நாளையுமொரு விடியல்

சுதந்திர தினத்தை
சுதந்திரமாய் நினைக்க
பயமாயிருக்கிறது
பழகிவிட்டது

வாங்கிய சுதந்திரத்தைக்
காப்பவரை விட
இத்தின நிகழ்ச்சிகளைக்
காக்கும் பட்டாளம் அதிகம்

அன்றுசிந்திய இரத்தம்
வெறும் ஏடுகளில்
உறைகின்றது போலும்
உண்மையில் கதையானது

சுதந்திர மண்ணில்
இரத்தம் தேடும்
வல்லூறுகளின் கூட்டம்
இன்றும் சுதந்திரமாய்


சுதந்திரதின வேடிக்கை
இரும்புக் கூண்டுக்குள்
வழக்கமாகும் வீதிதோறும்
உண்ணாவிரத வாடிக்கை

நடந்தது என்ன
ரசிப்பது தொலைக்காட்சியில்
நடக்கின்றது உறைக்கிறதோ
கைதுடைக்கும் முதல்பக்கங்கள்

கொடியேற்றிக் கிடைத்தது
இங்குவெறும் கொடியேற்றத்துடன்
படியேறுமா நாட்டின் நிலை
குடியரசு வெறும் மேடைப்பேச்சாகுமா

இருளில்தவித்த காலம்
வெள்ளையர் வெளியேறி
வெளிச்சம் வந்தது
இன்றும் நாம் புது விடியலைத் தேடி....

-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (15-Aug-12, 5:25 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 134

மேலே