட்டுவிட்டு,நானும் அங்கிருந்து நகர்ந்தேன்.
அன்றுமாலை அவளுடைய வீட்டளவில் நடைபெற்ற சிறுவிழாவில், எனக்கும் விருந்துண்ண அழைப்பு.சென்றபோது ஒரு தனியறையில் அலங்கரிக்கப்பட்ட பொம்மையாக அவள் உட்கார்ந்திருந்தாள். மின் விளக்கின் மஞ்சள்நிற ஒளியில் அவளது முகம் மின்னுவதுபோலத் தோன்றியது.அதுவரை அப்படியொரு அழகாய் அவள் விளங்கி நான் பார்த்தது இல்லை.
அதற்குப்பிறகு வந்த சிலநாட்கள் அவளைப்பார்க்க முடியவில்லை.ஒன்றாய்ப்பழகி,விளையாடிப் படித்துக் கழிந்த நாட்களின் நினைவு வரும்போதெல்லாம்,சட்டென எனக்குள் ஒரு தவிப்பு வந்து உட்கார்ந்து கொள்ளும்.விளையாட்டுத் தோழிகளாயிருப்பவர்கள் குறிப்பிட்ட ஒரு பருவம் வந்தவுடன் திடுதிப்பென்று விலகிச் செல்வதுதான் மரபா.?.இல்லை விதியா.? எல்லாப்பகுதிகளிலும் வாழும் மக்கள் நடுவே இதுதான் வழக்கமா.? கேள்விகள்..கேள்விகள்..குருவியின் தலையில் வைத்த பனங்காயைப்போல தலைக்குள்ளும் கனத்தது.
மேலும்,என்னால் படிக்கப்படாமலிருந்த மலையாள எழுத்துக்கள் வேறு கனவில் வந்து காத்துக் கொண்டேயிருந்தன.அவற்றின் நிலை குறித்தும் எனக்கு தொடர்ந்து கவலையாயிருந்தது.
காலம்செய்த கோலமாக எனக்கும் அவளுக்குமான இடைவெளிகள் அதிகரித்துக் கொண்டே வந்தது.நாங்களாக விரும்பி இதை அதிகரித்துக் கொள்ளவில்லையெனினும்,இயல்பாய் அது நடைபெற்றது.முழுதாய் ஒருவருடம் கரைந்திருக்கும்.இந்த இடைவெளியில் எப்போதேனும் அவளை தவிர்க்கமுடியாமல் நேரடியாகப் பார்த்துவிட்டால் ஒரு புன்சிரிப்புடன் கடந்து செல்வது மிகச் சாதாரணமாகி இருந்தது.
கடந்த காலங்களில் அவ்வளவு நெருங்கிய தோழர்களாயிருந்தவர்களா இப்படியென எங்களின் பெற்றோர்கள் வியந்துசொல்லும் அளவுக்கு நாங்கள் மாறிப்போனோம்.
அது ஒருவகையில் எங்களின் பழக்கத்தை வைத்து யாரும் யாரிடமும் எவ்வித உரிமையும் எடுத்துக் கொள்ளாமல்,சுற்றுப்புற உலகத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு,நாங்களே எங்களுக்குள் ஒரு இடைவெளியை வெகு ஒழுக்கத்துடனும்,நேர்த்தியுடனும் ஏற்படுத்திக் கொண்ட அளவில் மிகநல்ல பிள்ளைகளாக பெற்றோர்களால் கருதப்பட்டோம் என்று அறிந்தபோது எனக்கும் அது பெருமித உணர்வைத்தான் தந்தது.
இப்பெருமைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாதவண்ணம் என்னைக் குலைத்துவிட எவ்வித சந்தர்ப்பமும் அமைத்துக்கொள்ளாமல் அதற்கான எவ்வித முயற்சியையும் அவள் மேற்கொள்ளாதது எனக்கு அவள் மீது மிகுந்த மதிப்பை ஏற்படுத்தியது.அதுபோலவே அவளிடமும் நான் நடந்துகொண்டேன்.
பெண்களை அநாவசியமாக சீண்டுவதோ,தேவையில்லாத உரிமையை எடுத்துக் கொள்வதோ, அதைக்காட்டி அத்துமீறுவதோ கூடாது என்பதை அவளிடம் நான் முதன் முதலாகக் கற்றுக் கொண்டேன்.பெண்கள் தங்கள் மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும் குறுக்கே பாய்ந்து ஆண்கள் கெடுத்துவிடக்கூடாது என்பதை தனது நடவடிக்கையால் அவள்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தாள்.
ஆதலினால் நான் காதலித்தேன் அவளை...!.
இப்போதும் காதலிக்கிறேன்.!
அவள் பெயர் வசந்தி.!