9.ஆதலினால் காதலித்தேன்.! பொள்ளாச்சி அபி

.
"காத்திருந்தேன்
அவள் மனதினில்
இடம் பிடித்தேன்
மௌன புன்னகையை
ரசித்தேன்
அவள் நினைவுகளில்
திளைத்தேன்
அந்த நினைவுகளை
கவிதையாய் வடித்தேன் "--சங்கரன் அய்யா.

“கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக,நான் பலமுறை எதிர்பார்த்திருந்த..,கற்பனைகளை சுகப்படுத்திக் கொண்டிருந்த,கவிதைகளை எழுத வைத்துக்கொண்டிருந்த.., அந்த சந்தர்ப்பம்..,எனது உள்ளங் கையில் வைத்த இனிப்பாய்,தொட்டுவிடும் தூரத்தில் எனக்கு ஆசைகாட்டியது.”

சரோவின் வீட்டில் ஒரு அறையில்,அமர வைக்கப்பட்டிருந்த அந்த உருவத்தைப் பார்த்ததும் எனது சர்வநாடியும் ஒருமுறை துடித்து அடங்கியது.

நான் இதுவரை யாரை எனது கவிதைகளின் ஜீவஊற்று என நினைத்திருந்தேனோ.. அவள்.. அந்தத் தாகீரா அமர வைக்கப்பட்டிருந்தாள். அடர்த்தியான நீலத்தில் பாவாடையும்,வெளிர் நீலத்தில் தாவணியும் அணிந்தபடி தாகீரா அமர்ந்திருந்தாள்.அதிக ஒப்பனையில்லாத எளிமையான அலங்காரத்தில் அவள் இருந்தது மிக எழிலாகப் பட்டதெனக்கு.

“உன்னைத்தான் எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கிறாள்.”.சரோவின் குரல் எனக்கு பின்புறம் கேட்டது.

“ஊம்;..ஊம்..” ‘அதற்குப்பிறகு சரோவிற்கு என்ன பதில் கூறினேன் என்று தெரியவில்லை.பதிலாவது கூறினேனா.?’

என்னால் பார்வையை விலக்கிக்கொள்ள முடியவில்லை.நான் தாகீராவையே பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு ஆகாயமே இறங்கிவந்து எனக்கு முன்னால் தன்னைக் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பது போல இருந்தது எனக்கு.மனதுக்குள் ஏற்பட்ட படபடப்பும் எனக்கு இன்னும் அடங்கவேயில்லை.

திடீரென ஏற்பட்ட இந்த எதிர்பாராத சந்திப்பால்,நான் பல்வேறு உணர்ச்சிகளாலும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தேன்.எனது கால்கள் தரையில் ஊன்றியிருப்பது போலவும் இல்லை.

“ஹலோ..என்ன.., தலைக்குள்ள மின்னலா..?” சரோவின் குரல்தான் என்னைக் கலைத்தது.

அவளைத் திரும்பிப் பார்த்தேன்.அவள் முகத்தில் பெருமிதமான,ஒரு சிக்கலான விஷயத்தை,வெகு சுலபமாகத் தீர்த்துவிட்ட சந்தோஷம் தெரிந்தது.அதைப் பார்க்கும்போது எனக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

தாகீராவிற்கு அப்போதுதான் ஹலோ..சொன்னேன். “எப்படியிருக்கே..தாகீரா.?.” எனது குரலில்,வெகுநாட்களாய்ப் பிரிந்திருந்த இருவர்,மீண்டும் ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சி வெளிப்பட்டிருக்க வேண்டும்.

“நல்லாயிருக்கேன்.” முதன்முதலாய் அப்போதுதான் அவளது குரலைக் கேட்கிறேன்.என்னை வசீகரமான தனது எழிலால் அவள் கவர்ந்திருந்ததைப் போலவே,அவள் குரலும் என்னைக் கவர்ந்தது.

“இங்கே நீ எப்படி.?., சரோவை உனக்கு எப்படித் தெரியும்.?”

அதற்குப்பிறகு நாங்கள் பேசிக் கொண்டிருந்த ஒருமணி நேரத்தில்,எனக்கு தெரியவந்தது.., தனக்கென இருந்த சைக்கிளை, ஓட்டிக்கொண்டு அவ்வப்போது சும்மா ஜாலியாய் ஊர்சுற்றக் கிளம்பிவிடும் சரோ,முன்னரே ஒருநாள் என்னிடம் தாகீராவைக் குறித்து விசாரணை மேற்கொண்டதையும்,அப்போது நான் முழுமையாய் சொல்லியிராத தகவல்களை வைத்து,அவள் வீட்டிற்குச் சென்று,‘அந்தக் குடியிருப்பிலேயே இல்லாத’ யாரோ ஒருவரைத் தேடிவந்ததாகவும்,அவர் வீடு குறித்து தெரியாமல், கேட்க வந்ததாகவும்,அவள் வீட்டிற்கு சென்று அவளிடமும்,அவள் பெற்றோரிடமும் விசாரித்துவிட்டு,அந்த யாரோ ஒருவரைத் தேட தாகீராவையும் அழைத்துக் கொண்டு,அந்தக் குடியிருப்பில் சற்றுநேரம் அலைந்து கொண்டும் வந்திருக்கிறாள்.

