ஏக்கப்பாட்டு- ஒரு ஏகாந்தப் பாட்டு

மஞ்சக்கடுதாசி போட்டேன்
மறுபடியும் வருவீரென்று
மஞ்சத்தில் வேறொருத்தி வச்சிகிட்டு
மறந்துதான் போய்ட்டீரே.

உடும்பு பிடியழகா
கறுப்பு களிறழகா
வாயில் தோரணமழகா-உன்
வாய் மீசையழகா.

மூங்கில் காட்டுக்குள்ள
முன்னொரு நாள் கூடிக்கிடந்தோம்
காடு தீப்பிடித்ததே
நாம் உரசிக்கிடந்ததாலே.

கள்ளிக் காட்டுக்குள்ள
சுள்ளி நான் பொறுக்கையிலெ—உன்
கட்டுமர உடம்புநெனைப்பு கொல்லுதய்யா
காற்றுவந்து காதோரம் காதல்கதை சொல்லுதய்யா.

நெறிஞ்சி காட்டுக்குள்ள
நீ கூட இருந்தப்ப
பஞ்சாத்தான் இருந்ததையா
பாழும் முள் குத்தலியே.

நிறைஞ்ச மைதானத்தில
நீ கூட இல்லாதப்ப
முள்ளுபோல குத்துதையா இலவம் பஞ்சுகூட
கசப்பா கசக்குதையா கரும்பு சாறுகூட.

என்ன நான் குறவச்சேன் ஏம்பிரிஞ்சி போனீர்
சொன்னாதானே தெரியும் ஏஞ் சொக்கவச்ச பன்னீர்
கரிசல் காட்டு நிலம்போல காய்ஞ்சி கிடக்கு மனசு
நீ வந்து குடிக்கதானே காய்த்து தொங்குது ரெண்டு இளசு

கஞ்சி கலயம் தூக்கிக்கிட்டு கழனிவழி போகயில
நெஞ்சுக் குலை நடுங்குது
நீ இல்லாம கஞ்சி கலயம் ஏங்குது.

மானூர் சந்தையில மாடு வாங்க போகயில
மறைவு பக்கம் போனதை மறந்து புட்டேளா
மந்திரிச்சு ஏதாச்சும் அவ செஞ்சுபுட்டாளா

மஞ்சக்கடுதாசி போட்டேன்
மறுபடியும் வருவீரென்று
மஞ்சத்தில் வேறொருத்தி வச்சிகிட்டு
மறந்துதான் போய்ட்டீரே.

விட்டு விட்டு போனாலும் விடமாட்டா இந்த சிறுக்கி
செத்தாலும் சாவாள் உன்ன விட்டு சாகாள் பொல்லாதகிறுக்கி
கட்டையில் போனாலும் வேகாது இந்த தேகம்
காலம் பூரா பேசும் நம் காதலை இந்த தேசம்.


சுசீந்திரன்.

எழுதியவர் : சுசீந்திரன் (31-Aug-12, 9:02 pm)
பார்வை : 183

மேலே