இயக்கங்கள்....
எங்கோ திரிந்த ஈக்கள்...
உன் மேல் அமர்ந்து
உன் முகம் சுரண்டிச்
சுவாசிக்கின்றன...
என் கைகளால் விரட்டுகிறேன்
நான்.
நேற்று உனக்குச் சகுனம்
தவறாய்ச் சொல்லிய
பல்லி ஒன்று
சுவரில் அமர்ந்து
தலைகீழாய்ப்
பார்த்துக் கொண்டிருக்கிறது
உன்னை.
இரவெல்லாம் தெரு முனையில்
அழுத நாய் ஒன்று
குரல் களைத்து...
வாலாட்டி நிற்கிறது வீட்டருகில்.
மரக்கிளையில் அமர்ந்த காகம்...
வான் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறது
உன்னிடம்.
இவையெல்லாம் -
எனக்குத் தோன்றினாலும்...
இயல்பு மாறாமல்...
வழக்கம்போல்
உன்னிடம் காசு கேட்டு
கை நீட்டி நிற்கிறாள்
நம் தெருவில் அலையும்
மனம் பிறழ்ந்த பெண்.