‘இல்லாத’அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இறுதியில்,மீண்டும் அவள் வீட்டிற்குச் சென்று,பொதுவாய்ப் கொஞ்சநேரம் பேசிவிட்டு வந்திருக்கிறாள்.சம வயதுடையவர்கள் என்பதால் சுலபமாக நண்பர்களாகி விட்டார்கள்.அதுவும் சரோவுடன் பழகியவர்கள் அவளது நட்பை மிகவும் விரும்பவே செய்வார்கள் என்பது எனது அனுபவம்.அதனை அவள் தாகீரா விஷயத்திலும் மெய்ப்பித்தே வந்திருக்கிறாள்.

கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்த அவர்களது நட்பான பரிமாறல்களில், ‘சரோவின் திட்டப்படி’ என்னைக் குறித்தும் யதேச்சையான பேச்சுக்கள் துவங்கப்பட்டு,எனது சுபாவங்கள்,நடவடிக்கைகள்,குறிப்பாக கவிதை எழுதுவதையும்,அதற்கு காரணமாக தாகீரா இருப்பதையும்,எனது காதலையும் குறித்து..,தொடர்ந்த பேச்சுக்களால்,தாகீராவிற்கும் என்னை சந்திக்க வேண்டும் என்ற ஆவல், சரோவால் ஊட்டப்பட்டிருந்தது.அதன் விளைவே இந்த சந்திப்பு என்பதும்,இது நிறைவேறும் வரை எனக்கு தன்முயற்சி குறித்த தகவலையும் தெரிவிக்காமல் சரோ ‘ரகசியம்’ காத்துவந்ததும் மிகத் தெளிவாகப் புரிந்தது.

எனக்கு சரோவின் அந்த ‘மனம் தளராத விக்ரமாதித்ய’ முயற்சியின் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. “ரொம்ப தேங்ஸ் சரோ..” என்று நெகிழ்ந்தேன்.

அதற்குப்பிறகு,பள்ளிக் காலத்தில் தாகீராவைக் கண்டதும்,எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்தும் சில நினைவூட்டல்கள்,நடைபெற்ற சில நகைச்சுவைகள் என தாகீராவிடமும் கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.ஆனாலும் தாகீரா அந்த விஷயங்களில் மிகவும் ஈடுபாடு காட்டவில்லை.ஒருவேளை அப்போதைய எதுவும் அவளை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

தாகீரா எங்களுடன் இருந்தவரை அளவாகவே பேசினாள்.அதிராமல் சிரித்தாள்.கேள்விகளை முடிந்தவரை தவிர்த்தாள்.தப்பித் தவறிக்கூட தன் மீதான என்காதல் குறித்து அவள் ஒன்றுமே பேசவில்லை.ஒரு கட்டத்தில் பொதுவாய்ப் பேசிக் கொள்ள எதுவுமே இல்லாததுபோல,சில விநாடிகள் அமைதியாய்க் கழிந்தது.

அப்போதுதான் திடீரென நினைவு வந்தவளாய் சரோ கூச்சலிட்டாள்.. “ஏய்..இவன் நல்லாப் பாடுவான்டி..உன்னைப் பற்றிக்கூட பாட்டு எழுதி வெச்சிருக்கான்.பாடச் சொல்லு..,” சரோ தனது ஆர்வமிக்க பேச்சால் தாகீராவிற்கும்,எனக்கும் ஒரே சமயத்தில் நெருக்கடி கொடுத்தாள்..எனக்கு திக்கென்றது.

தாகீராவின் கண்களில் அதீத எதிர்பார்ப்பு தெரிந்தது.

இப்போது நான் பாடமாட்டேன் என்று சொல்லி,அவளின் எதிர்பார்ப்பை முறியடிக்க விரும்பவில்லை.நானும் பாடிவிடவே ஆசைப்பட்டேன்.ஆனால்,

எனது உள்ளக் கிடக்கையை முழுதாய்க் கொட்டிவிடும் வகையில்,அந்தப்பாடல் இருக்கவேண்டும் என்றும்,நாம் இதுவரை எழுதிய பாடல்களில் அதுபோன்ற பாடல் எது இருக்கிறது.? என்று என் மனதுக்குள் ஒரு மிகவேகமான
‘ரீ வைண்டு’ ஓடியது.நான் பாடத்தயாரானேன்.

ஆதலினால் காதலித்தேன்..மீண்டும் தொடர்கிறேன்.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி.B +ve (30-Aug-12, 1:22 pm)
பார்வை : 270

மேலே