தோழமை படைப்பாளிகளுக்காக - கே.எஸ்.கலை - I
தோழமை படைப்பாளிகளுக்கு இந்த பதிவின் மூலம் ஏதாவது கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும் எனும் எண்ணத்தின் அடிப்படையில் நான் படித்த சில கட்டுரைகளை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.இங்கு நான் சில வித்தியாசமான கருப் பொருள்களையும், விளக்கங்களையும் கொண்ட படைப்புக்களை தர முயற்சி செய்கின்றேன். கவிகோ அப்துல் ரகுமான் அவர்களின் கட்டுரைகளில் ஒன்றான “குட்டிக் கடவுள்” எனும் பதிவை முதலில் பிரசுரிகின்றேன்...இது முழுக்க முழுக்க “கவிக்கோ” எழுதிய படைப்பு என்பதும் இதில் உள்ள எல்லா சிந்தனைகளும் விளக்கங்களும் அவர்களையே சாரும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.இந்த பதிவு கட்டாயம் எல்லா படைப்பாளிகளுக்கும் ஏதோ ஒரு புது படிப்பினை கொடுக்க வாய்ப்புண்டு.இதனை முழுமையாக வாசிக்கும் படைப்பாளிகள் தங்களுக்கு தெரிந்த நல்ல கருத்துக்களை இங்கே பதிவு செய்வது மேலான பண்பு.
நன்றி.
அன்புடன்
கே.எஸ்.கலை.
_______________________________________________
குட்டிக் கடவுள்
``````````````````````
இரண்டு உலகப் பெரும் போரும் ஏற்படுத்திய அழிவு புறவுலகத்தை மட்டுமல்ல மனிதனின் அகவுலகத்தையும் பாதித்தது.
எரிந்து சாம்பலானது கட்டிடங்கள் மட்டுமல்ல; கருத்துக்களும் தான்.
மரித்துப் போனது மனிதன் கூட்டம் மட்டுமல்ல ; மதிப்பீடுகளும் தான்.
தம்மைக் காக்க முடியாது போன பழைய கோட்பாடுகள் அனைத்தையும் அறிவாளிகள் அருவருத்தனர். “பழையன கழிப்பதற்கும் புதியன புகுவதற்கும்” இந்த அருவருப்பு காரணமானது.
இந்தப் பின்னணியில் பல கவிதை இயக்கங்கள் தோன்றின. படைப்பியம் (Creationism) என்பது அதில் ஒன்று.
சிலி நாட்டைச் சேர்ந்த “ஹ்யூயிடோப்ரோ” என்ற கவிஞர் 1916ஆம் ஆண்டு ப்யூனஸ் அயர்ஸில் இந்த இயக்கத்தை தொடக்கி வைத்தார்.
பழைய இலக்கியப் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் புதிய அழகுணர்வுக் கோட்பாட்டை ஏற்படுத்துவதும் தான் இந்த இயக்கத்தின் நோக்கம்.
கவிதை எல்லா வகையிலும் ஒரு “படைப்பாக” இருக்க வேண்டும் என்று இந்த இயக்கம் வலியுறுத்துகின்றது.
“இயற்கை ஒரு மரத்தை
படைப்பதைப் போலக்
கவிதை படைக்க வேண்டும்.”
என்று படைப்பியத்துக்கு இலக்கணம் வகுத்தார் ஹ்யூயிடோப்ரோ.
படைப்பியத்தின் உயிர்நாடியான இந்தக் கொள்கை படைப்பின் தன்மையை அழகாகவே விளக்குகிறது.
இயற்கை ஒரு மரத்தை எப்படி படைக்கிறது ?
அது ஒரு திட்டமிட்ட வேலையல்ல; இயல்பாக நேரும் நிகழ்ச்சி.சரியாக சொல்வதானால் அது ஒரு தற்செயல் நிகழ்ச்சி; நல்ல விபத்து.
எதோ ஒரு விதை பூமியில் விழுகிறது. இந்த விதை பூமி விரும்பி தேடிய விதை அல்ல; தானாகக் கிடைத்த விதை.இந்த விதையைத்தான் இயற்கை மரமாக்குகின்றது. இந்த படைப்பு நிகழ்ச்சியில் மண்,நீர்,காற்று,நெருப்பு அனைத்துக்கும் பங்குண்டு.
மண் விதையை வெளிப்படுத்துவதில்லை; விதைக்குள் இருப்பதை வெளிபடுத்துகின்றது.
மரத்தின் வடிவத்தையும் இயற்கை திட்டமிட்டு உருவாக்குவதில்லை.
மரத்தின் வடிவத்திற்கு விதையின் பங்கு கணிசமானது தான்.ஆனால் அதன் முழுமையான வடிவத்திற்கும் தன்மைக்கும் புறச் சூழலும் காரணமாகிறது.
கவிதையும் இப்படித்தான் உருவாக வேண்டும் என்கிறது படைப்பியம்.ஏதோ ஒரு கரு ஏதோ ஒரு காரணத்தால் கவிஞனின் மனதில் விழுகிறது.கவிஞனின் மனநிலை, மதிப்பீடு, மொழியறிவு,கலைத்திறன்,காலச் சூழலின் தாக்கம் எல்லாம் சேர்ந்து அந்தக் கருவுக்கு உருவம் தருகின்றன.
ஏற்கனவே இருக்கும் இருக்கும் “ரெடிமேட” உருவங்கள் இந்த இயற்கையான பரிணமிப்புக்கு உதவா.
கவிஞன் இப்படி படைப்பாளியாக இருப்பதால் அவனைக் “குட்டிக் கடவுள்” என்கிறார் ஹ்யூயி டோப்ரோ. அவர் கூறினார் –
“கவிஞர்களே ! ஏன் ரோஜாக்களைப் பற்றிப்
பாடிக் கொண்டிருக்கிறீர்கள் ?
கவிதையில் அதை மலரச்செயுங்கள்”
***
“மற்றுமொரு கட்டுரையில் சந்திப்போம்...”